இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் ‘ஹன்தக்’ (அகழ் யுத்தம்) நடைபெற்றது.

இதில் குறைஷியர்களும் யூதர்களுமாகச் சேர்ந்து இருபத்தி நான்காயிரம் நபர்கள் கொண்ட ஒரு பெரிய படையைத் திரட்டிக்கொண்டு மதீனா நகரைத் தாக்குவதற்காக வந்தனர்.

இதனால் நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை அழைத்து, ஆலோசனை செய்தார்கள். வரும் எதிரிகளை எதிர்கொள்ள பலரும் பல அபிப்பிராயங்களைக் கூறினர்.

பாரசீகத்தைச் சேர்ந்த நபித்தோழர் ஸல்மான் (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் அகழ் (பள்ளம்) தோண்டும் அபிப்பிராயத்தைக் கூறினார். அகழ் தோண்டி எதிரிகளை பலவீனமடையச் செய்வது பாரசீகர்களின் யுத்த முறையாக இருந்தது.

நபித்தோழர் ஸல்மான் ஃபார்சி (ரலி) அவர்களுடைய ஆலோசனைப்படி நபி(ஸல்) அவர்கள், மதீனாவைச் சுற்றி அகழ் (பள்ளம்) வெட்ட ஏற்பாடு செய்தார்கள்.

மதீனா நகரைச் சுற்றி மூன்று திசைகளில் கட்டிடங்களும், தோட்டங்களும் சிறுசிறு குன்றுகளாக இருந்தபடியால் அம்மூன்று திசைகளுக்கும் அவைகளே பாதுகாப்பாக (அரண்களைப் போல்) அமைந்துவிட்டது.

நான்காவது திசை ஷாம் (சிரியா) தேசத்தை நோக்கி திறந்த வெளியாக இருந்தது. எனவே அப்பகுதியில் மட்டும் அகழ் தோண்டுவதற்கு மூவாயிரம் ஸஹாபாக்களுடன் சென்று எந்தெந்த கோணங்களில் அகழ் தோண்டவேண்டுமென்ற விவரத்தைக் கோடிட்டுக் காட்டினார்கள்.

இருபது முழம் அகலமும், பத்து முழம் ஆழமும் கொண்ட அகழியை பத்துப் பத்து நபர்களாகச் சேர்ந்து தோண்ட வேண்டுமென்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும்.

இவ்விதம் உத்தரவு பிறப்பித்துவிட்டு நபி(ஸல்) அவர்களும் இந்த பணியில் ஈடுபட்டார்கள். தோண்டப்பட்ட மண்ணைச் சுமந்து ஓரிடத்தில் குவிக்கும் பணியிலும், சில சமயம் பள்ளம் தோண்டும் பணியிலும் ஈடுபட்டார்கள்.

அகழ் தோண்டும் பணியில், நபி(ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் மூன்று நாள் வரை தொடர்ச்சியாக பட்டினியில் இருக்க நேர்ந்தது.

வேலை செய்யும் பொழுது, பசியின் மிகுதியால் முதுகு வளையாமல் இருக்க வயிற்றில் கற்களை வைத்துக் கட்டிக் கொள்வது அரேபியர்களின் வழக்கம். அப்படி நபித்தோழர்கள் தங்கள் வயிறுகளில் கற்களைக் கட்டிக் கொண்டு வேலை செய்தார்கள்.

ஸஹாபாக்களில் சிலர் பசிக்கொடுமை தாளாமல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தங்களது வயிறுகளைத் திறந்து காட்டினர். ஒவ்வொருவருடைய வயிற்றிலும் ஒரு கல் வைத்து கட்டப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் தங்களது மேலாடையைத் திறந்து காட்ட, வயிற்றில் இரண்டு கற்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன.

இச்சந்தப்பத்தில்தான் அற்புத சம்பவம் ஒன்று நடந்தது. அதனை நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

‘நபி (ஸல்) அவர்கள் வயிற்றில், கல் வைத்துக் கட்டப்பட்டிருப்பதை நான் பார்த்தேன். பசி மிகுதியால்தான் அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று நான் அறிந்து கொண்டு என் தந்தையிடம் வந்து, நபி(ஸல்) அவர்களின் நிலைமையை எடுத்துச் சொன்னேன்.

அதைக் கேட்டதும் என் தந்தை வெளியில் சென்று கொஞ்சம் கோதுமை வாங்கி வந்தார்கள். என் தாயார் அதை மாவாக்கி ஒரே ஒரு ரொட்டி செய்து வைத்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் பசியை மட்டும் தணிக்கப் போதுமானதாக இருந்தது. அவர்களுடன் சேர்ந்து யாரும் உடன் வந்துவிட்டாலோ யாருடைய பசியும் தணியாது’.

என் பெற்றோர்கள் என்னிடம், ‘நபி(ஸல்) அவர்கள் தனிமையில் இருக்கும்போது விஷயத்தைச் சொல்லி உணவு உண்ண அவர்களை மட்டும் அழைத்து வரும்படி கூறினார்கள்’.

நான் சென்றபோது, நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. நான் தயங்கியபடி நின்றேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ‘அனஸே! உம் தந்தையார் உம்மை அனுப்பினாரா?’ என்று வினவினார்கள்.

நான், ‘ஆம்!’ என்றேன். ‘சாப்பிடவா?’ என்றார்கள். அதற்கும் நான், ‘ஆம்!’ என்றேன்.

உடனே நபி(ஸல்) அவர்கள், கூட்டத்தினரை நோக்கி, ‘எல்லோரும் அபூதல்ஹா வீட்டிற்குப் போகலாம். அங்கு நம் அனைவருக்கும் இன்று விருந்து’ என்று கூறி எழுந்தார்கள்.

நான் பதறியபடி ஓடி வந்து என் தந்தையிடம், ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தையே திரட்டிக்கொண்டு வருகிறார்கள்’ என்று சொன்னேன். ‘அல்லாஹ்வும், அவனது ரஸூலும் இதனை அறிவார்கள்’ என்று தந்தை கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் புடை சூழ வீட்டின் சமீபமாக வந்ததும், என் தந்தை முன் சென்று அவர்கள் அனைவரையும் வீட்டினுள் அழைத்து வந்தார்கள்.

அங்கு ஒரே ஒரு ரொட்டியும் அதன் அருகே ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய்யும் வைக்கப்பட்டிருந்தது.

ரொட்டியின் மேல் நெய்பாத்திரத்தைக் கவிழ்க்க, அதிலிருந்து சில துளிகள் நெய் விழுந்தது. அதை நபி(ஸல்) அவர்கள் தங்களது பரக்கத் பொருந்திய கரத்தால் ரொட்டியின் மீது பரவலாகத் தடவவே, அது பொங்கி பெரிதானது. அதை எல்லோருக்கும் முன்னால் கொண்டு வந்து வைத்து, இறைவனின் திருநாமமாகிய ‘பிஸ்மில்லாஹ்’ கூறி, ‘இறைவா! இதில் உன்னுடைய பரக்கத்தை அதிகமாக்கு!’ என்று கூறினார்கள்.

பின்னர் பத்துப்பத்து நபர்களாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். எல்லோரும் குறைவின்றி நிறைவோடு உண்டு முடித்தனர்.

மீண்டும் சென்று அகழ் தோண்டும் பணியைத் தொடர்ந்தனர். இந்நிலையில் ஸஹாபாக்கள் அகழ்வெட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய பாறை குறுக்கிட்டது. அதை உடைத்தெறிய ஒவ்வொருவரும் இயன்றவரை முயன்றனர். யாராலும் அதை உடைக்க முடியாமல்போகவே அதை அப்படியே விட்டு விட்டு மறுபக்கத்தில் அகழ் தோண்டுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்பாறையின் பக்கம் வந்து, ஒரு நபித்தோழரின் கையிலிருந்த சம்மட்டியை வாங்கிக் கொண்டு அகழிக்குள் இறங்கினார்கள்.

பாறையை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு தங்கள் கையிலிருந்த சம்மட்டியால் ஓங்கி பாறையில் ஒரு அடி அடித்தார்கள். அது பிளவுபட்டது. அப்பிளவுக்குள்ளிருந்து ஒரு ஒளி வீசியது. அதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கு ‘ஷாம்’ (சிரியா) மாகாணத்தின் திறவுகோள் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று கூறி, ‘அல்லாஹு அக்பர்’ என்ற தக்பீரை முழங்கினார்கள். அங்கு கூடியிருந்த ஸஹாபாக்களும் ‘அல்லாஹு அக்பர்’ என்று முழங்கினார்கள்.

இரண்டாவது தடவை அப்பாறையை சம்மட்டியால் அடிக்கவே, அது முன்னைவிட சற்று விரிவாக பிளவு ஏற்பட்டு, முன்போலவே அதன் இடைவெளியிலிருந்து ஒளி வெளிப்பட்டது. இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹு அக்பர், எனக்குப் பாரசீக தேசத்தின் (ஈரான் ஈராக்) திறவுகோள் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள்.

மூன்றாவது தடவையாக அடித்ததும் அப்பாறை பிளவுபட்டு முன்போலவே ஒளி வீசியது. நபி(ஸல்) அவர்கள், ‘எனக்கு யமன் தேசத்தின் திறவுகோள் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று கூறி அவர்கள் கண்ட அற்புதக் காட்சிகளை கீழ்வருமாறு விளக்கினார்கள்.

முதலாவதாக ரோம தேசத்து மன்னராகிய ‘கைஸர்’ உடைய ‘ஷாம்’ மாகாணத்தின் அரண்மனையும், இரண்டாவதாக, பாரசீக தேசத்தின் மன்னராகிய ‘கிஸ்ரா’வினுடைய ‘மதாயின்’ நகரத்து

அரண்மனையும், மூன்றாவதாக ‘ஏமன்’ தேசத்து தலைநகரான ‘சன்ஆ’ பட்டணத்தின் அரண்மனையும் எனக்குக் காட்டப்பட்டன.

இவைகளைத் தொடர்ந்து வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தோன்றி, ‘அத்தேசங்களை நீங்கள் வெற்றி கொள்வீர்கள்’ என்று அறிவித்துச் சென்றதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இருபத்தி நான்காயிரம் நபர்களைக் கொண்ட ஒரு பெரும் படையை எதிர்த்துப் போராட வேண்டிய சோதனைமிக்க நேரத்தில் கீர்த்தி மிகுந்த முப்பெரும் தேசங்கள் முஸ்லிம்களின் வெற்றிக் கோட்டைகளாக மாறும் என்ற சுபச்செய்தியை நபி(ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்தார்கள். இன்றளவும் இவைகள் இஸ்லாமிய நாடுகளாகவே திகழ்கின்றன.

ஒவ்வொரு கடும் சோதனைக்குப் பிறகும் வெற்றி காத்திருக்கிறது. ஆனால் அந்த சோதனையில் துவண்டு விடாமல் எதிர்கொள்ள வேண்டும். துன்பத்தை சாதனையாக்கும் மனப் பக்குவத்தையே இஸ்லாம் வழங்குகிறது.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version