ஒருமுறை நபி(ஸல்) அவர்களின் அன்புப்பேரர்கள் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன், நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர்(ரலி) ஆகிய மூவரும் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து மக்காவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
இடை வழியில் அவர்களின் உணவுப் சுமைகளை சுமந்து வந்த ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதனால் உண்ண உணவின்றி பசியுடனும், தாகத்துடனும் பிரயாணத்தைத் தொடர்ந்தார்கள்.
பாதையில் ஒரு கூடாரத்தை இவர்கள் கடக்க நேர்ந்தது. அதில் ஒரு வயதான ஒரு பெண்மணி இருந்தார். அம்மூவரும் அப்பெண்மணியிடம், ‘குடிப்பதற்கு பானம் ஏதேனும் இருக்கிறதா?’ என்று விசாரித்தார்கள்.
அதற்கு அப்பெண், ‘இருப்பதாக’ பதிலளித்தாள்.
அவர்கள் மூவரும் தங்கள் ஒட்டகைகளிலிருந்து கீழே இறங்கினார்கள். அப்பெண்மணியிடம் ஒரு ஆடு இருந்தது. அப்பெண் அந்த ஆட்டைக் காண்பித்து, அதிலிருந்து பாலைக் கறந்து குடித்துக் கொள்ளுமாறு கூறினாள்.
அவர்களும் பாலைக் கறந்து குடித்தனர். பிறகு, ‘உண்ண ஏதேனும் உணவு உள்ளதா?’ என வினவினார்கள்.
அதற்கு அப்பெண், ‘இந்த ஆட்டை உங்களில் யாராவது அறுத்துக் கொடுத்தால், நான் சமைத்துத் தருவேன்’ என்றாள். அவர்கள் ஆட்டை அறுத்துத் தர அப்பெண் அதை சமைத்து விருந்திட்டு உபசரித்தாள்.
இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன், ஜஃபர் (ரலி) ஆகிய மூவரும் சற்று ஓய்வெடுத்துவிட்டு, மாலையில் தமது பிரயாணத்தைத் தொடங்கும் முன் அப்பெண்ணிடம், ‘நாம் ஹாஷிமிகள் (நபிகளாரின் குடும்பத்தினர்) ஆவோம். இப்போது ஹஜ்ஜுடைய நாட்டத்துடன் செல்கிறோம். அல்லாஹ் எங்களை மீண்டும் ஸலாமத்தாக மதீனாவுக்குத் திருப்பி, அதன் பிறகு நீ மதீனாவுக்கு வருவாயானால், உன்னுடைய இந்த உபகாரத்திற்குப் பதிலாக இன்ஷா அல்லாஹ் நல்ல கைமாறு செய்வோம்’ என்று கூறிச் சென்றனர்.
இரவில் அந்த வயதான பெண்ணின் கணவன் வீடு திரும்பினார். அவனிடம் அவள், ஹாஷிமி விருந்தாளிகள் வந்திருந்ததையும், அவர்களுக்கு ஆட்டை அறுத்து உணவிட்டதையும் கூறினாள். இதைக்கேட்ட அவர், ‘யாரோ வழிப்போக்கர்களுக்கு ஆட்டை அறுத்துவிட்டாயே! ஹாஷிமி என்றால் நம்பிக்கொள்வதா?’ என்று கடிந்து கொண்டார்.
இந்நிலையில் நாட்கள் பல சென்றது. கணவனும் மனைவியும் வறுமை தாளாமல் பிழைப்புத் தேடி மதீனா சென்றனர். நாள் முழுவதும் புழுக்கைப் பொறுக்கி அதை விற்று வாழ்ந்தனர். வழக்கம்போல் ஒருநாள் அப்பெண் புழுக்கைகளைப் பொறுக்கியவாறு வந்து கொண்டிருந்தாள்.
அப்போது இமாம் ஹஸன்(ரலி) அவர்கள் தம் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தனர். அப்பெண் அப்பக்கமாக போவதைக் கண்ட அவர்கள், உடனே தம் அடிமையை அனுப்பி அப்பெண்ணைத் தம்மிடம் அழைத்து வருமாறு செய்தார்கள்.
இமாம் ஹஸன் அவர்கள் அப்பெண்ணிடம், ‘அல்லாஹ்வின் அடியாளே! நீ என்னை அறிவாயா?’ என்றார்கள். அதற்கு அவள், ‘இல்லை’ என்று பதிலளித்தாள்.
இமாம் ஹஸன் அவர்கள், ‘உன்னுடைய கூடாரத்தில் பாலைப் பருகி, ஆட்டிறைச்சியை உண்ட அதே ஹாஷிமி விருந்தாளிதான் நான்! நினைவில்லையா?’ என்றார்கள்.
பிறகு, தம் அடிமையை அழைத்து அப்பெண்ணுக்காக ஒரு நூறு ஆடுகளை வாங்கி வருமாறு கூறினார்கள். அவ்வாறே நூறு ஆடுகள் உடனே வாங்கப்பட்டன. அந்த ஆடுகள் அல்லாமல், ஓராயிரம் தீனார் அன்பளிப்பாக வழங்கி, அவளை தம் அடிமையுடன் தமது தம்பியாகிய இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம், ‘என் சகோதரர் கைமாறாக உமக்கு என்ன அளித்தார்கள்? என்று வினவினார்கள்.
அதற்கு அப்பெண், ஒரு நூறு ஆடுகளும், ஓராயிரம் தீனார்களும்’ என்று பதில் கூறினாள்.
இதைக் கேட்டு இமாம் ஹுஸைன் அவர்கள் அதேபோல் ஒருநூறு ஆடுகளையும், ஓராயிரம் தீனார்களையும் அன்பளிப்பாக வழங்கி, அவளை நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
அப்பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அவர்கள், ‘அவ்விருவரும் என்ன வழங்கினார்கள்?’ என்று கேட்டுவிட்டு, ‘இருநூறு ஆடுகளையும், இரண்டாயிரம் தீனார்களையும் வழங்கிவிட்டு, அவ்விருவரையும் சந்திப்பதற்கு முன் என்னைச் சந்தித்திருந்தால் இதைவிட அதிகமாக வழங்கியிருப்பேன். அவர்களின் கண்ணியம் கருதியே இந்த அளவு கைமாறு செய்கிறேன்’ என்று கூறினார்கள்.
அந்தப்பெண் இவையனைத்தையும் தன் கணவனிடம் கொண்டுபோய், ‘இவையனைத்தும் அந்த வாடி வதங்கிய ஒரு ஆட்டிற்கு பகரமாக கிடைத்தவை! அல்லாஹ் நம் வறுமையைப் போக்கிவிட்டான்’ என்றாள்.
அல்லாஹ் குர்ஆனில்,
وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
நீ நாடியோருக்குக் கணிக்கின்றிக் கொடுக்கின்றாய்
– சூரா ஆல இம்ரான்:27
