இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரிந்து அல்லாஹ்வின் சமூகத்திற்குச் சென்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, நபி (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் நோய்வாய்படுகிறார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்து உடல்நிலை பற்றி விசாரித்துச் சென்றார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களின் அருகில் இருந்து, பணிவிடை செய்ய அவர்களின் தோழியும், அபூபக்கர் (ரலி) அவர்களின் மனைவியுமான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் உடன் இருந்தார்கள்.

அலி (ரலி) அவர்களின் சகோதரர் ஜாஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் மூத்தா போரில் ஷஹீதான பிறகு அன்னாரின் துணைவியார் அஸ்மா (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுமணம் புரிந்திருந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களும், அஸ்மா (ரலி) அவர்களும் மிகவும் நேசமுள்ள தோழிகளாக இருப்பார்கள்.

இப்போது, ஃபாத்திமா (ரலி) அவர்களின் மரண நேரத்தை அறிந்து கொண்ட அஸ்மா (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் அருகில் இருந்து ஆறுதலாக உடனிருந்தார்கள்.

அப்போது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களை நோக்கி ‘அஸ்மாவே! இப்பொழுது நான் இருக்கும் நிலைமையை நீ பார்க்கிறாய்’ என்று கவலையோடு சொன்னார்கள். அதாவது நான் இறந்து போகும் நிலையில் இருக்கிறேன் என்று சூசகமாக சொன்னார்கள்.

பிறகு பெண்களுக்கு (சந்தூக்) ஜனாஸா பெட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி இருவரும் பேசிக்கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்கள், ‘அஸ்மாவே! இப்பொழுது இறந்தவர்களை எடுத்துச் செல்லும் முறை எனக்கு திருப்தியாக தோன்றவில்லை. மய்யித்தைக் பலகையின் மீது வைத்து மேலே ஒரு துணியைப் போர்த்தி விடுகின்றனர். பெண்களுக்கும் இதே நிலை தான். அவ்வாறு கொண்டு செல்லும் போது மய்யித்தின் உடல் அமைப்பு தெளிவாகத் தெரிகிறது!’ என்றார்கள்.

அதற்கு, அஸ்மா (ரலி) அவர்கள், ‘ஆம்!’ எனக் கூறி விட்டு, ‘அல்லாஹ்வின் தூதரின் அருமை புதல்வியே! நான் அபீஸீனியா (எத்தியோப்பியா) நாட்டில் இருக்கும் போது ஜனாஸா பெட்டியைப் பார்த்திருக்கிறேன்! உங்களுக்கு விருப்பமானால் அது போலவே இப்பொழுது செய்து காட்டுகிறேன்’ என்றார்கள்.

(இவர்கள் அபீஸீனியாவுக்கு முதல் ஹிஜ்ரத் செய்து அதன்பின் மதீனாவுக்கு இரண்டாவது முறையாக ஹிஜ்ரத் செய்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் தமது முதலாம் கணவர் ஜாஃபர் (ரலி) அவர்களுடன் அபீஸீனியாவில் சில காலம் தங்கி இருந்தார்கள் ).

ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதை செய்து காட்டும்படி கூறினார்கள். உடனே ஒரு கட்டிலைக் கொண்டு வரச் சொன்ன அஸ்மா அவர்கள் அதன் இரு பக்கத்திலும் கட்டுவதற்காக பேரீச்ச மரத்துப் பச்சை மட்டைகளை வெட்டி வரும்படி ஏவினார்கள். பிறகு அதை அமைத்து ஒவ்வொரு கிளை மட்டையின் இரண்டு நுனிகளையும் வளைத்து பாதி வட்ட வளைவைப் போலச் செய்தார்கள். இந்த இரண்டு நுனிகளையும் கட்டிலில் இரண்டு ஓரங்களோடு சேர்த்துக் கட்டினார்கள். பிறகு மேல்புறத்தில் ஒரு துணியைப் போட்டு மூடிக் கட்டினார்கள்.

“‘இந்த முறை முழுமையாக மூடும் முறையாக இருக்கும். இப்போது, யாரும் மய்யித்தைப் பார்க்க முடியாது’ என்று கூறினார்கள்.

இந்த ஜனாஸா பெட்டியைப் பார்த்த மாத்திரத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு, ‘இது நன்றாக இருக்கிறது இந்த முறை மிகவும் அழகாக இருக்கிறது. இதில் வைத்து மய்யித்தை எடுத்துச் சென்றால் இறந்தவர் ஆணா? பெண்ணா? என்று எவரும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.’ என்று கூறிவிட்டு , ‘இவ்வாறு தான் எனது ஜனாஸாவையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், நீயும் என் கணவர் (அலி) அவர்களும் தான் என்னைக் குளிப்பாட்ட வேண்டும், வேறு எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது!’ என்று தங்களின் இறுதி சாசனத்தை அஸ்மா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

பின்னர், ஓரிரு நாட்களில் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறைந்த செய்தியை கேள்விப்பட்டு, அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் குழுமத் தொடங்கினார்கள்.

வீட்டின் ஓரிடத்தில் அமர்ந்து ஃபாத்திமா (ரலி) அவர்களின் வஸியத்தை நிறைவேற்ற, அஸ்மா (ரலி) அவர்கள் அபீசீனியாவில் கண்டதுபோல், மய்யித் கொண்டு செல்லும் சந்தூக்கை வடிவமைப்பு செய்ய ஆரம்பித்தார்கள்.

இறுதியாக குளிப்பாட்டும் நேரம் வந்த போது, அலி (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா (ரலி) அவர்களின் இறுதி வஸிய்யத்தைக் கூறி அலி (ரலி) அவர்களோடு குளிப்பாட்ட இணைந்து கொண்டார்கள்.”

அப்போது, அங்கே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வருகை தந்து குளிப்பாட்ட அனுமதி கேட்டார்கள். அஸ்மா (ரலி) அவர்கள் உள்ளே விட மறுத்து விட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் தம் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘தந்தையே ஃகஸ்அமிய்யாக் கோத்திரத்தின் இந்தப் பெண்மணி (அஸ்மா) அண்ணலாரின் மனைவியான என்னை, அண்ணலாரின் மகளான ஃபாத்திமா அவர்களை குளிப்பாட்ட அனுமதிக்காததோடு, இதுவரை எவருக்கும் செய்யாத புதுமையான சந்தூக் ஒன்றையும் தயார் செய்து வைத்திருக்கிறார்! அதைப்பற்றி அவரிடம் கேளுங்கள்!’ என்று முறையிட்டார்கள்.

அப்போது, அபூபக்கர் (ரலி) அவர்கள், ‘அண்ணலாரின் மனைவியான ஆயிஷாவை, அண்ணலாரின் மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களை குளிப்பாட்ட அனுமதிக்காததோடு, வெளியே செல்லுமாறு கூறி விட்டாயாமே! மேலும், இதுவரை எவரும் செய்யாத புதுவிதமான சந்தூக் ஒன்றையும் தயார் செய்து வைத்திருக்கிறாயாமே!’ என்று விபரம் கேட்டார்கள்.

அதற்கு, நடந்த விபரத்தைக் கூறிய அஸ்மா (ரலி) அவர்கள், ‘இது ஃபாத்திமா (ரலி) அவர்களின் (வஸிய்யத்) மரண சாசனம்!’ என்றார்கள்.

அதைக் கேட்ட, கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மகளார் உமக்கு ஏவியதைப் போன்றே நீ செய்து கொள்!’ என்று கூறி விட்டார்கள்.

அது போன்றே, ஃபாத்திமா (ரலி) அவர்கள் குளிப்பாட்டப்பட்டு, அந்த சந்தூக்கில் வைத்து மண்ணறைக்கு எடுத்துச் சென்று (இரவில்) நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.”

இந்தச் செய்தியை அறிவிக்கும் ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் உம்மு ஜஃபர் (ரலி) ஆகியோர், ‘மேற்கூறிய இந்த அமைப்பில் முதன் முதலாக ஃபாத்திமா (ரலி) அவர்களே எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

சிறிது நாட்களுக்குப் பின்னர் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் இறந்த போது இதைப் பின்பற்றியே எடுத்துச் செல்லப் பட்டார்கள்.

பின்னர், நாளடைவில் இந்த நடைமுறையே அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டது.

முதன்முதலாக ஜனாஸா கொண்டு செல்லும்போது போர்வை போர்த்தப்பட்டது அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு தான்!’

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

“எனது மகள் ஃபாத்திமா (ரலி) எனது ஈரக்குலையின் துண்டாவார்.”

யா அல்லாஹ்! அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு கிருபை செய்வாயாக! ஆமீன்!!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version