இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

தொழாதவர்கள் நரகம் செல்வதைக் குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ تَكُ مِنَ الْمُصَلِّينَ

“உங்களை ஸகர் (என்ற நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று வானவர்கள் கேட்பார்கள்). அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் தொழுகையாளிகளாக இருக்கவில்லை.”

– சூரா முத்தஸ்ஸிர்: 42, 43

தொழுகை விஷயத்தில் அலட்சியமாக இருப்பவர்களுக்கு உலகில் ஐந்து தண்டனைகள் கொடுக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் தொழுகை விஷயத்தில் எச்சரித்துக் கூறியுள்ளார்கள்:

  1. அவனது வாழ்க்கையில் பரக்கத் நீங்கிவிடும்.
  2. நல்லடியார்களின் பிரகாசம் அவனது முகத்திலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
  3. அவனது பிற நற்செயல்களுக்குப் பிரதிபலன் கிடைக்காது.
  4. அவனது பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுவதில்லை.
  5. நல்லடியார்களின் துஆவில் இவனுக்குப் பங்கு இல்லை.


ஈமானின் அடிப்படையான தினசரி ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றாமல், வாரம் ஒருமுறை நிறைவேற்றும் முஸ்லிம்களாகவே நிறைய பேர் இருக்கின்றனர். இந்த அலட்சிய மனப்போக்கை நீக்கிக் கொள்ள வேண்டும்.

“எவர் தொழுவதைக் கடமையென ஆக்கிக் கொள்வாரோ, அவர் சுவனத்தில் நுழைவார்” என நபி (ஸல்) அவர்கள் சுபச்செய்தி கூறியுள்ளார்கள்.

தொழுகையில் திருடுபவனே மிக மோசமான திருடன் என நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, “யா ரஸுலல்லாஹ்! தொழுகையில் எவ்வாறு திருட முடியும்?” என ஸஹாபாக்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “தொழுகையின் ருகூவு, ஸுஜுது ஆகியவற்றை நல்ல முறையில் நிறைவேற்றாமல் இருப்பதுதான்” என்று விளக்கமளித்தார்கள்.

தொழுகையில் ஈடுபடுபவர் இந்த ஹதீஸை நினைவு கொள்வது அவசியம். ஏனெனில், ருகூவு மற்றும் ஸஜ்தாவை அவசரஅவசரமாக நிறைவேற்றுவதும், அதன் தஸ்பீஹ்களை முழுமையாக ஓதாமலிருப்பதும், தொழுகையில் திருடியது போலாகும் என விளங்கி, தொழுகையைப் பொறுமையாக நிதானமாக நிறைவேற்ற வேண்டும்.

கடமையான ஐந்துநேரத் தொழுகையைத் தொழாதவரின் நிலை:

  • வாழ்க்கையில் பரக்கத் இருக்காது
  • துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை.
  • நல்லோர்களின் பிரார்த்தனையில் பங்கு இல்லை.
  • இழிவாகவும், கடும் பசி தாகத்துடனும் மரணமடைவான்.
  • மண்ணறையில் நெருப்பைக் கொண்டு வேதனை செய்யப்படும்.
  • மறுமைநாளில் அல்லாஹ் கோபமுற்றிருக்கும் நிலையில் சந்திப்பான்.
  • மறுமைநாளில் துர்ப்பாக்கியவனாக நிற்பான். மேலும், கடினமாக விசாரிக்கப்பட்டு நரகம் புகுவான்.
  • தொழுகை இல்லாதவனின் பார்வை ஒரு வீட்டின் உள்பகுதியை அடைந்தால், அவ்வீட்டில் வறுமை ஏற்படும்.
  • ஒருநேரத் தொழுகையை மனப்பூர்வமாகத் தவறவிட்டவனின் பெயர் நரகின் வாசலில் எழுதப்படுகிறது.
  • கோவேறு கழுதை அளவுள்ள தேள்கள் நிறைந்த ‘ஜூப்புல் ஹுஜ்ஜுன்’ என்ற நரகத்தில் வேதனை செய்யப்படுவான்.
  • கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் தொழுபவருக்கு மறுமை நாளில் கேடு என்று அல்லாஹ் குர்ஆனில் எச்சரித்துள்ளான்.
  • அல்லாஹ் குர்ஆனில்,

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ﴿الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ٥

இன்னும் கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்; அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாகவும், அசிரத்தையாகவும் இருப்போர்.

– சூரா மாஊன்:4,5

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version