இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறக்கிவைத்தோம். (நபியே) அந்த கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும், ஜிப்ரயீலும் தங்கள் இறைவனின் கட்டளையின்பேரில் (நடைபெற வேண்டிய) எல்லாக் காரியங்களுடன் இறங்குகின்றனர். அமைதி நிலவியிருக்கும். அது பஜ்ர் நேரம் வரை இருக்கும்.

— சூரா கத்ர்

லைலத்துல் கத்ர் இரவில் வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மலக்குகளின் ஒரு கூட்டத்தாருடன் பூமிக்கு வருகை தருகின்றனர். நின்றவர்களாக, உட்கார்ந்தவர்களாக, வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வைத் திக்ரு செய்து கொண்டிருக்கும் நல்லடியார்கள் அனைவருக்காக ரஹ்மத்தை (இறையருளை) வேண்டியும், பாவமன்னிப்பிற்காகவும் துஆச் செய்கின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

“ரமலானில் கடைசி பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்.”

— புகாரி

“எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடன் நன்மையை நாடி நின்று வணங்குவாரோ, அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.”

— முஸ்லிம்

கடைசிப் பத்துத் தினங்களில் கண்ணியமும் மதிப்புமிக்க ஒரு இரவு வரவிருக்கிறது. அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானது. அந்த இரவில் ஒருவர், தான் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டவராக நற்கூலி பெறநாடி வணங்கினால், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். அந்த இரவிலே நோன்பாளிக்கு அவர்களது கூலியை முழுமையாக வழங்கப்படும். நற்செயல்கள் புரிந்தவருக்கு அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும், நரகத்திலிருந்து விடுதலையும் அவர்களுக்கு அளிக்கப்படும்.

லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

(அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ)

பொருள்:

யா அல்லாஹ்! நிச்சயம் நீ மன்னிக்கக் கூடியவன்! மேலும் நீ மன்னிப்பை விரும்பக் கூடியவன்! என்னை மன்னித்துவிடுவாயாக!

நமக்குமுன் வாழ்ந்த உம்மத்தினர் ஐநூறு, ஆயிரம் வருடங்கள் என வாழ்ந்துள்ளார்கள். இறுதி உம்மத்தாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் அறுபதுக்கும், எழுபதுக்கும் மத்தியில்தான்.

முன்னர் வாழ்ந்த பனூஇஸ்ரவேல் சமூகத்தில் ஒருவர் ஆயிரம் மாதங்கள் அல்லாஹ்வை வணங்குவதிலேயே ஈடுபட்டிருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘யாரஸுலல்லாஹ்! வயது குறைவாக உள்ள நாங்கள் ஆயிரம் வருடங்களின் வணக்கங்களின் நன்மைகளை எவ்வாறு அடையமுடியும்?’ என்று வருத்தம் தெரிவித்தபோது… அல்லாஹுதஆலா லைலத்துல் கத்ர் இரவை வழங்கி, எவர் இந்த இரவை அடைந்து அதில் வணக்க வழிபாடு செய்வாரோ, அவர் ஆயிரம் மாதங்களுக்கு மேலான நன்மையைப் பெறுவார்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

எனவே நாம் ஒரு இரவை மட்டும் குறிப்பாகக் கொள்ளாமல் நபி(ஸல்) அவர்கள் கூறியபடி கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் குர்ஆன் திலாவத், தஸ்பீஹ் நபில், நபிலான தொழுகை, திக்ர், ஸலவாத் ஓதுதல் என இந்த இரவுகளில் பெருமுயற்சியும், ஆர்வமும், லைலத்துல் கத்ர் நமக்கு எப்படியும் கிடைத்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடன் இபாத்துக்களில் ஈடுபடுவோமேயானால் அல்லாஹ்வின் கருணையால் நாம் அந்த இரவின் மகிமையை அடைந்து கொள்ளலாம்.

ஒரு மனிதரின் அறுபது வருட வாழ்வில் ஒரு லைலத்துல் கத்ர் இரவை பரிபூர்ணமாக அடைந்தால் (கிடைத்திருந்தால்) 83 வருடம் 4 மாதம் (ஆயிரம் மாதம்) இபாதத் செய்த சிறப்பை அவர் அடைவார்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version