இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

மதீனாவில்…

நபி(ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தார்கள். பள்ளிவாசல் சென்று இரண்டு ரகஅத் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தால் பள்ளிக்குச் சென்று இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு, பிறகு ஹஜ்ரத் ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அதற்குப் பிறகு தங்கள் பரிசுத்த மனைவியரின் வீடுகளுக்குச் செல்வார்கள்.

இவ்வாறே, ஒருமுறை பயணத்திலிருந்து திரும்பி வந்தவர்கள், மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு முதலில் சென்றார்கள்.

மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் வீட்டுவாசலுக்கு வந்து தங்களது தந்தை நபி(ஸல்) அவர்களை வரவேற்று அன்னாரின் புனித முகத்திலும், கண்களிலும் முத்தமிட்டு அழலானார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமாவே! ஏன் அழுகிறாய்’ என்று கேட்டதற்கு, ‘யா ரஸூலல்லாஹ்! தங்களுடைய நிறம் மாறிவிட்டது. தங்களுடைய ஆடைகள் பழையதாகிவிட்டன. இவைகளை நினைத்து அழுகிறேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமாவே! அழாதே! அல்லாஹ் உன்னுடைய தந்தையிடம் ஒரு காரியத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளான். அல்லாஹுதஆலா அக்காரியத்தை இந்த பூமியின் மீதுள்ள குடிசை, மாளிகை தோலினால் ஆன கூடாரம் அனைத்திலும் கண்ணியமாகவோ, கேவலமாகவோ, (மக்கள் மனம் விரும்பியோ, நிர்பந்தமாகவோ) நுழைய வைக்காமல் விடமாட்டான். இறுதியாக இரவு சென்றடையும் இடம் வரை அக்காரியம் சென்றடையும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கா நகரில்….

ஹழ்ரத் முனீப் அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் நபி(ஸல்) அவர்களை அறியாமைக் காலத்தில் பார்த்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் மக்காவில், ‘மக்களே! லாஇலாஹ இல்லல்லாஹு கூறுங்கள், வெற்றியடைவீர்கள்!’ என்று கூறுவார்கள். அப்போது சிலர் அன்னாரின் திருமுகத்தில் எச்சில் துப்பினர்; சிலர் அன்னாரின் மீது மண்ணை வாரியிறைத்தனர்; சிலர் அவர்களைத் திட்டினர். இவ்வாறு நடுப்பகல் வரை நடக்கும். பிறகு ஒரு சிறுமி, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்தார். அதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகம், கைகளைக் கழுவிக் கொண்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியை நோக்கி, ‘என் அன்பு மகளே! உன் தந்தை கொல்லப்படுவார் என்றோ கேவலப்படுத்தப்படுவார் என்றோ பயப்படாதே!’ என்று கூறினார்கள்.

‘இந்தப்பெண் யார்?’ என்று கேட்டேன். அவர்தாம் நபி(ஸல்) அவர்களின் மகளார், ‘ஜைனப்(ரலி) அவர்கள்’ என்று கூறினார்கள். அவர் அழகுமிக்க சிறுமியாக இருந்தார்கள்.

— தப்ரானீ

நபித்தோழர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒருநாள் குறைஷிகள் கஃபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது நபி(ஸல்) அவர்கள் மகாமே இப்ராஹீமுக்கு அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அன்னாரை நோக்கி, உக்பா என்பவன், நபி(ஸல்) அவர்களின் மேலங்கியால் அன்னாரின் கழுத்தை இருக்கி, பின்பு இழுத்தான். அதனால் நபி(ஸல்) அவர்கள் தங்களின் முட்டுக்கால்களால் மண்டியிட்டு விழும் அளவுக்குச் சென்று விட்டார்கள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அன்னார் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றெண்ணிக் கூச்சலிட்டனர். அப்போது ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கு விரைந்தோடி வந்து, நபி(ஸல்) அவர்களின் பின்புறமாக வந்து, அன்னாரின் இடுப்பைப் பிடித்துப் பாதுகாத்தார்கள்.

அப்போது அவர்கள், ‘என் இறைவன் அல்லாஹ் என்று சொன்ன ஒரே காரணத்திற்காகவா இந்த மனிதரைக் கொலை செய்ய முயற்சி செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

பிறகு மக்கள் நபி(ஸல்) அவர்களை விட்டுச் சென்றதும், நபி(ஸல்) அவர்கள் எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள். தங்களின் தொழுகையை முடித்துவிட்டுச் சென்றபோது, குறைஷிகள் கஃபாவின் நிழலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்களுடன் கஃபாவில் இருந்தோம். அபூஜஹ்ல், ஷைபா, உக்பா, உமையா இன்னும் இரு நபர்களைச் சேர்த்து, ஏழு நபர்கள் கஃபாவின் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்து ஸுஜுது செய்து, ஸுஜூதை நீண்ட நேரம் செய்தார்கள். அப்போது அபூஜஹ்ல், ‘உங்களுள் யார் இன்ன குடும்பத்தாரிடம் சென்று, அவர்களின் ஒட்டகக் குடலின் கழிவுகளைக் கொண்டுவருபவர்? அதை நபி(ஸல்) (நஊதுபில்லாஹ்) அவர்கள் மீது போட்டுவிடுவோம்’ என்று கேட்டான்.

அப்போது அவர்களுள் மிக துர்பாக்கியவானாகிய உக்பா, அதை எடுத்து வந்து, நபி(ஸல்) அவர்கள் ஸுஜுதில் இருந்தபோது, அன்னாரின் தோள்களின் மீது போட்டான். இதனால் அன்னார் அவர்களால் எழ முடியவில்லை.

அங்கு நின்ற நான், பார்த்துக் கொண்டிருந்தேனே தவிர, என்னால் அன்னாருக்கு உதவி செய்ய எந்த ஆற்றலும் இல்லாமலிருந்தேன்.

அந்நேரம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் இவ்விஷயம் கேள்விப்பட்டு விரைந்து வந்து நபி(ஸல்) அவர்களின் தோள் மீதிருந்த அசுத்தங்களை நீக்கிவிட்டு, குறைஷிகளிடம் வந்து, அவர்களைச் சத்தமிட்டார்கள். ஆனால் அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. பிறகு, நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதைப் பூர்த்தியாகச் செய்துவிட்டு அமைதியாக எழுந்தார்கள். எழுந்தவுடன், ‘அல்லாஹ்வே! குறைஷிகளை உன்னிடமே முறையிடுகிறேன் என்று மூன்றுமுறை கூறிவிட்டு, உத்பாவையும், உக்பாவையும், அபூஜஹ்லையும், ஷைபாவையும் உன்னிடமே முறையிடுகிறேன்’ என்று கூறிவிட்டு, பள்ளியிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.

தாயிஃப் நகரில்…

நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்புக்காக தாயிஃப் நகர் சென்று அங்கிருந்த தலைவர்களைச் சந்தித்து, அழைப்புக் கொடுத்தார்கள். அவர்கள் மறுத்ததோடு, நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சிறுவர்களும், பெண்களும் அணிவகுத்து நிற்கச்செய்து, அன்னாரை இழிவான சொற்களைக் கொண்டு ஏசியும், சிலர் அன்னாரின் வாயின் மீது கற்களை எறிந்தும், இன்னும் அன்னார் அடியெடுத்து வைக்கக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கால்களில் கல்லை எறிந்து காயப்படுத்தி இரத்தம் வழிந்தோடச் செய்தனர்.

நபி(ஸல்) அவர்கள், அம்மக்களை விட்டு தனித்து வந்தபோது அன்னாரின் இரண்டு புனித பாதங்களிலும் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள், தாயிஃபில் துன்பம் அடைந்தது போன்று வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வளவு துன்பம் அடைந்ததில்லை என்று அவர்களே கூறியுள்ளார்கள்.

உஹதுப் போரில்…

நபித்தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உஹதுப் போரின்போது, நான் நபி(ஸல்) அவர்களுக்கு மிக அருகில் இருந்தேன். எனக்கும் இணைவைப்போருக்கும் இடையில் ஒருவர் விரைவாக வாள் வீசி எதிரிகளை தடுத்துக்கொண்டிருந்தார். அவர் யார் என்று பார்த்தபோது, ஹழ்ரத் அபூஉபைதா (ரலி) அவர்கள். நாங்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களை நெருங்கி வந்து பார்த்தபோது, அன்னாரின் புனிதப் பல்லொன்று உடைக்கப்பட்டு, தலைக்கவசத்தின் வளையங்களில் இருவளையங்கள் நபி(ஸல்) அவர்களின் புனித முகத்தில் குத்திக் காயம் உண்டாக்கியிருந்தது.

அச்சமயம் நபி (ஸல்) அவர்கள், உங்களின் நண்பரைக் கவனியுங்கள் என்று ஹழ்ரத் தல்ஹா (ரலி) அவர்களைச் சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் தாக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். ஆனால் எங்களுள் யாருக்கும் அதன் பக்கம் கவனம் திரும்பவில்லை.

நான் நபி(ஸல்) அவர்களின் முகத்தில் குத்தப்பட்டிருந்த அந்த வளையங்களைக் கழற்றுவதற்கு முற்பட்ட போது, ஹஜ்ரத் அபூஉபைதா (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கேட்கிறேன். தாங்கள் எனக்கு இந்தப் பணியை விட்டுத்தந்தால் நான் முடித்துவிடுவேன்’ என்றதும், நான் அவருக்கு விட்டுக்கொடுத்தேன். காரணம் என் கையால் அதைப் பிடுங்கி, அதனால் நபி(ஸல்) அவர்களுக்குத் துன்பம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அவர், தமது வாயால் அந்த வளையத்தைக் கடித்து இழுத்தார். அதனால் ஒரு வளையத்தோடு நபி(ஸல்) அவர்களின் ஒரு பல்லும் சேர்ந்து வந்து விழுந்தது. அவ்வாறே மற்றொரு வளையத்தையும் எடுத்துவிடலாம் என்று அவர்கள் செய்தது போல் நான் செய்ய முற்பட்டேன். அப்போதும் ஹஜ்ரத் அபூஉபைதா (ரலி) அவர்கள், எனக்கே இந்தப் பங்கையும் தாங்கள் விட்டுத்தரும்படி சத்தியமிட்டுக் கேட்கிறேன்’ என்று கூறினார்கள்.

முதல் தடவை பிடுங்கியது போலவே இம்முறையும் பிடுங்கும் போது நபி(ஸல்) அவர்களின் மற்றொரு பல்லும் அடுத்த வளையத்தோடு வந்து விட்டது. மேலும், இப்போரில் நபி(ஸல்) அவர்கள் தங்களது சிறிய தந்தையையும் இன்னும் எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்களை இழந்தும் பெரிய துன்பத்திற்குள்ளானார்கள்.

இன்னும் இதுபோல் நபி(ஸல்) அவர்கள் அடைந்த துன்பங்கள் ஏராளம்! ஏராளம்.!! அந்தத் துன்பங்களை எவ்வாறு பொறுமையுடன் எதிர்கொண்டார்கள் என்பது நமக்குப் பெரும் படிப்பினையாகும்.

யா அல்லாஹ்! நபி(ஸல்) அவர்களின் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும், அவர்களுடைய தோழர்கள் மீதும் என்றென்றும் நிலைத்த உன் ஸலாமத்தை இறக்கி அருள்புரிவாயாக!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version