இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை எதிர்ப்பதில் ஹஜ்ரத் உமர் அவர்கள் தீவிரம் காட்டினார்கள்.

இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் வியாழன் அன்று இரவு உமர் அவர்கள் நேர்வழி பெற வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார்கள். அதன் பரக்கத்தால் அடுத்தநாள் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அடுத்தநாள், மக்காவில் உமர் (ரலி) அவர்கள் தோளில் வாளைத் தொங்கவிட்டு மிக வேகமாக ஆக்ரோசத்துடன் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் பனூ ஜூஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அன்னாரைச் சந்தித்து, ‘உமரே! எங்கு செல்கிறீர்?’ என்று விசாரித்தார்கள்.

‘நான் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்யச் செல்கிறேன்’ என்று கூறினார்கள். ஹழ்ரத் ஸஅத் (ரலி) அவர்கள், ‘நீர் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்தால் பனூஜுஹ்ரா, பனூஹாஷிம் கிளையார்கள் உம்மை உயிரோடு விட்டுவைப்பார்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘ஓகோ! நீரும் உமது மார்க்கத்தை விட்டு மதம் மாறிவிட்டாய் போலும்!’ என்று கூறினார்கள். ஹஜ்ரத் ஸஅத் (ரலி) அவர்கள், ‘இதைவிட ஆச்சரியமான ஒரு விஷயத்தை உமக்கு அறிவிக்கட்டுமா?’ என்று வினவினார்கள்.

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள், ‘அது என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் (ரலி) அவர்கள், ‘உம் சகோதரியும், அவருடைய கணவரும் உம் மார்க்கத்தை விட்டு மதம் மாறிவிட்டார்கள்’ என்று கூறினார்கள்.

உடனே ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் கடும் கோபம் அடைந்தவர்களாக தம் சகோதரியின் இல்லத்தை நோக்கி விரைந்தார்கள். அங்கு முஹாஜிரீன்களில் ஒருவரான ஹஜ்ரத் கப்பாப் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் வருகையை உணர்ந்த கப்பாப் (ரலி) அவர்கள் வீட்டினுள் மறைந்து கொண்டார்கள். அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும், ‘ஏதோ புதிய விஷயம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதே! அது என்ன?’ என்று விசாரித்தார்கள். அப்போது அவர்கள் வீட்டினுள் ‘சூரா தாஹா’வை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

சகோதரியும் அவரது கணவரும், ‘நாங்கள் எங்களுக்கு இடையே பேசிக் கொண்டிருந்தோம்’ என்று கூறினர்.

உமர் அவர்கள், ‘நீங்கள் இருவரும் மதம் மாறிவிட்டதைப் போல் தெரிகிறதே!’ என்று கூறினார்கள்.

அதற்கு அன்னாருடைய சகோதரியின் கணவர் ஹஜ்ரத் சயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்கள், ‘உமரே! வேறு மார்க்கத்தில் உண்மை இருந்தாலுமா நாம் அதைத் தேர்ந்தெடுக்கக்கூடாது?’ என்று கேட்டதும், உமர் அவர்கள் அன்னாரின் மீது பாய்ந்து, கடுமையாகத் தாக்கவே, உமர் (ரலி) அவர்களின் சகோதரி தம் கணவரைக் காப்பாற்ற தம் சகோதரரிடமிருந்து இழுத்தார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் தம் சகோதரியின் முகத்தில் கடுமையாகத் தாக்கி இரத்தம் வழியச் செய்தார்கள்.

அதனால் கடும் கோபம் கொண்ட அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் கத்தாப் (ரலி) அவர்கள், ‘உமரே! நிச்சயமாக உண்மை உமது மார்க்கத்தில் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நிச்சயமாக முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறி முஸ்லிமாகி விட்டேன்’ என்று சொன்னார்கள்.

ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் தம் சகோதரியின் உறுதியைப் பார்த்து, மனமாற்றம் செய்வதிலிருந்து நிராசையாகி, ‘நீங்கள் ஏதோ ஒன்றை வைத்துப் படித்துக் கொண்டிருந்தீர்களே! அதை என்னிடம் தாருங்கள்!’ என்று கேட்டார்கள். அதை அவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

அதை அவர்கள் கையில் கேட்டதற்கு, ஹழ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள், ‘நீர் அசுத்தமானவர்; இதைப் பரிசுத்தமானோர் தாம் தொடுவார்கள். ஆகவே, நீர் முகம்,கை கால்களைக் கழுவி வருக!’ என்று கூறினார்கள்.

அதன்பிறகு உமர் (ரலி) அவர்கள் ஒலு செய்துவிட்டு வந்து, அந்த வேதத்தில் இருந்த சூரா தாஹாவை ஆரம்பத்திலிருந்து… ‘நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஆகவே, என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுகையை நிலைநாட்டி வாருங்கள்’ என்ற பதினான்காவது வசனத்தை ஓதிப் பார்த்து விட்டு, ‘எனக்கு நபி(ஸல்) அவர்கள் எங்கு உள்ளார்கள் என்று காண்பியுங்கள்!’ என்று கூறினார்கள்.

அப்போது வீட்டினுள் மறைந்து கொண்டிருந்த ஹஜ்ரத் கப்பாப் (ரலி) அவர்கள், ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் மனமாற்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்து வெளியே வந்து, ‘உமரே! உமக்கு ஒரு நற்செய்தி! நேற்று வியாழன் இரவு நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இஸ்லாமிய மார்க்கத்தை உமர் இப்னுல் கத்தாப் அல்லது அம்ரிப்னுல் ஹிஷாம் (அபூஜஹ்ல்) ஆகிய இருவருள் ஒருவரின் மூலம் கண்ணியப்படுத்தி பலப்படுத்துவாயாக!” என்று அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையை உம் விஷயத்தில் அல்லாஹ் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்று நான் நம்புகிறேன்’ என்று கூறினார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள், ஸஃபா மலையடிவாரத்தில், ஹஜ்ரத் அர்கம் (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்த நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

அவ்வீட்டுக் கதவருகில் ஹஜ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களும், தல்ஹா (ரலி) அவர்களும் இன்னும் பல ஸஹாபாக்களும் அமர்ந்திருந்தனர்.

ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் வருகையில் அங்கிருந்தவர்களின் பயஉணர்ச்சியைப் பார்த்த ஹழ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்கள், ‘ஆம்! இதோ உமர் வருகிறார்! உமருக்கு அல்லாஹ் நலவை நாடினால் அவர் இஸ்லாத்தை ஏற்று, நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பார். இல்லை என்றால் அவரைக் கொலை செய்வது எனக்கு மிக எளிதானது’ என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், வீட்டினுள் இருந்தார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ (இறை அறிவிப்பு) கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

உடனே நபி(ஸல்) அவர்கள் வாசலில் நின்று கொண்டிருந்த ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் மேலாடையை ஒன்று சேர்த்துப் பிடித்து, வாளுறையையும் பிடித்துக்கொண்டு, ‘உமரே! நீர் (துன்பம் தருவதிலிருந்து) விலகிக் கொள்ளமாட்டீரா? வலீத் இப்னு முஃகீராவுக்கு ஏற்பட்ட கேவலத்தையும், தண்டனையையும் அல்லாஹ் உமக்கும் இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னுல் கத்தாப் வந்து விட்டார்! இவர் மூலம் தீனுல் இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்துவாயாக!’ என்று துஆ செய்தார்கள்.

ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள், ‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்’ என்று கூறி முஸ்லிமானார்கள்;

பிறகு, ‘அல்லாஹ்வின் தூதரே! (மறைந்திருந்து வணங்கியது போதும்) வெளியே வாருங்கள்!’ என்று கூறி, அழைத்து பகிரங்கமாக வழிபட அழைத்தார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version