இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் மிகுந்த தாராளத்தன்மை கொண்டவர்கள். தம்மிடம் உதவி நாடி வந்தவர்களை வெறும் கையாக அனுப்பமாட்டார்கள். தமக்கு ஏதும் அன்பளிப்புகள் வருமாயின், அதனை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்.

நபி(ஸல்) அவர்களது மறைவிற்குப் பிறகு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், தமக்கு வரும் எந்தப் பொருளையும் தங்களுக்கென்று வைத்துக்கொண்டதில்லை.

ஒருமுறை யமன் நாட்டிலிருந்து ஒரு இலட்சம் தீனார் கொண்ட அன்பளிப்பு வந்தது. அதில் ஒரு தீனார்கூட அன்னையவர்கள் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் தர்மம் செய்துவிட்டார்கள். மேலும், பைத்துல்மால் எனும் பொதுநிதியிலிருந்து வரும் பணத்தையும் உதவி தேடி வருபவர்களிடம் கொடுத்துவிட்டு, உலகப் பற்றற்ற வாழ்வை வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் ஒரு நாள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘அன்னை ஆயிஷா அவர்களே! தங்களின் சகோதரி அஸ்மா அவர்களின் மகன் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள், தாங்கள் பொருட்களைப் பிறருக்கு அன்பளிப்பு செய்துவருவது குறித்து, ‘என் பெரியன்னை (ஆயிஷா) அவர்கள் இவ்வாறு செய்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், நான் அவர்கள் மீது கட்டுப்பாடு விதிப்பேன்’ என்று கூறியதாக அன்னையவர்களிடம் கூறினர்.

இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ‘(இப்னு ஜுபைர்) அவரா அப்படி சொன்னார்?’ என்று வினவினார்கள். அதற்கு வந்தவர்கள், ‘ஆம்’ என பதிலளித்தார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘இப்னு ஜூபைரிடம் நான் இனி எப்போதும் பேசமாட்டேன்’ என்று சத்தியம் செய்து, அவரின் தொடர்பைத் துண்டித்துவிட்டார்கள்.

சிலமாதங்கள்வரை அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த நிலை நீடித்துக்கொண்டிருந்தது.

இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள், தம்மோடு ஆயிஷா (ரலி) அவர்கள் பேசவேண்டும் என்று வேண்டி சிபாரிசுக்காகப் பலரை அனுப்பிவைத்தார்கள். ஆனால், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. ‘இப்னு ஜுபைர் அவர்களின் விஷயத்தில் எவருடைய பரிந்துரையையும் நான் ஏற்கமாட்டேன். என் சத்தியத்தையும் முறிக்கமாட்டேன்’ என்று அன்னையவர்கள் கூறிவிட்டார்கள்.

தம் அன்னை தம்மிடம் பேசாமலிருப்பது இப்னு ஜுபைர் (ரலி) அவர்களுக்கு மிகவும் துன்பம் தரக்கூடியதாக ஆகிவிட்டிருந்தது. எனவே, மீண்டும் ஒருமுறை முயற்சிக்கும் பொருட்டு, நபித்தோழர் மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அவர்களிடமும், அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் (ரலி) அவர்களிடமும், ‘நீங்கள் எவ்வாறாயினும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்துவிடச் செய்யுங்கள். அவர்கள் என் உறவைத் துண்டித்துவிட்டார்கள்; மேலும் சத்தியமும் செய்துவிட்டார்கள். இது எனக்கு நல்லதல்ல’ என்று வேண்டிக்கொண்டார்கள்.

எனவே, மிஸ்வர் (ரலி) அவர்களும், அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும், இப்னு ஜூபைர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். வாசற்கதவை தட்டினார்கள்; ஸலாம் கூறினார்கள். பிறகு, ‘நாங்கள் உள்ளே வரலாமா?’ என்று வினவினார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்! நீங்கள் உள்ளே வரலாம்’ என்று பதிலளித்தார்கள். வந்தவர்கள் மீண்டும், ‘நாங்கள் அனைவரும் வரலாமா?’ என்று வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நீங்கள் அனைவரும் வரலாம்’ என்று அனுமதியளித்தார்கள்.

வந்திருப்பவர்களுடன் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களும் இருக்கின்றார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் மூவரும் வீட்டினுள் நுழைந்ததும், இப்னு ஜூபைர் (ரலி) அவர்கள் மட்டும், திரை மறைவில் இருந்த தம் பெரியன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றுவிட்டார்கள்.

இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களிடம், ‘தாங்கள் என் தவறை மன்னித்து விடுங்கள்’ என்று அழுதுகொண்டே கூறினார்கள்.

மற்றொரு புறம், மிஸ்வர் (ரலி) அவர்களும், அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் அன்னையவர்களிடம், ‘எங்களின் அன்னையே! இப்னு ஜுபைர் அவர்களை தாங்கள் மன்னித்து, அவருடன் பேச ஆரம்பித்து விடுங்கள்; அவர் பெரும்துன்பத்தில் இருக்கிறார்’ என்று கூறினார்கள். மேலும், ‘மூன்று நாட்களுக்குமேல் தன் சகோதரனுடன் உறவைத் துண்டித்து வைப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதையும் நினைவூட்டினார்கள்.

அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், அழுதுகொண்டே, ‘நான் சத்தியம் செய்து விட்டிருக்கிறேன். சத்தியம் செய்ததால் இந்த விஷயம் கடுமையானதாகி விட்டதே! என்று கூறினார்கள்.

அவ்விரு நபித்தோழர்களும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்தனர். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்கள், தமது சத்தியத்தை முறித்து இப்னு ஜுபைர் அவர்களிடம் பேசினார்கள். சத்தியத்தை முறித்ததற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை உரிமை விட்டார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தமது இந்த செயல் நினைவுக்கு வந்துவிட்டால் அழ ஆரம்பித்து விடுவார்கள். அதனால் அவர்கள் அணிந்திருக்கும் துப்பட்டி நனைந்துவிடும். இவ்வாறு இதனை நினைத்து அழுவது, ஆயுள் முழுவதும் அவர்களது வழக்கமாக இருந்தது.

இதுதான் நபித்தோழர்களின் உயர்வான பண்பாக இருந்தது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், தாம் செய்து வரும் தர்மத்தைக் குறித்து தமது சகோதரி மகன் நிறுத்தச்சொன்னதற்காக எந்தளவுக்கு கோபப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு நற்செயல்களின் மீதிருந்த ஆர்வம் அவர்களைச் சத்தியம் செய்யும் அளவுக்குத் தூண்டிவிட்டது.

தமது அன்னை வறுமையில் கஷ்டப்படக்கூடாதே என அவர்களின் சகோதரி மகன் இப்னு ஜூபைர் (ரலி) அவர்கள் நினைத்தது அவர்கள் தம் அன்னை மீது வைத்திருந்த பாசமே தவிர, நற்செயலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. கொடைத்தன்மை வாய்ந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இச்சம்பவம் முஸ்லிம்களுக்குப் படிப்பினையாகும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தை ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களும் பெரும் கொடையாளியாக இருந்தவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தையும், தன்னுடைய நெருங்கிய தோழருமான ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றி, ‘அபூபக்ருடைய செல்வம் இஸ்லாத்திற்கு பலனளித்தது போன்று வேறு எவருடைய பொருளும் பலனளித்ததில்லை. நான் எல்லா மனிதர்களுடைய உபகாரங்களுக்கும் பிரதி உபகாரம் செய்துவிட்டேன். ஆனால், அபூபக்ர் அவர்கள் எனக்கு செய்த உபகாரங்களுக்கு அல்லாஹ் தான் அவர்களுக்குப் பிரதிபலன் தருவான் என நபி(ஸல்) அவர்கள் சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version