இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَمَا تُنفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்.

— அல்பகரா : 272

பிறருக்குச் செய்யும் உதவிகளில் விளம்பரம் தேடவே கூடாது. ஒருவனுக்குச் செய்யும் உதவிகளை சொல்லிக் காட்டக்கூடாது. இவ்வாறு செய்தால், செய்த நற்செயலுக்கு ஸவாபு கிடைக்காது. மேலும் பாவமும் எழுதப்பட்டுவிடும்.

சிலர் பள்ளிவாசல், மதரஸா போன்ற பொதுக்காரியங்களுக்கு அரிசி போன்ற பொருட்களை தர்மம் செய்து அதிலும் விளம்பரம் தேடுகின்றனர்.

யாருக்காவது உபதேசம் செய்துவிட்டு, நான்தான் அவனைத் திருத்தினேன் என்று கூறுவது கடுமையாக வெறுக்கத்தக்கது.

மின் சாதனங்கள் அமைப்பது, கட்டடம் கட்டி கொடுப்பது போன்றவற்றை செய்துவிட்டு அப்பொருட்களிலேயே தங்கள் பெயரை குறித்த பலகைகளையும், கல்வெட்டையும் வைத்துவிடுகின்றனர்.

இத்தகைய செயல்களை, நபி(ஸல்) அவர்கள் கடுமையாக வெறுத்துள்ளார்கள். செய்யும் உதவிகளுக்கு இறைவனிடம் மட்டுமே பலனை எதிர்பார்க்க வேண்டுமே தவிர, மனிதர்களிடம் அல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

அல்லாஹ் இந்த பூமியைப் படைத்தபோது இது தடுமாறியது. நிலையற்ற நிலையில் இருந்தது. ஆகவே, அல்லாஹ் அதில் மலைகளை நங்கூரமாக அமைத்தான். பூமி ஒரு நிலையில் நிலைத்து நின்றது.

மலக்குகள் இதனைக் கண்டு திகைத்து, அல்லாஹ்வைப் பார்த்து, “எங்கள் இறைவனே! மலைகளை விடக் கடினமான ஒன்றை படைத்திருக்கிறாயா?” என்று கேட்டனர்.

அதற்கு இறைவன் “ஆம், இரும்பு மலைகளைவிடக் கடினமானது” எனக் கூறினான்.

வானவர்கள் மீண்டும், “இரும்பைவிடக் கடினமான ஒன்றை படைத்திருக்கிறாயா?” எனக் கேட்க, இறைவன் “தீ இரும்பை விட பலமானது” எனக் கூறினான்.

“தீயைவிட பலம் பொருந்திய ஒன்றை படைத்திருக்கிறாயா” என மலக்குகள் கேட்க, “ஆம். தண்ணீர் தீயைவிட பலமிக்கது” என இறைவன் கூற, “நீ படைத்தவற்றில் தண்ணீரை விட ஆற்றல் மிக்கது ஏதேனும் இருக்கிறதா?” என மீண்டும் கேட்க, “ஆம் காற்று, தண்ணீரைவிட ஆற்றல் மிக்கது” என்றான் இறைவன்.

மேலும், காற்றைவிட ஆற்றல் மிக்க ஏதேனும் ஒன்றைப் படைத்திருக்கிறாயா? என வானவர்கள் கேட்க, அதற்கு “ஆம், ஆததின் மகன் (மனிதன்) ஆற்றல் மிக்கவன்; ஆனால் அவன் தனது வலதுகரம் கொடுப்பதை இடதுகரம் அறியாவண்ணம் உதவி செய்பவனாக இருக்க வேண்டும்” என்று கூறினான்.

— திர்மிதி

பூமியிலுள்ள சகல படைப்புகளை விட மேலானவனாகவும், பலமிக்கவனாகவும் மனிதனை இறைவன் படைத்திருக்கிறான். பிறர் அறியாவண்ணம் ரகசியமாக ஒருவருக்கு செய்யும் உதவிகள்தான் மனிதனை பலப்படுத்துகிறது. ஒருவருக்கு பொருளால், ஆலோசனையால், சிபாரிசு செய்வதால், நன்மையான காரியங்களை கற்றுக் கொடுப்பதால், துஆச் செய்வதால் ஆகிய அனைத்துமே உதவிகள்தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

மறுமை நாளில் அல்லாஹுதஆலா எல்லா மக்களையும் ஒன்று சேர்த்ததும், அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டிய அமலில், பிறரையும் அதில் எவர் கூட்டாக்கினாரோ, அவர் அதனுடைய நன்மையை அவரிடமே சென்று பெற்றுக்கொள்ளட்டும் என்று இறைவன் கூறுவான்.

— திர்மிதி

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version