நல்ல பேச்சு
உங்கள் நாவு இருக்கிறதே, அது பயங்கரமானது. அதை அடக்கியாண்டு நற்சொல்லுக்குப் பழக்கப் படுத்துவது அவசியம். எப்போதும் நல்லதையே பேசிப் பேசிப் பழகுங்கள்; தீயதை விளையாட்டுக் காகவும் கூறாதீர்கள்.
உங்கள் நாவை இப்படிப் பழக்கப்படுத்தினால் வரக்கூடிய நன்மையை நீங்கள் தான் அடையப் போகிறீர்கள். நாவினால் வரக்கூடிய தீமைகளையும் நீங்கள்தான் சுமக்க போகிறீர்கள்.
எனவே உங்கள் நாவை நல்ல பேச்சுக்குப் பழக்கப்படுத்துங்கள். நீங்கள் எப்படிப் பழக்குகிறீர்களோ அப்படி அது வேலை செய்யும்.
தனிமையின் நன்மை
காலம் மாறிவிட்டது; சகோதரர்கள் மாறிவிட்டார்கள். தனிமையே உள்ளத்திற்கு அமைதி தரக்கூடியது என்பதைக் கண்டு கொண்டேன். கடந்துபோன நேற்றைய தினத்தைப் போல, கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் மனப்பான்மை மறைந்து போய்விட்டது. மக்கள் இன்று மதிமயக்கத்திலும் முரண் வழியிலும் இருக்கிறார்கள். தமக்கிடையே அன்பும் தூய்மையும் இருப்பதாக அவர்கள் பறையடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களை நச்சுத் தேள்கள் சூழ்ந்து கிடக்கின்றன.
இறைநேசர் சுப்யான் சவ்ரீ(ரஹ்), “ஏன் தனிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டபோது இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்.
