நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதக்கத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும்.”
ரமலான் நோன்பைப் பூர்த்தி செய்தபின், ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) அன்று நம்மீது கடமையாகக் கூடியது ஸதக்கத்துல் பித்ர் என்ற தர்மமாகும்.
அன்று பிறந்த குழந்தை முதல் குடும்ப நபர்களைக் கணக்கிட்டு அவரவர் மத்ஹபின்படி, உலமாக்கள் அறிவிக்கும் தொகையை ஏழைகளுக்குத் தர்மம் செய்வது வாஜிபாகும். இது மிகவும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய விஷயம்.
நபி(ஸல்) அவர்கள் ஸதக்கத்துல் பித்ராவை உம்மத்தார் மீது கடமை ஆக்கியுள்ளார்கள். ஏனெனில், அது ஒரு நோன்பாளியிடம் ஏற்பட்ட வீணான, மானக்கேடான செயல் போன்ற குறைகளைக் களைவதற்கானப் பரிகாரமாக (கஃப்பாரா) ஆக்கப்பட்டுள்ளது என ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- தனது பொறுப்பில் உள்ள மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் இவர்களைக் கணக்கிட்டுக் கொள்வது.
- சொந்தங்களில் உள்ள ஏழைகளுக்கு முன்னுரிமை அளிப்பது சிறப்பு.
- பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுத்துவிட வேண்டும்.
- தாய், தந்தையருக்கோ, மனைவி, குழந்தைகளுக்கோ கொடுப்பது கூடாது. ஏழ்மையான தனது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் வறியவர்களுக்கு வழங்கலாம்.
- ஏழை உறவினர்கள் வெளியூரில் இருந்தால், ஈத்பெருநாளைக்கு முன்னால் அவர்களுக்கு பித்ராவைக் கொடுத்தாலும் நிறைவேறிவிடும்.
