மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் கியாமத்நாள் மிக கொடூரமானதாக இருக்கும். கடும் தாகத்தால் மக்கள் துடிப்பார்கள். அந்நாளில் நபி(ஸல்) அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக அன்னாருக்கு ஹவ்லுல் கவதர் என்ற தடாகத்தை அளிப்பான்.
கவ்ஸர் எனும் அத்தடாகம் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் தனிச்சிறப்பாகும்.
இதுபற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.
إِنَّا أَعْطَيْنكَ الكوثر
முஹம்மதே! கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
— அல் கவ்ஸர் : 1
‘கவ்ஸர் என்றால் என்ன?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கவர்கள், ‘அது அல்லாஹ் எனக்கு வழங்கிய நதியாகும்’ என விடையளித்தார்கள்.
இந்தத் தடாகம் ஒரு மாதப் பயணத் தொலைவு அகலமாகும். எமன் நாட்டின் ஸன்ஆ மற்றும் மதீனா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அந்தத் தடாகம் அமைந்திருக்கும் என்பது நபிமொழி.
அதன் நறுமணம் கஸ்தூரியை விடச் சிறந்ததாக இருக்கும்; அதன் தண்ணீர் வெள்ளியை விட வெண்மையானதாகும்.
அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் சொர்க்கத்தில் உள்ள தண்ணீராகும். சொர்க்கத்திலிருந்து இரண்டு பாதைகள் மூலமாக அதற்குத் தண்ணீர் வரும். தங்கக் குழாய், வெள்ளிக் குழாய் ஆகிய இரு குழாய்களின் வழியாக அந்தத் தடாகத்திற்குத் தண்ணீர் வரும். மக்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு முன் சுவனத்து நீரை தடாகத்தின் வழியாக அருந்துவார்கள்.
அந்த தண்ணீரின் பயன் என்னவென்றால், அந்த ஹவ்லுல் கவதர் தடாகத்தின் நீரை அருந்தியவர்க்கு அதற்குப் பிறகு எப்போதும் தாகமே ஏற்படாது.
மறுமையின் விசாரணை நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமான அந்நாளில் ஒரு தடவை அத்தடாகத்திலிருந்து நீர் அருந்து விட்டால் அதன் பின்னர் தாகமே ஏற்படாது.
நபி(ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதிலிருந்து வழங்குவார்கள். ‘நான் ஹவ்லுக்கருகில் உங்களுக்காக காத்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்கள்.
அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்களா?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! நீங்கள் ஒலு செய்ததன் காரணமாக கைகள், கால்கள், முகங்கள் வெண்மையான ஒளி பொருந்தியவர்களாக என்னிடம் நீங்கள் வருவீர்கள்’ என்று விடையளித்தனர்.
ஆகவே, எப்போதும் ஒலுவோடு இருப்பது இன்னும் சிறப்பாகும். ஏனெனில், அதனால் முகம் கைகால் அனைத்தும் மிகுந்த ஒளிமயமாக காட்சி அளிக்கும்.
ஹவ்ல் அல் கவ்ஸர் எனும் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு மட்டும் உரியது. இன்னும் இந்த உம்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் (ஐந்து வக்த்) தொழாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிட்டாது.
