இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் பேரன்புடைய தோழர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.

உஹது போரில் நபி(ஸல்) அவர்களின் உடலுக்கு முன் கேடயம் போல் நின்று எதிரிகள் எய்த அம்புகள் அனைத்தையும் தன் உடம்பில் வாங்கி நபி(ஸல்) அவர்களைத் தன் உயிரை விட மேலாக பாதுகாத்தவர்.

நபி(ஸல்) அவர்களால் இவ்உலகிலேயே சுவர்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட நபித்தோழர்களில் இவரும் ஒருவராவார்.

மிகச் சிறந்த வியாபாரியும், உயர் பண்புடையவரும், பெருந்தன்மை உள்ளவரும், சிறந்த கொடையாளியாகவும் தல்ஹா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

பூமிக்கு மேல் நடமாடும் ஷஹீது (உயிர் நீத்த தியாகி) என பாராட்டை நபி(ஸல்) அவர்களிடம் பெற்றவர்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் நண்பராகவும், சிறந்த துணி வியாபாரியாகவும் இருந்தார்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலம் நபி(ஸல்) அவர்களை சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முதன்மையான எட்டு பேரில் இவர்களும் ஒருவர்.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதும், மக்கா குரைஷிகளின் எதிர்ப்புடன், இவரது வீட்டிலும் கொடுமைகள் தொடங்கி பெரும் இன்னலுக்கு ஆளானார்.

இவர்களின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லா இவரை தூணில் கட்டி வைத்து சவுக்கால் அடித்துத் துன்புறுத்தினர். உணவு அளிக்காமல் பட்டினி போட்டு கொடுமைகள் புரிந்தனர். இறைவனின் திருப்பொருத்தத்தை எண்னி அனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.

தல்ஹா (ரலி) அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட பின்னர், தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் விற்பனை செய்து, அந்த பணத்தின் மூலம் இஸ்லாமான நூறு அடிமைகளை வாங்கி அவர்களை உரிமை விட்டு, அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள், தல்ஹா (ரலி) அவர்களை கொடை கொடுப்பவர், வள்ளல் தன்மை மிக்கவர் என பாராட்டியுள்ளார்கள்.

மேலும், தன்னிடம் இருந்த நிலம் அனைத்தும், உஸ்மான் (ரலி) அவர்களிடம் விற்று, தபூக் யுத்தத்தில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தானம் செய்தார்கள்.

மேலும் போர் செய்யும் தோழர்களுக்கு ஆங்காங்கே உள்ள குடிநீர் நிலைகளை விலைக்கு வாங்கி தாகம் தீர்க்க அர்ப்பணித்தார்கள்.

மக்காவில் உத்பத் இப்னு ரபீஆவின் மகளான ஸபிய்யாவை மணந்து கொள்வதில் பெரும் போட்டி ஏற்பட்டது. பெண் கேட்டவர்களில் தல்ஹா (ரலி) அவர்களும் ஒருவர். “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என தல்ஹா (ரலி) கேட்டபோது, ஸபிய்யா அவர்கள் உடன் சம்மதித்தார்கள்.

பிறிதொரு காலத்தில் ஸபிய்யா (ரலி) அவர்களிடம், ‘ஏன் தல்ஹாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என கேட்ட போது, “தல்ஹா நல்லவர்; வள்ளல் தன்மை உள்ளவர்; நான் அவருக்கு வேலை செய்து கொடுத்தால் நன்றி பாராட்டுவார்; தவறு நிகழ்ந்தால் மன்னிப்பார் என்று அவர் குணத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டுள்ளேன்; அதனால்தான் நான் சம்மதித்தேன்” என்றார்கள்.

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வின் வீரத்தைப் பற்றி ஜாபிர் (ரலி) அறிவிப்பதை, இமாம் நஸயீ (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள்.

அதாவது, உஹத் போரில் எதிரிகள் நபி(ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அப்போது நபியவர்கள், “யார் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவார்?” என்று கேட்டார்கள். தல்ஹா (ரலி) “நான்” என்று முந்திக் கொண்டு பதில் கூறினார்கள்.

ஆனால், உடன் இருந்த அன்சாரிகளும் அதற்குத் தயாராகவே, நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு அனுமதியளித்தார்கள்.

ஒவ்வொரு அன்சாரியாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தினார்கள். அதற்கப் பின் தல்ஹா (ரலி) எதிரிகளுடன் சண்டையிட்டார்கள். அவர்களது சண்டை 11 நபர்களின் சண்டைக்குச் சமமாக இருந்தது. அவரது கையில் பல வெட்டுகள் விழுந்திருந்தன. சில விரல்கள் துண்டிக்கப்பட்டன.

நபி(ஸல்) அவர்கள் தல்ஹாவைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: யார் பூமிக்குமேல் நடமாடும் ஷஹீதை (உயிர் நீத்த தியாகியை) பார்க்க விரும்புகிறார்களோ, அவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வைப் பார்க்கட்டும்.

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உஹத் போர் முடிவுக்கு வந்தபின், ஒரு கணவாயை காக்க சில ஸஹாபாக்கள் காவல் காக்கத் தவறியதால், முஷ்ரிக்குகள் மறுபடியும் முஸ்லிம்களைத் தாக்க ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்திருந்ததால், சுதாரிக்க முடியாமல் நிலைகுலைந்து, என்ன நடக்கிறது என்றே புரியாத சூழல் ஏற்பட்டது. அப்போது, முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களை விட்டும் பல திசைகளில் சிதறிவிட்டார்கள்.

பின்பு நான்தான் முதலில் நபியவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்களுக்கு முன் ஒருவர் அவர்களைப் பாதுகாத்தவராக எதிரிகளிடம் சண்டை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

நான் மனதிற்குள், “நீ தல்ஹா தானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். எனக்குத் தான் வாய்ப்பு தவறிவிட்டது. எனது இனத்தைச் சேர்ந்த உனக்காவது நபியவர்களைப் பாதுகாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று கூறிக் கொண்டேன்.

அதற்குள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) பறவையைப் போன்று விரைந்து வந்து என்னை அடைந்தார். நாங்கள் இருவரும் நபியவர்களை நோக்கி விரைந்தோம்.

அங்கு நாங்கள் சென்றடையும் போது தல்ஹா (ரலி) நபியவர்களுக்கு முன் மயங்கி விழுகிறார்.

நபி(ஸல்) அவர்கள், ‘உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள்; அவர் தனக்கு சுவர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்’ என்று கூறினார்கள்.

மீண்டும் நபியவர்கள், ‘உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள்; அவர் தனக்கு சுவர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்’ என்று கூறினார்கள்.

நாங்கள் தல்ஹா (ரலி) அவர்களைத் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தோம். அவருக்கு பத்து வாள் வெட்டுகள் விழுந்திருந்தன. சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் மீண்டும் தல்ஹா (ரலி) நபியவர்களிடம் வந்துவிட்டார்கள்.

அவரது அடக்கஸ்தலம் ஈராக் நாட்டில் பஸரா நகரத்தில் உள்ளது. யா அல்லாஹ்! ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்களுக்கு கிருபை செய்வாயாக! ஆமீன்!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version