இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ‘இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது’ என்று கூறியவுடன் அங்கிருந்த நபித்தோழர்கள், ‘யாரஸூலல்லாஹ்! அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவும் அல்லாஹ் நேசிக்கிறானா?’ என்று கேட்டபோது, ‘ஆம்!’ என்று கூறி விட்டு ‘என்றாலும் அறப்போரில் தனது உயிரையும், பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர’ என்று கூறினார்கள்.

– புகாரி

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் அற்புதமான வாய்ப்பே துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்! துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் அல்ஃபஜ்ர் அத்தியாயத்தில் இப்படிக் கூறுகிறான்:

وَالْفَجْرِ * وَلَيَالٍ عَشْرٍ

‘விடியற்காலையின் மீது சத்தியமாக! மேலும், பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக!’

– சூரா அல்ஃபஜ்ர் : 1,2

படைத்த இறைவனே சத்தியமிட்டுக்கூறி இந்த நாட்களின் கண்ணியத்தை உணர்த்துகின்றான்.

பத்து இரவுகள் என்று இங்கு குறிப்பிடுவது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களே என இப்னு அப்பாஸ் (ரலி), இமாம் இப்னு கஸீர் (ரஹ்), இப்னு சுபைர் (ரஹ்), முஜாஹித் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றை ஆதாரமாக குறிப்பிடுகின்றார்கள். – இப்னு கஸீர்

‘அல்லாஹ்வின் பெயரை குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் கூறுவதற்காகவும்…

لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ

– சூரா அல்ஹஜ் : 28

என்ற வசனத்திற்கு விளக்கம் தருகிற போது இப்னு عباس (ரழி) கூறினார்கள்: ‘குறிப்பிட்ட நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும்.’

– தஃப்ஸீர் இப்னு கஸீர்

இந்த துல்ஹஜ் முதல் பத்து நாட்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதை, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “வேறு எந்த நாட்களில் செய்யும் நல்அமல்களைவிட, துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடியவைகள் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இருக்கின்றன.

ஆகவே, தஹ்லில் (லாஇலாஹ இல்லல்லாஹ்), தக்பீர் (அல்லாஹு அக்பர்), தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

– அஹ்மத்

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களும் துல்ஹஜ் பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.

– புகாரி

உமர் (ரலி) அவர்கள் மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும், கடைத்தெருக்களில் உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும், படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்.

– புகாரி

எனவே, மேற்கூறிய குர்ஆன் வசனத்தின் மூலமும், ஹதீஸின் மூலமும், நபித்தோழர்கள், இமாம்கள் ஆகியோருடைய விளக்கங்களின் மூலமும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்புக்குரியது என்பதை விளங்க முடிகிறது.

அரஃபா நாள் துல்ஹஜ் பிறை-9 அன்று சுன்னத்தான நோன்பு நோற்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அழகிய நடைமுறையாகும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும். இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து, இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

– முஸ்லிம்

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் அனைத்து முக்கிய வணக்கவழிபாடுகளும் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்.’

பாக்கியம் நிறைந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் அமல்கள் செய்யும் பாக்கியத்தையும், அல்லாஹ்வின் நெருக்கத்தையும் தந்து அருள்வானாக!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version