இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஈமான் ஸலாமத்தாக இருக்க வேண்டுமெனில், நாவு ஸலாமத்தாக இருக்க வேண்டும்.

மிகுதமான துன்பங்கள் நாவைக் கொண்டே ஏற்படுகிறது. பதில் சொல்வதற்கு தேவையில்லாத இடங்களிலெல்லாம் நாவைப் பிரயோகப்படுத்தி அறிவின் பலத்தை காண்பிக்கிறோம். நம்மிடம் கேட்காத ஒன்றிற்காக வலியச் சென்று பதில் கூறுவது வீணான பேச்சையே சேரும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

அமைதியாக இருங்கள். அது ஷைத்தானை விரட்டி அடித்து, உங்கள் மார்க்க விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்யும்.

— அஹ்மத்

ஒரு மனிதன் தன்னுடைய நாவை தன் கட்டுப்பாட்டில் வைக்கவில்லையென்றால், பிறகு அந்நாவு ஷைத்தானின் கையில் சிக்கிய கயிறாக ஆகிவிடும்.

ஷைத்தானிடம் தன் நாவை ஒருவர் ஒப்படைத்துவிட்டால், அவன் தான் விரும்பும் திசைகளில் திரித்து மாற்றி பேசச் செய்துவிடுவான். அதனால் ஏற்படும் பாவங்களும், விபரீதங்களும் அந்த மனிதனையே சாரும்.

நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த சபையில் ஒருவர் ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களைத் திட்டினார். அவர் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்க ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுமையாகவும், மௌனமாகவும் இருப்பதைப் பார்த்து, நபி(ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றுப் புன்முறுவல் கொண்டிருந்தார்கள்.

பிறகு அவர் அதிகமாகத் திட்ட, ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், அவரின் சில வார்த்தைகளுக்கு பதில் கொடுத்தார்கள். இதனால் கோபமுற்ற நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்கள்.

ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களிடம், “யாரஸூலல்லாஹ்! அவர் என்னைத் திட்டிக்கொண்டிருக்கும் வரை தாங்கள் அமர்ந்திருந்தீர்கள். பிறகு நான் அவருடைய சில வார்த்தைகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கியதும் தாங்கள் அதிருப்தியுற்று எழுந்து சென்று விட்டீர்களே ஏன்?” என்று வினவினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீர் மௌனமாகவும், பொறுமையாகவும் இருந்தவரை, உம்முடன் ஒரு மலக்கு இருந்து கொண்டு உமது சார்பாக பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு நீர் அவருடைய சில வார்த்தைகளுக்குப் பதில் கொடுத்ததும், (அந்த மலக்கு போய்விட்டார்) ஷைத்தான் வந்துவிட்டான், நான் ஷைத்தானுடன் அமர்வதில்லை (ஆகவே எழுந்து வந்து விட்டேன்)” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

وَقُل لِّعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ

(நபியே)! என்னுடைய அடியார்களுக்கு, எது மிக அழகியதோ, அதனையே அவர்கள் பேசவேண்டும் என்று கூறுவீராக!

— சூரா பனீஇஸ்ராயீல்: 53

ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டு விடுவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நன்மையற்ற பேச்சுக்களில் ஈடுபடாதீர்கள். அது உங்களைப் பாவங்களுக்கு இட்டுச் செல்லும்.
நாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரியாதவர்களிடம் அமைதியின்மையும், அவமானமும் வந்தடையும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version