இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

உயிரினங்கள் படைக்கப்படுவதற்கு முன் பூமி முழுவதும் நீரால் நிரம்பியிருந்தது. அதன் ஓரிடத்தில் நுரை தோன்றியது. பிறகு அது நாளடைவில் விரிந்து கொண்டே சென்று நிலமாக மாறியது. அந்த நுரை தோன்றிய இடத்தில்தான் ‘கஃபத்துல்லாஹ்’ நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَإِنَّهُ الْحَقُّ مِن رَّبِّكَ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

“ஆகவே, (நபியே!) எங்கிருந்து நீர் புறப்பட்டாலும் (புனிதப்பள்ளி ஆகிய கஃபா) மஸ்ஜிதுல் ஹரமின் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இன்னும், நிச்சயமாக இதுதான் உம் இரட்சகனிடமிருந்துள்ள உண்மையாகும். மேலும், நீங்கள் செய்பவற்றைப் பற்றி அல்லாஹ் பாராமுகமானவன் அல்லன்.”

– சூரா அல் பகரா: 149

அல்லாஹுதஆலா ஒரு முஃமினுக்கு உலகத்தில் வழங்கும் பெரும் பாக்கியங்களில் ஒன்று அவனுடைய இல்லமான கஃபாவை சென்று தரிசித்து வருவதாகும். அல்லாஹ்வின் மீதுள்ள பிரியத்தை உண்மைப்படுத்தும் இடமாக அவனது இல்லமான கஃபத்துல்லாஹ் திகழ்கிறது.

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள ‘கஃபா’ ஆலயமாகும்.

உலகில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலக்குகள் இவ்விடத்தில் கஃபத்துல்லாஹ்வை உருவாக்கி இறைவனை வணங்கி வந்தனர். அதன் பிறகு ஆதம் (அலை) அவர்கள் இதைக் கட்டினார்கள். மூன்றாவதாக அன்னாரின் மகனார் ஷீத் (அலை) அவர்கள் கட்டினார்கள். அதன்பிறகு நூஹ் (அலை) காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தில் கஃபத்துல்லாஹ் சேதமடைந்ததால், நபி இப்ராஹீம் (அலை) தம் மகனாரின் துணையோடு மீண்டும் அதை நிர்மாணித்தார்கள்.

ஐந்தாவதாக அமாலிகா என்ற குலத்தாரும் ஆறாவதாக ஜுர்ஹும் என்ற குலத்தாரும் கஃபாவைக் கட்டினார்கள். ஏழாவதாக நபி(ஸல்) அவர்களின் ஐந்தாம் தலைமுறை பாட்டனாரான குஸைஃ பின் கிலாப் என்பவர் கட்டினார்.

கஃபா ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

ஒரு முஸ்லிம் பூமியில் எப்பகுததியில் இருந்தாலும், அவர் தொழுகையின் போது கஃபாவையே முன்னோக்க வேண்டும். கஃபாவைச் சுற்றியுள்ள பள்ளிவாசலுக்கு ‘ஹரம் ஷரீஃப்’ என்று பெயர். அதாவது, ஹராமான செயல்கள் அங்கு தடுக்கப் பட்டதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

“(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா’ (மக்கா)வில் இருப்பது தான். இன்னும் அது பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.”

– சூரா ஆல இம்ரான் : 96

ஹஜ்ரத் அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ (கஃபா) என்று கூறினார்கள். ‘பிறகு எது?’ என்றேன். ‘அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ என்று கூறினார்கள். ‘இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை வருடங்கள் இடைவெளி?’ என்று கேட்டேன். ‘நாற்பது வருடங்கள்’ என்று கூறினார்கள் .”

– புகாரி

முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட ‘கஃபா’ நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக சிதிலமடைந்தது.

சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஃபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான். அவ்விருவரும் சேர்ந்து கஃபாவை உயர்த்திக் கட்டி அதனை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். அதுவே, ‘ஹஜ்’ என்ற கிரியையாக இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

“இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது, ‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் (எங்கள் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன்; நன்கு அறிந்தவன்’.”

– சூரா அல்பகரா: 127

மேலும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

“அதில் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. இப்ராஹீம் நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாдуகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும்.”

– சூரா ஆல இம்ரான் : 97

கஃபா ஆலயத்தைக் கட்டிய பிறகு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனையை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ

“இன்னும், இப்றாஹீம் ‘என் இரட்சகனே! (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்கிவைப்பாயாக! இன்னும், இதில் வசிப்பவர்களுக்கு அவர்களில் எவர், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு- பலவகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் உணவளிப்பாயாக!’ என்று கூறியதை (நினைவு கூறுங்கள்).”

– சூரா அல்பகரா : 126

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே ) எழுந்து நின்று, ‘அல்லாஹுதஆலா வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். எனவே, அது இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது’ என்று கூறினார்கள்.”

அல்லாஹ் குர்ஆனில்,

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

“மேலும், ‘கஃபா’ என்னும் அவ்வீட்டை மனிதர்களுக்கு ஒன்று கூடும் இடமாகவும், அபயமளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கினோம் என்பதையும் (நினைவு கூர்வீராக! அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தை (விசுவாசிகளே!) தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்’ (எனக் கட்டளையிட்டோம்). இன்னும், (அவ்வீட்டைச் சுற்றி வருபவர்களுக்கும், (அதில்) தங்கியிருப்பவர்களுக்கும், (குனிந்து) ருகூஉ (சிரம்பணிந்து) ஸுஜூது செய்பவர்களுக்கும் என் வீட்டை நீங்கள் இருவரும் சுத்தமாக்கி வைப்பீர்களாக!’ என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம்.”

– சூரா அல்பகரா: 125

கஃபாவிற்கு என்று தனிச் சிறப்புகள் ஏராளாமாக உள்ளன. அதில், மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபா அமைந்திருக்கும் பள்ளி) தொழுதால் ஒரு லட்சம் தொழுகையின் நன்மை கிடைக்கும் என்றும், அல்லாஹ்வின் 120 ரஹ்மத்துகள் தினமும் இவ்வீட்டின் மீது இறங்குகின்றன. 60 ரஹ்மத்துகள் தவாபு செய்பவர்கள் மீதும், நாற்பது ரஹ்மத்துகள் அங்கு தொழுபவர்கள் மீதும் இன்னும் இருபது ரஹ்மத்துகள் கஃபாவை பார்ப்பவர்கள் மீதும் இறங்குகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான். இன்னும் ஹரம் ஷரீப் எல்லையில் ஒரு பாவம் புரிந்தால் பத்து பாவங்களுக்குச் சமமானதாகும்.

நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், சூரியன் மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது. ஆனால் இந்தத்தடை ‘கஃபா’ விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம்; வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஃபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள் .”

– திர்மிதீ

கஃபாவின் அமைப்பு:

கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் 12.86 மீட்டர். (42 அடி 2 அங்குலம்) நீளமும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் 11.03 மீட்டர் (36 அடி 2 அங்குலம்) அகலமும், 13.1 மீட்டர் (43 அடி 0 அங்குலம்) உயரமும் உள்ளது.

இதன் நான்கு மூலைகளுக்கும் நான்கு பெயர்கள் உள்ளன:

தென்கிழக்கு மூலைக்கு ‘ருக்னுல் ஹிந்த்’ என்றும்
வடகிழக்கு மூலை ‘ருக்னுல் இராக்கி’ என்றும்
வடமேற்கு மூலை ‘ருக்னுல் ஷாமி’ என்றும்
தென்மேற்கு மூலை ‘ருக்னுல் யமானி’ என்றும் அழைக்கப்படுகிறது.
ருக்னுல் யமானியின் மூலையில் எழுபது மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்விடத்தில் துஆச் செய்பவர்களின் துஆக்களுக்கு ஆமீன் கூறுகின்றனர்.

– இப்னுமாஜா

ஹஜ்ருல் அஸ்வத்:

கஃபாவின் தென்கிழக்கு மூலையில் (ருக்னுல் ஹிந்த் வெள்ளி வளையத்திற்குள்) ‘ஹஜ்ருல் அஸ்வத்’ உள்ளது.

யார் ஒருவர் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை ஈமான் கொண்ட நிலையில் தொட்டு முத்தமிடுவாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். இது சுவனத்திலிருந்து வந்த கல்லாகும். ஹஜ்ருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கும்போது பாலை விட வெண்மையாக இருந்தது. மனிதர்களின் பாவங்கள் தான் அதனை கருமையடையச் செய்துவிட்டன. – திர்மிதீ

கஃபாவுக்கு ஜன்னல் கிடையாது. கஃபாவின் தரை மட்டத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் நுழைவாயில் இரண்டு கதவுகள் இருக்கிறது. இதில் நுழைய வெள்ளி ஏணிப் படி கொண்டு வரப்படும். கஃபாவின் இரு கதவுகளும் தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை 7.5 க்கு 4 மீட்டர் அளவுடையது.

இப்போது இப்பள்ளியில் தலா 89 மீட்டர் உயரம் கொண்ட ஒன்பது மினார்களும் வெளியிலிருந்து உள்ளே வருவதற்காக 95 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ருக்னே இராக்கி மற்றும் ருக்னே ஷாமி ஆகிய கஃபாவின் இரு மூலைகளுக்கும் எதிரில் ‘C’ அரை வட்ட வடிவில் 1.32 மீட்டர் உயரத்தில் உள்ள சுவருக்கு ‘ஹதீம்’ என்று பெயர். இதற்கு ‘ஹிஜ்ரே இஸ்மாயில்’ என்றும் ஒரு பெயருண்டு.

கஃபாவின் பக்கதில் ‘C’ வடிவில் இருக்கும் இடம்தான் ஹிஜ்ர். சரியாக இந்த இடத்தில்தான் அன்னை ஹாஜிராவையும், அவருடைய மகன் இஸ்மாயிலையும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் விட்டு சென்றார்கள். கஃபாவின் உள்ளே செல்ல விரும்புபவர் இங்கு செல்லலாம். கஃபாவின் உள்ளே தொழ விரும்புபவர் இங்கு தொழுது கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இதுவும் கஃபாவின் உட்பகுதியாகத்தான் இருந்தது. குறைஷிகள் இதனைக்கட்டிய போது போதிய பணவசதி இல்லாததால் முன்பு இருந்த அளவைவிட அகலத்தில் ஆறரை முழத்தைக் குறைத்து விட்டனர். குறைக்கப்பட்ட அப்பகுதியும் கஃபாவில் சேர்ந்ததே என்பதை தெரிவிப்பதற்காக அரை வட்ட வடிவில் சிறிய மதில் சுவரை எழுப்பிவிட்டனர்.

இந்த ஹதீமுக்கு நேர் மேலே கஃபாவின் மீது விழும் மலை நீர் வடிவதற்காக ஒரு வடிகுழாய் பொருத்தப்பட்டுள்ளது. இது தங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘மீஜாபுர் ரஹ்மத்’ என்று பெயர். இதன் கீழ் நின்று கேட்கப்படும் துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும்.

கஃபாவின் பெயர்கள்:

அல்லாஹுதஆலா திருமறையில் கஃபத்துல்லாஹ்வுக்கு சூட்டியுள்ள பெயர்கள்:

  • அல் கஃபா (சூரா மாயிதா-97)
  • அல் பைத் (சூரா ஆல இம்ரான்- 96)
  • பைத்துல்லாஹ் (சூரா பகரா- 125)
  • அல் பைத்துல் ஹரம் (சூரா மாயிதா-97)
  • அல் பைத்துல் அதீக் (சூரா ஹஜ்-29)
  • கிப்லா (சூரா பகரா-144)
  • கஃபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கருப்பு நிறத் துணிக்கு ‘கிஸ்வா’ என்று பெயர்.

ஒவ்வொரு நற்காரியத்தையும் வலது பக்கமாக துவக்கச் சொல்லும் இஸ்லாம் மிக உயர்ந்த கடமையான தவாஃபை இடது பக்கமாக துவக்கச் சொன்னதன் மூலம் சந்திரன் பூமியையும், சந்திரன், பூமி இரண்டும் சூரியனையும், கோள்கள் அனைத்தும் சூரியனையும் உடலின் இரத்த ஓட்டமும் எலக்ட்ரான் மின் அணுக்களும் இடப்பக்கமாகவே சுற்றுகின்றன என்ற விதியில் மனிதர்களையும் பிணைத்து அவர்களை பிரபஞ்சத்தோடு கலந்திடச் செய்கிறது.

தொழுகை நேரங்கள் நீங்கலாக இரவிலும் பகலிலும் மனிதர்கள் கஃபாவை வலம் வந்து கொண்டே இருக்கின்றனர். தொழுகை நடக்கும் நேரங்களில் கூட மலக்குகள் கஃபாவை தவாஃப் செய்கிறார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ

“நிச்சயமாக ஸஃபா, மர்வா இவை அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன.”

– சூரா அல் பகரா: 158

கஃபாவின் எதிரே அமைந்துள்ள குன்றுகளுக்கு ‘ஸஃபா மர்வா’ என்று பெயர். அவை இரண்டுக்கும் மத்தியில் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களது மனைவி ஹாஜரா அம்மையார், தன் பிள்ளை இஸ்மாயீல் (அலை) அவர்களுக்காக தண்ணீர் தேடி ஓடிய இடமாகும். அது ஹஜ் மற்றும் உம்ராவின் போது அவற்றிற்கிடையில் ஹாஜிகள் ஏழு முறை நடந்து சென்று நிறைவேற்றும் ‘ஸயீ’ என்ற அமலாகும்.

கஃபாவின் அருகே, மகாமு இப்ராஹீம் அருகில் ‘ஜம்ஜம்‘ கிணறு உள்ளது. இப்போது பார்க்க முடியாதபடி அவை மறைக்கப்பட்டு விட்டது. அதற்கு மேல் தான் மக்கள் நடந்து தவாஃப் செய்து கொண்டிருக்கின்றனர்.

வற்றாத ஒரு ஊற்றின் கிணறு தான் இந்த ‘ஜம்ஜம்’. இது நபி இஸ்மாயீல் குழந்தையாக பசி தாகத்தில் அழுதபோது அவர்களின் காலடியில் உதித்த ஒரு ஊற்று ஆகும். உலக முடிவுநாள் வரை இதிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இந்த ஜம்ஜம் தண்ணீரை குடிக்கும் முன் எதை நிய்யத் செய்கிறோமோ, அது நிறைவேறும்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளவில்லா அன்பு வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், நிர்பந்தமாக அங்கிருந்து ஹிஜ்ரத் செய்து வெளியாகிவிட நேர்ந்தது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘கஸ்வா’ என்ற ஒட்டகத்தின் மீது அமர்ந்தவர்களாக மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊர் ஆவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊர்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)” என்று கூறினார்கள்.

– திர்மிதீ

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version