பள்ளியில் நுழையும் போது முதலில் வலது காலை எடுத்து வைத்து,
بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ.* اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் என்று ஓதிவிட்டு “அல்லாஹும் மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க” என்று ஓதிக் கொள்ளவேண்டும்.
பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தால் (துவங்குகிறேன்). அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும். யா அல்லாஹ்! உனது ரஹ்மத்தின் (அருளின்) வாசல்களை எனக்காகத் திறந்து விடுவாயாக!”
பள்ளியை விட்டும் வெளியேறும் போது முதலில் இடது காலை எடுத்து வைத்து,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பள்லிக” என்ற துஆவை ஓத வேண்டும்.
பொருள்: யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் உன்னிடம் உனது அருளை (பேரருளை) வேண்டுகிறேன்.”
பள்ளிவாசலுக்குள் நுழைந்து அங்கே அமரும் முன்பாக இரண்டு ரக்அத் நஃபில் ‘தஹிய்யத்துல் மஸ்ஜித்’ – காணிக்கை நஃபில் தொழுவது முஸ்தஹப்.
சிரித்துப் பேசியபடி பள்ளியினுள் நுழையாதீர்கள். இது ஒழுக்கக் குறைவான செயலாகும். இறையச்சத்துடன் பள்ளியில் நுழைய வேண்டும்.
உள்பள்ளியில் உலக சம்பந்தமான பேச்சுக்களைப் பேசாதீர்கள். அதனால் நாற்பது நாட்கள் இபாதத்களின் நன்மைகள் அழிக்கப்படும்.
மஸ்ஜிதில் கூச்சலிடுவது, கேலி கிண்டல் செய்து விளையாடுவது, வியாபாரம் செய்வது, சண்டை செய்வது ஆகியவை மஸ்ஜிதை அவமதிக்கும் காரியங்களாகும்.
“இறுதி காலத்தில் எனது சமூகத்தவர்களில் சிலர் பள்ளிக்கு வருவார்கள்; அங்கே வட்டமிட்டு அமர்வார்கள்; உலக விஷயங்களைப் பேசுவார்கள். மேலும் அவர்கள் உலகையே நேசிப்பவராகவும் இருப்பார்கள். நீங்கள் அவர்களுடன் அமராதீர்கள்; அல்லாஹ்வுக்கு அவர்களின் தேவை ஏதுமில்லை. அல்லாஹ் அவர்களை வெறுக்கிறான்” என்ற நபி (ஸல்) அவர்களின் திருவாக்கை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.
பள்ளிவாசலின் பரிசுத்தத் தன்மையில் அக்கறையாக இருங்கள். அங்கே அசுத்தம் செய்ய இடமளிக்காதீர்கள். அங்குள்ள குப்பை செத்தைகளை அப்புறப்படுத்துங்கள். அங்கே நறுமணப் பொருட்களை உபயோகியுங்கள், குறிப்பாக ஜூம்ஆ நாளன்று இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இவை சொர்க்கத்தை வழங்குகின்ற நற்செயல்களாகும். “பள்ளிவாசலின் குப்பை கூளங்களை அகற்றி அதைச் சுத்தப்படுத்துவதானது அழகுமிகுந்த கண்களுடைய சொர்க்க கன்னியரின் மஹராக உள்ளது” என பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார்கள்.
பாங்கு தொழுகை முதலியவை அதனதன் நேரங்களில் சரியானபடி நடைபெற ஆவன செய்யுங்கள்.
இறையச்சமுள்ள, தகுதி மிகுந்த, தீன் சேவையைக் குறிக்கோளாகக் கொண்ட நல்லோர்களை இப்புனிதப் பணிகளுக்கு நியமனம் செய்யுங்கள். இத்தகையோர் மார்க்க விஷயங்களிலும், நற்குணத்திலும் பேணுதல் கொண்டு விளங்க வேண்டும். இவர்களைக் கண்ணியப்படுத்துவதும், இவர்களின் உலகப் பிரச்சினைகளுக்குரிய தேவைகளை நிவர்த்தி செய்வதும் உங்கள் கடனாகும். அவர்களைக் கொண்டு மக்கள் தர்பியத் செய்யப்பட ஏற்பாடு செய்ய வேண்டும்.
மஸ்ஜிதின் நிர்வாகப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் நேர்மை, திறமை, மார்க்க விஷயங்கள் பற்றிய அறிவு ஆகியவைகளில் சிறந்து விளங்குபவராக இருக்க வேண்டும். எனவே இதுபோன்ற பொதுப் பதவிகளில் அமர்த்தப்படுகின்ற நபர் இஸ்லாமிய ஷரீஅத் சட்ட திட்டங்களைக் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
பள்ளி நிர்வாகப் பொறுப்பை ஏற்பவர் ‘ஃபாஸிக்’ ஆக, விலக்கத்தக்க (ஹராம்) தொழில் செய்பவராக இல்லாமல் இருக்கும்படி கவனம் செலுத்த வேண்டியது ஜமாஅத்தாரின் கடமையாகும்.
“அல்லாஹ் வழங்கிய பரிசுத்தத் திருமறையையும், பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையையும் நன்கு கற்றறிந்த ஒருவர் ஜமாஅத்தில் இருப்பது நல்லபடி தெரிந்திருந்தும், வேறொருவரை பள்ளி பொறுப்பில் அமர்த்துபவர், திட்டமாக அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் முஸ்லிம் ஜமாஅத்தார் அனைவரையும் ஏமாற்றியவராகிறார்.”.
– தப்ரானி
அறவே விபரமற்ற சின்னஞ்சிறு பிள்ளைகளை பள்ளியினுள் அழைத்துப் போகாதீர்கள். அவர்கள் அங்கே அசுத்தப்படுத்தவும், பள்ளியின் புனிதம் புரியாத காரணத்தால் தொழுகையாளிகளுக்கு இடையூறு செய்ய ஏதுவாகும்.
ஓரளவு விபரம் புரிந்த மஸ்ஜிதின் மாண்பையுணர்ந்த சிறுவர்களை உங்களுடன் அழைத்துச் செல்வதை வழமைப்படுத்துங்கள்.
ஜமாஅத் தொழுகையின் போது ஸஃப்ஃபுகள் வரிசையாக, நேராக, தோளோடு தோள் இணைந்திருக்கும்படி இடைவெளியின்றி நிற்கும்படி கவனிக்க வேண்டும்.
முன்வரிசை நிரம்பும் முன்பே இரண்டாவது வரிசையை ஆரம்பிக்காதீர்கள். “வரிசையைச் சேர்ப்பவரை அல்லாஹ் சேர்க்கின்றான் – அதைப் பிரிப்பவரை அல்லாஹ் பிரித்து விடுகின்றான்”.
பள்ளியில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காதீர்கள். தள்ளிக்கொண்டும், தாண்டிக்கொண்டும் அங்கே முன்னேறுவது, பிறர் சங்கடப்படும் அளவுக்கு அழுக்குத் துணிகளை உடுத்தி வருவது, வாய் நாற்றத்துடன் வருவது, சப்தமிட்டு கொட்டாவி, ஏப்பம் விடுவது, தொழுகையில் நின்றதும் இருமத் துவங்குவது, கனைப்பது, ஆடவும், அசையவும் செய்வது, இவை யாவும் தவிர்க்கப்பட வேண்டும். நம்மால் பிறருக்கு எந்த வகையிலும் இன்னலோ, இடைஞ்சலோ ஏற்பட்டு விடலாகாது.
மார்க்க அறிவு வளர்வதால்தான் பள்ளிவாயில்கள் புத்துயிர் பெறுகின்றன. ஒழுக்கம் பரவுகிறது; தீன் நிலை பெறுகிறது. ஆதலினால் பள்ளிவாசல்களிலும் அதன் சார்பாகவும் அவசியம் குர்ஆன் மத்ரஸாக்களை, தீனிய்யாத் பாடசாலைகளை நிறுவுவதுடன் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை தவறாது அங்கே அனுப்பி மார்க்கக் கல்வி பயில ஆவன செய்ய வேண்டும்.
