இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

الم ﴿١﴾ أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ ﴿٢﴾

وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ ﴿٣﴾

அலிஃப் லாம் மீம், மனிதர்கள், ‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ என்று கூறினால், (அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.

— சூரா அன்கபூத் : 1-3

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டு விட்டதால், உலகில் எந்தச் சோதனையும், சிரமமும் தங்களை தொட்டுவிடாது என எண்ணிக் கொள்ளக்கூடாது.

இறை மறுப்பாளனுக்கும் இவ்வுலகில் இறைவன் உதவி புரிகிறான். இறைவனுக்கு வழிப்பட்டு நடப்பவர்களுக்கும் இறைவன் உதவி புரிகிறான்.

மறுமையில் அவ்வாறல்ல; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட விசுவாசிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு கூலி கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வை இவ்வுலகில் நிராகரித்து வாழ்ந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

மனிதர்களைச் சிரமப்படுத்திப் பார்ப்பதற்காக இறைவன் மனிதனைச் சோதிப்பதில்லை. மாறாக, சோதனையின் மூலமாக மனிதனை உயர்ந்த தகுதியை அடையச் செய்கிறான்.

சோதனையைத் துன்பம் என்று விளங்கி பொறுமையை கைவிட்டு தவறான வழியில் அதை நீக்க முயற்சித்தால் அம்மனிதன் இறைவனுடைய அன்பைவிட்டு வெகுதூரம் ஆகிவிடுகிறான்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோர்க்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக!

— சூரா அல் பகரா : 155

நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபித்தோழர் ஹஜ்ரத் உபாதத் இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் தங்கள் மகனிடம்:

‘மகனே! உனக்கு வரவேண்டிய சோதனைகளை விட்டும் நீ தப்பிக்கவே முடியாது. உனக்கு என்று முடிவு செய்யப்படாத எந்தச் சோதனையும் உன்னை வந்து அடையாது. இதை நீ உறுதியாக நம்பாதவரை ஈமானின் உண்மையான ருசியை நீ சுகிக்க முடியாது’ என்று கூறினார்கள்.

— அபூதாவூத்

பல்வேறு சங்கடங்கள், எதிர்பாராத இழப்புகள், நோய், விபத்து, வறுமை, ஆகியவற்றுடன் கூடியதே இவ்வுலக வாழ்க்கை. சோதனைகளைக் கொண்டு துவண்டுவிடாமல் பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம், விவேகம் ஆகிய குண ஒழுக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலமாகவே இவ்வுலகிலும், மறுவுலகிலும் வெற்றி பெற முடியும்.

எந்தக் கவலையையும் இறைவணக்கத்தின் துணை கொண்டு தான் தீர்க்க முடியும்.

இவ்வுலகம் சுகம் அனுபவிக்கும் இடம் என்று நினைத்தால், எல்லாமே துன்பமே. மறுமைக்கான நன்மைகளை சேகரிக்கும் இடம் இவ்வுலகம் என்று நினைத்தால் அனைத்து துன்பங்களையும் சகித்து கொள்ள முடியும்.

அல்லாஹ் குர்ஆனில்,

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۖ مَسَّتْهُمُ الْبَاسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا

حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப் பட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது (என்று நாம் ஆறுதல் கூறினோம்).

— சூரா அல் பகரா : 214

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் சோதிக்கப்படாமல் இருந்ததில்லை. இதோ! ஸஹாபாக்கள் சந்தித்த பெரும் பெரும் சோதனைகளையும் அதை அவர்கள் எதிர் கொண்ட விதமும் நமக்கு பெரும் படிப்பினையாகும்.

உஹது யுத்தம் முடிந்துவிட்ட போது ‘ஹம்னா’ என்ற ஸஹாபாப் பெண்மணி நபி (ஸல்) அவர்களை மதீனா வரும் வழியில் சந்தித்தார். அப்பெண்ணிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் மரண செய்தி கூறப்பட்டது.

அதற்கு அவர், ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்) என்று கூறி, அவருக்காக பாவமன்னிப்புத் தேடி துஆ செய்தார்.

பின்பு அப்பெண்ணின் தாய்மாமா ஹம்ஜா (ரலி) அவர்களின் மரண செய்தியும் சொல்லப்பட்டது. அதற்கும் அவர், ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ என்று கூறி அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடினார்.

பின்பு அவரது கணவர் இப்னு உமைர் (ரலி) அவர்களின் மரண செய்தி கூறப்படவே, அவருக்காகவும் பாவமன்னிப்புத் தேடினார்.

இவை அனைத்தையும் அல்லாஹ்வின் பொருத்தம் கருதி தாங்கிக் கொண்டார்கள். புலம்பியோ அழுது பிறரிடம் முறையிட்டோ தன் துக்கத்தை வெளிப்படுத்தவில்லை.

அல்லாஹ்வுக்காக நாம் இருக்கிறோம்; அல்லாஹ்வுக்காக பிரிகிறோம் என்பதில் முழு எகீன் ஸஹாபாக்களுக்கு இருந்தது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவ்வப்போது சோதனைகள் வந்த வண்ணமிருக்கும். சில நேரங்களில் அவர்களின் குழந்தைகள் மீது வருகின்றது. சில நேரங்களில் அவர்களது செல்வம் அழிந்துவிடுகிறது. இறுதியில் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது அவனது செயலேட்டில் பாவமேதும் இல்லாத நிலையில் அவன் சந்திக்கிறான்.

துன்பத்தின்போது பிலால்(ரலி):

நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை போதித்த ஆரம்ப காலத்தில், மக்காவில் உமைய்யா இப்னு கலப் என்ற முஷ்ரிக்கானவன் நபி(ஸல்) அவர்களை கடுமையாக எதிர்த்து வந்தான்.

அவனிடத்தில் கருப்பு இனத்தைச் சேர்ந்த ‘பிலால்’ என்பவர் அடிமையாக இருந்து வந்தார். நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை செவிமடுத்த பிலால் அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்டார்.

இவ்விஷயம் அவர்களின் எஜமானனாக இருந்த உமைய்யத் இப்னு கலப் என்பவனுக்குத் தெரிய வந்தது. அவன் பிலால் அவர்களிடம், ‘தான் வணங்கும் சிலையை வணங்க வேண்டும் என்றும் இஸ்லாத்தை விட்டுவிட வேண்டும்’ என்றும் கூறினான்.

அதனை மறுத்த பிலால் அவர்கள், ‘அல்லாஹ் ஒருவனே என் இறைவன்’ என்று கூறினார்கள்.

இதில் ஆத்திரமடைந்த உமைய்யா, பிலால் அவர்களை கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். பிலால் அவர்களை நடுப்பகலின் கடும் வெயிலில், கொதிக்கும் பாலைவன மணலில் மல்லார்த்தி படுக்க வைத்து அவர்கள் அசையமுடியாதவாறு நெஞ்சின் மீது பெரும் கல்லைத் தூக்கி வைத்து விடுவான். அப்போதும் பிலால் (ரலி) அவர்கள் ‘அஹதுன் அஹதுன்’ (அல்லாஹ் ஒருவனே) என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

மாலை வேளையில் பிலால் அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் சாட்டையால் அடிக்கப்படுவார்கள். அந்தக் காயங்களுடனேயே மறுநாளும், கொதிக்கும் மணலில் கிடத்தப்பட்டு அதேபோல் வேதனை செய்யப்படுவார்கள்.

ஏனெனில் வேதனை தாங்க முடியாமல் பிலால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதே உமைய்யாவின் யோசனை.

ஆனால், பிலால் அவர்களோ தொடர்ந்து அல்லாஹ் ஒருவன்! அல்லாஹ் ஒருவன்! என்று, ஏகத்துவத்தைக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த உமைய்யாத், பிலால் அவர்களைக் கயிற்றால் கட்டி மக்காவின் சிறுவர்கள் வசம் ஒப்படைத்து விட்டான். அச்சிறுவர்கள் பிலால் அவர்களை மக்காவின் தெருக்களில் இழுத்துக் கொண்டே செல்வார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் இந்தநிலைதான் என்று மக்களுக்குக் காட்டுவதற்காக இவ்வாறு வேதனை செய்யப்பட்டார்கள்.

அப்போது பிலால் அவர்கள் மூர்ச்சையாகிக் கிடப்பார்கள். எப்போதெல்லாம் சுயநினைவு வருகிறதோ அப்போதெல்லாம் ‘அல்லாஹ் ஒருவன்; அல்லாஹ் ஒருவன்’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சில சமயங்களில் அபூஜஹீல் என்ற இன்னொருவன், பிலால் அவர்களை அடித்துத் துன்புறுத்துவான். சில வேளைகளில் உமைய்யாத் அடித்துத் துன்புறுத்துவான். இருவரும் முறை வைத்து மாறிமாறி பிலால் அவர்களை வேதனை செய்து கொண்டே இருந்தார்கள்.

அடித்தவர்கள் தளர்ந்தார்களே தவிர, பிலால் (ரலி) அவர்களின் நெஞ்சுறுதி தளரவில்லை.

இக்கொடுமைகளை எல்லாம் நபி(ஸல்) அவர்கள் வழியில் செல்லும்போது கனத்த மனதோடு பார்த்துக் கொண்டே செல்வார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கவலையை அறிந்த, ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமைய்யாவிடமிருந்து பிலால் அவர்களை பெரும் விலை கொடுத்து வாங்கி உரிமை விட்டுவிட்டார்கள். அதன்பின் பிலால்(ரலி) அவர்கள் வாழ்நாள் முழுவதும் நபி(ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்வதிலேயே வயதைக் கழித்தார்கள்.

தன் ஈமானை – அல்லாஹ்வின் மீது இருந்த விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொள்ள இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டார்கள்.

துன்பத்தை தாங்கிய கப்பாப் (ரலி):

மக்காவில் காஃபிரான ஒரு பெண்ணின் அடிமையாக இருந்தவர் தான் கப்பாப் (ரலி) என்ற ஒரு நபித்தோழராவார்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே இவர் இஸ்லாத்தை தழுவியராவார். அதனால் அவரின் எஜமானராக இருந்த அந்த முஷ்ரிக்கான பெண், கப்பாப் (ரலி) அவர்களை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கினாள்.

இஸ்லாத்தை விட்டுவிட வேண்டும், மேலும் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கக் கூடாது என்று கூறிய அப்பெண், கப்பாப் (ரலி) அவர்களை உடல் முழுவதும் இரும்புக் கவசம் அணியச்செய்து கடும் வெயிலில் கிடத்தி வேதனை செய்வாள்.

சில சமயங்களில் கப்பாப் (ரலி) அவர்கள் அரேபியப் பாலைவனத்தின் சுடுமணலில் உடைகளிலின்றி வெறும் மேனியாகக் கிடத்தி வைக்கப்படுவார்கள். அதனால் அவர்களுடைய இடுப்பு வரையுள்ள சதை உருகிப் பிய்ந்து விட்டிருந்தது.

சில சமயங்களில் இரும்புத் துண்டைச் சூடுபடுத்தி கப்பாப் (ரலி) அவர்களின் தலையில் சூடிடுவாள்.

ஹஜ்ரத் கப்பாப் (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் நீண்ட காலம் இவ்வித கஷ்டங்களை அனுபவித்தார். பிறகு தான் விலைக்கு வாங்கப்பட்டு உரிமை விடப்பட்டார். அதற்குப்பின் நபி (ஸல்) அவர்களின் வீட்டுத் திண்ணையிலேயே தம் வயதை கடத்தினார்.

பின்னால் காலத்தில், அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை கப்பாப் (ரலி) அவர்களிடம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அடைந்த துன்பங்களைக் குறித்து விசாரித்தார்கள்.

அதற்கு கப்பாப் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் உமர் அவர்களிடம், ‘என்னுடைய இடுப்பையும் முதுகையும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறி தம் சட்டையைத் தூக்கி காண்பித்தார்கள்.

அதனைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹு அக்பர்! இதுபோன்ற முதுகை நான் பார்த்ததில்லை’ என்று கூறி அழுதார்கள்.

“நபி(ஸல்) அவர்களை நான் சந்தித்தற்காக நெருப்புக் கங்குகளின் மீது என்னைக் கிடத்தி வைத்து இழுப்பார்கள். அதனால் என்னுடைய உடலிலுள்ள சதை உருகி இரத்தம் வழிந்தோடி அந்த நெருப்பை அணைத்துவிடும்” என்று கப்பாப் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதனைக் கேட்ட ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார்கள்.

அதற்குக் கப்பாப் (ரலி) அவர்கள், ‘இவ்வுலகில் நான் பட்ட துன்பங்களுக்குரிய பிரதிபலன் இவ்வுலகிலேயே கிடைத்துவிடக் கூடாதே!’ என்று தாம் கவலைப் படுவதாகக் கூறினார்கள்’.

ஹஜ்ரத் கப்பாப் (ரலி) அவர்கள் இறந்தபின் கூஃபா நகரில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

ஹஜ்ரத் கப்பாப் (ரலி) அவர்களின் அடக்கஸ்தலத்தின் அருகே ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் சென்றால்,

“அல்லாஹுதஆலா கப்பாப் அவர்களுக்குக் கிருபை செய்வானாக! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டார். இன்னும் மறுமைநாளின் கேள்விகணக்கிற்கு பயந்து தமக்குக் கிடைத்ததைக் கொண்டு போதுமாக்கி தன்னுடைய எஜமானான அல்லாஹ்வைக் கொண்டு திருப்தியுற்ற நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்” என்று கூறுவார்கள்.

கடும் பசியில் ஸஹாபாக்கள்:

நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நபி(ஸல்) அவர்கள், முன்னூறு நபர்கள் கொண்ட ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அந்தச் சமயத்தில் கடும் வறுமை இருந்ததால் ஒரு பை பேரீச்சம்பழமே எங்கள் அனைவருக்கும் உணவாக இருந்தது.

ஒவ்வொரு நாளும் நபர் ஒன்றுக்கு ஒரு பேரீச்சம் பழம் வீதம் பங்கிடப்பட்டு பிறகு தண்ணீர் குடித்து பசியைத் தீர்த்துக் கொண்டோம் என்று ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு மக்களிடம் கூறிக் காட்டினார்கள்.

அப்போது ஒருவர், ‘ஒரு பேரீச்சம்பழத்தை வைத்து ஒரு நாளின் பசியை எப்படிப் போக்கிக்கொண்டீர்கள்?’ என்று வினவினார்.

அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘அந்த ஒரு பேரீச்சம் பழமும் இல்லாமலிருக்கும்போது தான் அதன் அருமை தெரியும். அந்த நேரத்தில் பசிக் கொடுமையால் மரத்தின் காய்ந்த இலைகளைப் பொறுக்கித் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட்டுப் போரில் கலந்து கொண்டோம்’ என்று பதில் கூறினார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ

(துன்பங்களை) பொறுமையுடன் சகித்து எவர் நற்காரியங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.

— சூரா ஹூது : 11

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ அதற்குரிய கூலியும் (நன்மை) அதேபோன்று அதிகமாக இருக்கும்.

— திர்மிதீ

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version