அல்லாஹ்வின் நேசர் ஹாதமுல் அஸம் (ரஹ்) அவர்கள், இறைநேசர் ஷகீக் பல்கீ (ரஹ்) அவர்களின் மாணவராவார்கள்.
இறைநேசர் ஹாத்தம் அஸம் (ரஹ்) அவர்களை ஜுனைதுல் பக்தாதி (ரஹ்), இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) போன்றோர் அடிக்கடி சந்தித்து இறையன்பைப் பெருக்கிக் கொண்டார்கள்.
ஹாத்தம் என்பதே இவர்களது இயற்பெயர். இவர்களது நன்னடத்தையால் அஸம் என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. ‘அஸம்’ என்றால் ‘செவிடர்’ என்று பொருள்.
அது எவ்வாறெனில், ஒருநாள் ஹாத்தம் அஸம் (ரஹ்) அவர்கள் தம் இல்லத்தில் அமர்ந்திருந்த போது, ஒரு பெண்மணி அவர்களைக் காண வந்து ஒரு விஷயம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அப்பெண்ணிற்கு காற்று சப்தத்துடன் பிரிந்துவிட்டது. இதனால் அப்பெண்ணிற்குச் சங்கடமான நிலை ஏற்பட்டு வெட்கத்தால் குன்றிப் போனார்.
இதைக் கவனித்த ஹாத்தம் அஸம் (ரஹ்) அவர்கள், அப்பெண்ணிடம், அப்பெண் பேசியது எதுவும் காதில் விழாதது போல் பாவனை செய்து, “சற்று உரத்துப் பேசுங்கள், எனக்குக் காது சரியாகக் கேட்காது” என்று கூறினார்.
“காற்றுப் பிரிந்த அந்த விஷயம் ஹாத்தம் அஸம் அவர்களுக்குக் கேட்கவில்லை போலும்” என்று அப்பெண்ணை இந்தப் பேச்சு நிம்மதியடைய வைத்துவிட்டது. அதன்பிறகு தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு அப்பெண் சென்றுவிட்டாள்.
இந்நிகழ்ச்சி நடந்து பதினைந்து ஆண்டுகள் வரை அப்பெண் உயிரோடிருந்தார். இந்தப் பதினைந்து ஆண்டுகளும் எல்லோரிடமும் செவிடர் போலவே நடந்து கொண்டார்கள்.
தாம் ஒரு செவிடரல்ல என்று அப்பெண்மணி அறிந்துவிடக் கூடாது என்பதில் ஹாத்தம் அஸம் அவர்கள் கவனத்துடன் இருந்தனர். அப்பெண் இறந்த பிறகே தாம் ஒரு செவிடரல்ல என்ற உண்மையைப் பிறர் அறிந்தனர். இதனால், ‘செவிட்டு ஹாத்தம்’ என்ற பொருள்பட ஹாத்தம் அஸம் என்றே மக்களால் அழைக்கப்பற்றனர்.
அல்லாஹ்வை நேசித்து வாழ்ந்த அப்பெரியோர்களின் நடைமுறை எத்தனை அழகு வாய்ந்தது!
பிறரை எந்தளவு மதித்து நடந்துள்ளனர் என்பது நமக்கு ஓர் படிப்பினையாகும். செய்கையால் கூட பிறர் மனம் சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர்கள் நடந்த விதம் என்பது சிந்திப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையான நிகழ்ச்சி.
![இறைநேசர் ஹாதமுல் அஸம் [ரஹ்] அவர்கள் Hazrat Hatim al-Asam (Rah) — The Friend of Allah - Tamil](https://i0.wp.com/myislamdiary.com/wp-content/uploads/2026/05/Hazrat-Hatim-al-Asam-Rah-%E2%80%94-The-Friend-of-Allah-Tamil.webp?fit=1024%2C819&ssl=1)