ஈமான் நிலைத்து நிற்பதற்கு பொறுமை என்ற பண்பே அஸ்திவாரமாகும்.
அல்லாஹ் குர்ஆனில்,
وَلَنَبْلُونَكُمْ بِشَيْ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّبِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வம், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினால் சோதிப்போம். இதில் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் சுபச்செய்தி கூறுவீராக!
— சூரா அல்பகரா : 155
முஸ்லிம்களுடைய இறைநம்பிக்கை நிச்சயம் சோதனைக்கு உட்பட்டதே. வறுமையைக் கொண்டும், பொருளாதார நஷ்டத்தைக் கொண்டும், இன்னும் நமக்கு பிரியமானவர்களின் மரணத்தைக் கொண்டும், வியாதிகளைக் கொண்டும், விவசாய நிலங்களில் உள்ள விளைச்சல்களின் நஷ்டத்தை ஏற்படுத்தியும் சோதிப்பான். இத்தகைய துன்பங்களை சந்தித்து வெற்றி பெறுபவர்கள் பொறுமை உடையோரே.
இத்தகைய துன்பங்கள் நிகழும்போது புலம்பிவிட்டாலோ, இறைவனை அதிருப்தி கொண்டாலோ ஈமானுக்கே நஷ்டம் ஏற்பட்டுவிடும்.
எத்தனை எத்தனையோ நற்செயல்கள் புரிபவர்கூட துன்பத்தில் பொறுமை கொள்வதில்லை. நான் விடாமல் தொழுதேனே, தர்மம் கொடுத்தேனே, ஹஜ் செய்தேனே என்று புலம்பி தன் நற்செயல்களின் நன்மைகளை இழந்துவிட நேரிடும்.
ஒரு முஃமின் சிரமங்களை சந்திக்கும்போது நிலைகுலையாமல் நிதானமாக செயல்பட பொறுமை அவசியமாகும்.
அல்லாஹ் குர்ஆனில்,
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبر والصلوةِ إِنَّ اللهَ مَعَ الصبرين
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
— சூரா அல்பகரா : 153
பொறுமை இல்லாமல் ஒரு விஷயத்தை அணுகும்போது அதன் எதிர்விளைவுகளை எண்ணிப்பார்க்க முடியாமல் ஆகிவிடும். அதனால் தவறு நிகழ்ந்து விட்ட பின்பு கைசேதப்படும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடும். பொறுமையுடன் காரியம் ஆற்றும்போது அதன் பக்கவிளைவுகளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது.
நபி(ஸல்) அவர்களின் பரிசுத்த துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பு மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டது. கடினமான நுபுவ்வத் பணிக்கிடையில் நபி(ஸல்) அவர்கள் இத்தகைய துயரத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
மதீனாவிலிருந்த யூதர்களும், நயவஞ்சக முஸ்லிம்களும் ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டே இருந்தார்கள். இந்த நிலை முப்பது நாட்கள் வரை நீடித்தன.
இது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்விடமே முறையிட்டு பொறுமையோடு காத்திருந்தார்கள். முப்பதாவது நாள் அன்று அல்லாஹுதஆலா, ஆயிஷா (ரலி) அவர்களின் கற்பைக் குறித்து இறைவசனம் இறக்கி பூமி நிலையுள்ள காலம் வரை அனைவரையும் ஓதும்படியாக ஆக்கி வைத்தான்.
பொறுமைக்கு கிடைக்கும் கூலி மகத்தானது என்பதற்கு இதுவே போதுமான சான்று.
அல்லாஹ் குர்ஆனில்,
إنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
பொறுமை உள்ளம் கொண்டவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாக (இறைவனிடம்) கணக்கின்றியே பெறுவார்கள்.
— சூரா அல் ஜுமர் : 10
ஒரு முஃமின் தனது வாழ்வில் இன்பம், துன்பம் என்ற இரண்டு பக்கங்களையும் சந்தித்துதான் ஆக வேண்டும்.
துன்பத்தை மனிதன் விரும்பவில்லையென்றாலும், அது விதியால் பின்னப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு முஃமின் சகிப்புத் தன்மையுடன் வாழப் பழகிக் கொள்வதுதான் விவேகமான செயலாகும். இல்லையேல் ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
பொறுமை அற்றவர்களை ஷைத்தான் எளிதாக ஆக்கிரமித்துக் கொள்கிறான். ஏனெனில், பொறுமை என்னில் நின்றும் உள்ளது; அவசரம் ஷைத்தானின் நின்றுமுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பொறுமை இறைத்தூதர்களின் பண்பாகும். பொறுமையின்மை இப்லீஸின் வழியைச் சார்ந்தது ஆகும்.
மனிதவாழ்வு இறைவனால் ஒரு கால வரையறைக்குள் நிர்ணயம் செய்யப்பட்டு அதன் நிகழ்வுகள் விதி எனும் பெயரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இறைவனின் தீர்ப்புக்கு முன்னால் மனிதனின் அவசரம் அதனை மாற்றிவிடாது.
ஹதீஸே குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்: அடியான் ஒரு செயல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாடுகிறான்; நானும் இவ்விதம் நடக்க வேண்டும் என்று நாடுகிறேன். அச்செயல் நடந்தேறிவிட்ட பிறகு நீங்கள் அதை உற்று நோக்கினால், நான் நாடியபடியே நடந்திருக்கும்; நீங்கள் நாடியபடி நடந்திருக்காது. சுப்ஹானல்லாஹ்!
ஒரு முஃமினின் வாழ்வில் அவசரம், படபடப்பு, உடனே முடித்துவிட வேண்டும் என்ற ஆவேசம் இவைகள் பல இன்னல்களை கொண்டு வருவதோடு சில சமயங்களில் மார்க்கத்திற்கு விரோதமாக செயல்படும் நிலையும் ஏற்பட்டுவிடும். கைசேதமும் கவலையைத் தவிர அவசரம் வேறொன்றையும் கொண்டு வந்து சேர்க்காது என்பது நிச்சயம்.
பொறுமை என்ற மனப்பக்குவம் இல்லாதவர்கள், தாம் தீட்டிய திட்டங்களுக்கு மாறாக ஒரு சிறு சம்பவம் நடந்துவிட்டால் கூட பொறுமையிழந்து புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். புலம்புவதால் எப்பயனையும் அடையப்போவதில்லை.
சத்தியத்தின் மீது நிலைத்து நிற்க பொறுமை அவசியம்!
