இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : “எவர் ரமலான் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி, நோயின்றி (வேண்டுமென்றே) ஒரு நாள் நோன்பை விட்டுவிடுகிறாரோ அவர் ஆயுள் முழுவதும் நோன்பிருந்தாலும் (அதற்குப் பகரமாக) அதனைக் களாச் செய்தவராக முடியாது.”

— மிஷ்காத்

நோன்பு என்பது உடல் உறுப்புகளுக்கு மட்டுமல்ல. மாறாக, நம் ஆத்மாவைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்கு உள்ளதாகும்.

பகலில் உண்பது, குடிப்பது, உடலுறவை விட்டு எப்படி விலகியிருக்க வேண்டுமோ, அதுபோல் தீய பேச்சு, தீய பார்வை, பொய், புறம் போன்ற அனைத்துத் தீமையான செயல்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் நோன்பின் முழுப்பலனையும் பெறமுடியும்.

ஏனெனில், இம்மாதத்தில் மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.

இம்மாதத்தின் இரவு, பகலில் அதிகமதிகம் நன்மையான செயல்களை செய்து நம் ஆத்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

எவரொருவர் இந்த மாதத்தில் இறை வணக்க வழிபாடுகளில் சோம்பல் காட்டி, மன இச்சைகளைத் தீர்ப்பதிலேயே மூழ்கிக் கிடந்து விடுவாரோ அவர் கஷ்டத்தையும், கைசேதத்தையும் நிச்சயம் அடைவார்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் கெட்ட சொற்கள் பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். அவரிடம் எவராயினும் வசைமொழி பேசினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்!”

— புகாரி

நோன்பு என்பது பாவங்களை விட்டு மனிதன் தன்னை தற்காத்துக் கொள்ளும் கேடயமாகும். மேலும், நோன்பு என்பது ஆத்மீக பலம் பெறுவதற்கும், மனதைப் பக்குவப்படுத்துவதற்கும் கிடைத்துள்ள நற்பாக்கியமாகும்.

ரமலான் மாதத்தை மற்ற மாதங்களைப் போல் சமமாகக் கருதாமல் இது நன்மையைச் சம்பாதிக்கும் மேன்மை மிக்க மாதம் என்பதை கவனத்தில் கொண்டு, பாவங்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.

ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் பசித்திருப்பது நோன்பாகும். ஆனால் காலி வயிறால் வெறுமனே பசித்திருக்கச் செய்வது மட்டுமே நோன்பின் நோக்கமல்ல. மாறாக, உணவை விட்டு நம்மையும், நம் மனதையும் எவ்வாறு தடுத்துக்கொண்டு ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்கிக் கொள்கிறோமோ, அவ்வாறு தீய பேச்சுகள் (புறம், கோள், பொய் போன்றவைகளை) பேசுவதை விட்டு நாவையும், தீய பேச்சுகளைக் கேட்பதைவிட்டு நம் காதையும், பாவமான செயல்களை நோக்கி நடப்பதைவிட்டு நம் கால்களையும், தீய பார்வையைவிட்டு நம் கண்களையும் பாதுகாத்துக் கொள்வதே நோக்கமாகும்.

நோன்பு என்பது தக்வா என்ற பயபக்தி உண்டாகக் காரணமாக இருக்கிறது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், “யா ரஸூலல்லாஹ்! நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது?” என்று கேட்டார். “பொய் பேசுவதாலும், புறம் பேசுவதாலும்” என்று பதிலளித்தார்கள்.

சாப்பிடுவதும், குடிப்பதும் நோன்பை முறிக்கின்ற செயல்களாக இருப்பதைப்போன்று பொய் பேசுவதும், புறம் பேசுவதும் நோன்பின் பலனை இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் இரண்டு பெண்கள் நோன்பு வைத்திருந்தார்கள். நோன்பின் காரணமாக அவர்களுக்கு தாங்கமுடியாத அளவுக்குக் கடினப்பசி ஏற்பட்டது. உயிர்போய்விடும் என்ற நிலையை அப்பெண்கள் அடைந்தனர்.

சில ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம், இந்தப்பெண்களின் நிலையைக் குறித்து முறையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் ஒரு கோப்பையை அப்பெண்களிடம் அனுப்பி அவ்விருவரையும் அதில் வாந்தி எடுக்கச் சொன்னார்கள். அவ்விருவரும் வாந்தி எடுத்தபோது, இறைச்சித் துண்டுகளும், புதிய இரத்தமும் வெளிவந்தன. இதனைப் பார்த்த ஸஹாபாக்கள் திகைத்தனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்பெண்கள் அல்லாஹ் அருளிய ஹலாலான உணவினால் நோன்பு வைத்து ஹராமான பொருளைச் சாப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது, அவ்விரு பெண்களும் பிறரைப்பற்றிப் புறம்பேசி இருக்கின்றனர்” என்று விளக்கம் கூறினார்கள்.

‘நோன்பு என்பது ஒரு கவசம்; ஒருவர் நோன்பாளியாக இருந்தால் தீயவார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம்; வேறு எவரேனும் அவரிடம் சண்டைக்கு வந்தால் அல்லது திட்டினால் நான் நோன்பாளி எனக்கூறி ஒதுங்கிக் கொள்ளட்டும்.

நோன்பின் உரிமைகளை மீறவில்லையெனில் அது நரகத்திலிருந்து ஒருவரைப் பாதுகாக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘அதன் உரிமை மீறல் என்றால் என்ன?’ என ஒருவர் கேட்ட போது, ‘பொய் பேசுவதும்; புறம் பேசுவதுமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.

— புகாரி

ரமலானின் ஒரு மாத நோன்பைக் கொண்டு ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ மனிதனுக்கு இறைவன் கற்றுக்கொடுக்கிறான். நோன்பின் மூலமாக தக்வா என்னும் பயபக்தி ஏற்பட வேண்டும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version