ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
முன்னர் வாழ்ந்த பனூ இஸ்ரவேலர்களில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஒரு விதவைப் பெண்மணி உதவி கேட்டு வந்தார். அவர் கேட்ட அறுபது தீனாரைக் கொடுத்து விட்டு, அதற்குப் பகரமாக விபச்சாரம் செய்ய அழைத்தார் அந்த செல்வந்தர். வறுமையின் கோரப்பிடியில் இருந்த அந்தப் பெண்மணியும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தார்.
அந்த மாபாதகச் செயலைச் செய்வதற்காக அந்தப் பெண்மணியின் தொடையின் மீது இவர் அமர்ந்த போது திடுக்கிட்டு எழுந்த அப்பெண்மணி கதறியழுதாள். அப்போது அந்த செல்வந்தர் ‘ஏன் அழுகின்றாய்?’ என்று வினவினார்.
அதற்கு, அப்பெண்மணி “இதற்கு முன் எப்போதும் நான் இப்படியான இழி செயலை செய்ததில்லை. என் (கஷ்ட) சூழ்நிலை என்னை இவ்வாறு (சம்மதிக்கச்) செய்யத் தூண்டி விட்டது!” என்று கூறி அழுதாள்.
அதைக் கேட்டு திடுக்கிட்ட அவர், தம் தவறை உணர்ந்து, ‘இனி ஒரு போதும் நீ இந்த இழி செயலைச் செய்ய சம்மதிக்க வேண்டாம். அந்த தீனார்களை நீயே எடுத்துக் கொள்!’ என்று கூறி விட்டு, மனம் திருந்தியவராக “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன்! இனி வாழ்க்கையில் எந்தவொரு தருணத்திலும் ரப்புக்கு நான் மாறு செய்ய மாட்டேன்!” என்று சத்தியமிட்டுக் கூறினார். அன்றைய இரவிலேயே அவர் இறந்தும் போனார்.
மறுநாள் அவருடைய வீட்டு வாசலைக் கடந்து சென்ற அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தபடியே ஒருவருக்கொருவர் பேசியவண்ணம் சென்றனர். விஷயம் யாதெனில், அவர் வீட்டு வாசலிலே ‘அல்லாஹ் இவரை மன்னித்து விட்டான்!’ என்று எழுதப்பட்டு இருந்தது.
ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒன்றிரண்டு தடவையல்ல ஏழு தடவைக்கு மேலாக இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.
