அமீருல் முஃமினீன் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பயணி ஒருவர் தன் ஒட்டகத்தில் கூஃபா நகரத்தை நோக்கி பயணம் செய்து வந்தார். வரும் வழியில் அவரின் கோவேறு கழுதையும் இன்னும் அவரது சாமான்களும் தொலைந்து விடவே உணவு ஏதுமின்றி சிரமமான நிலையில் கூஃபா நகருக்குள் நுழைந்தார்.
‘இங்கே இஸ்லாமிய கலீபா (ஆட்சியாளர்) ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி தேடிச் செல்லுங்கள். அவர் உதவி செய்யும் பண்புடையவர்’ என ஒருவர் அப்பிரயாணியிடம் கூறினார்.
கலீஃபா அலி (ரலி) அவர்களின் இல்லத்தை அப்பிரயாணி அடைந்து, அவர்களின் மகனார் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களைச் சந்தித்து தனது நிலைமைகளைக் கூறினார். தனது தந்தை வெளியே சென்றிருப்பதாகவும் அவர் வரும்வரை பள்ளிவாசலில் இருங்கள். உங்களுக்காக உணவு கொண்டு வருகிறேன் எனக்கூறி, ஹுஸைன் (ரலி) அவர்கள் வீட்டினுள் சென்றார்கள்.
அப்பிரயாணி பள்ளிவாசலுக்குச் சென்று, அங்கே பசியோடு அமர்ந்திருந்தார். அங்கே பள்ளிவாசலின் மறுபக்கத்தில் ஒரு நபர் காய்ந்த ரொட்டியைத் தண்ணீரில் நனைத்து சாப்பிடுவதை அப்பயணி பார்த்து, அவரும் தன்னைப்போல் ஒரு பிரயாணி என்று கருதினார்.
சிறிது நேரத்தில் ஹுஸைன் (ரலி) அவர்கள் உணவுடன் வந்து வெளியூர் பயணியை சாப்பிடுங்கள் என்று கூற, அப்போது அவர் ‘எதிர்பக்கம் பாருங்கள்! ஒரு ஏழை சால்னா கூட இல்லாமல் தண்ணீரில் நனைத்துச் சாப்பிடுகிறார்! பாவம். அவரையும் இங்கே அழையுங்கள்; சேர்ந்து சாப்பிடட்டும்’ என்றார் பயணி.
எதிர் திசையை நோக்கிய ஹுஸைன் (ரலி) அவர்கள் சிரித்தவர்களாக, ‘அவர் வேறு யாருமல்ல. நீங்கள் தேடிவந்த கலீபாவும், எனது தந்தையுமான ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள்தான். அவர்கள் எப்போதும் வழமையாக உண்ணும் உணவைத்தான் இப்போது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை விடச் சிறந்த உணவை அவர்கள் உண்பதில்லை’ என ஹுஸைன் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
‘மாபெரும் இஸ்லாமிய பேரரசின் தலைவராக இருந்தும், அவர்கள் உண்பதோ காய்ந்த ரொட்டியா?’ என நினைத்து அந்தப் பிரயாணி ஆச்சரியமடைந்தார்.
