முத்தம்
ஒருமுறை ஃபாரசீக அறிஞர் முல்லா நஸ்ருதீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து
“ஹஜ்ரத் நான் புதிதாக திருமணமானவன்; நோன்பு வைத்திருக்கும் நிலையில் காலை நேரத்தில் வெளியே செல்லும் போது மனைவியை முத்தமிட்டால் குற்றமா?” என்று கேட்டார். அதற்கு முல்லா அவர்கள், “இல்லை” என்றார்.
மீண்டும் அவர், “மதியம் வீடு திரும்பியதும் முத்தமிட்டால்?” என்றார்.
முல்லா அவர்கள் மறுபடியும், “அதுவும் பிரச்சனை இல்லை!” என்றார்.
அவர், “திரும்ப வெளியே செல்லும் போது முத்தமிடலாமா?” என்றார்.
உடனே முல்லா அவர்கள் கோபம் கொண்டவராக, “அவள் என்ன ஹஜருல் அஸ்வதா? ஒவ்வொரு சுற்றின் போது முத்தமிட?” என்று கூறியவாறு, அவனை அடிப்பதற்கு ஒரு தடியை எடுத்துக் கொண்டு துரத்தினார்.
குறை ஏதும் இல்லை
ஷஅபீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து “நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். ஆனால், அவள் நொண்டியாக இருக்கிறாள்.
எனவே, அவளை நான் தலாக் சொல்லிவிடலாமா? என்று கேட்டார்.
அதற்கு அபீ (ரஹ்) அவர்கள், “நீ அவளை வைத்து ஓட்டப்பந்தயம் நடத்துவதாக இருந்தால்,
அவளுக்கு தலாக் சொல்லிவிடு. அப்படி இல்லையெனில் நீ அவளோடே வாழு!” என்று பதிலளித்தார்.
இப்லீசின் மனைவி
ஷஅபீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “(ஷைத்தான்களின் தலைவன்) இப்லீஸின் மனைவி பெயர் என்ன?” என்று கேட்டார்.
ஷஅபீ (ரஹ்) அவர்கள்,
“நாம் தான் அந்த திருமணத்தில் கலந்துக்கொள்ளவில்லையே!
(எனவே, அவளின் பெயர் தெரியாது.) என்று பதிலளித்தார்.
