நபித்தோழர் ஜரீர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
ஒருநாளின் நடுப்பகல் வேளையில் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் இருந்தேன். அப்பொழுது முளர் கிளையைச் சேர்ந்த ஒரு கூட்டம் காலில் செருப்பில்லாமலும், உடலில் மேல் ஆடை இல்லாமலும், பசித்தவர்களாகவும் அங்கு வந்தனர்.
நபி(ஸல்) அவர்கள், அம்மக்களின் வறுமை நிலையைக் கண்டதும் நபியவர்களின் பிரகாசம் பொருந்திய முகம் கவலையால் மாறியது.
பிறகு நபி அவர்கள் எழுந்து வீட்டிற்குள் சென்றார்கள். (ஒருக்கால் வீட்டில் அவர்களுக்கு அளிக்கத்தக்க பொருள் ஏதேனும் இருக்கிறதா? என்று பார்க்கச் சென்றிருக்கலாம்)
பிறகு மறுபடியும் வெளியே பள்ளிக்கு வந்து, ஹஜ்ரத் பிலால்(ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
பின்பு லுஹருடைய தொழுகையை தொழவைத்தார்கள். அதற்குப் பிறகு மிம்பர்படி மீது ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதினார்கள்.
அதன்பின் நபி(ஸல்) அவர்கள் ஸதகா (தர்மம்) செய்யும்படி உத்தரவிட்டார்கள். ‘உங்களால் ஸதகா செய்ய முடியாமல் போகும் முன்பதாக ஸதகா செய்து கொள்ளுங்கள். ஸதகா செய்ய இயலாதவர்களாக ஆகும் முன்னர் ஸதகா செய்வீராக! எவரும் எவ்வளவு கொடுக்க இயலுமோ – தீனார் கொடுக்க முடிந்தாலும், திர்ஹம் கொடுக்க முடிந்தாலும், ஆடை அளிக்க முடிந்தாலும், கோதுமை வழங்க முடிந்தாலும், சோளம் தர முடிந்தாலும், பேரீத்தம் பழம் தர முடிந்தாலும், இறுதியாக பேரீத்தம் பழத்தின் ஒரு சிறிய துண்டாயினும் சரிதான். அதனைக் கொண்டுவந்து கொடுப்பார்களாக!’ எனக் கூறினார்கள்.
உடனே ஒரு அன்சாரி சஹாபி எழுந்தார்கள்; அவர்களால் தூக்கி வரமுடியாத அளவுள்ள ஒரு பெரிய மூட்டையைக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் சமர்ப்பித்தார்கள். இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் ஒளிமயமான முகம், மகிழ்ச்சியால் பிரகாசித்தது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் ஒரு நல்வழியைத் துவக்கி வைப்பாரானால் அவருக்கு அவர் செய்ததற்கு உரிய நன்மை கிடைக்கும். அத்துடன் அதன்பின் எவர்களெல்லாம் அந்த நற்செயலைச் செய்வார்களோ, அவர்களுடைய நன்மையும் அவருக்குக் கிடைக்கும். இதனால் அமல் செய்தவருக்குரிய நன்மையில் ஒரு சிறிதும் குறைந்து போகாது. இதுபோன்று ஒரு மனிதர் தீய வழியைத் துவக்கி வைப்பாராயின் அதனுடைய பாவம் அவருக்குக் கிடைத்தே தீரும். அத்துடன் எத்தனை மனிதர்கள் அதன்பேரில் செயல்படுவார்களோ அவர்கள் அனைவரின் பாவமும் அவருக்குச் சேரும். இதனால் அவர்களின் பாவங்களில் எவ்வித குறைவும் உண்டாகாது.
— நஸயீ
இதற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றார்கள். சிலர் தீனார்களைக் கொண்டு வந்தனர். சிலர் திர்ஹம்களைக் கொண்டு வந்தனர். சிலர் தானியம் கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் தானியத்தாலும், ஆடைகளாலும் இரண்டு குவியல்கள் நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் சேகரமாகிவிட்டன. பின்பு நபி (ஸல்) அவர்கள் அவை அனைத்தையும் வந்திருந்த முளர் கிளையினரின் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஆதமின் மகனே! உனது தேவைக்குப் போக எஞ்சிய பொருளை தர்மமாக செலவிட்டுவிடு! அது உனக்கு மிக நல்லது. இன்னும் அதனைத் தடுத்து பிறருக்குக் கொடுக்காமல் வைப்பாயானால் அது உனக்குக் கெட்டது.
— மிஷ்காத்
