இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நரகத்தின் தண்டனைகள்:

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜில் நரகத்தைப் பார்த்துவிட்டு வந்து அதிலுள்ள தண்டனைகளையும் அதற்கான செயல்களையும் கூறி எச்சரித்துள்ளார்கள்.

  • தொலுகையை தவறவிட்டவன்: கல்லால் தலையை நசுக்கப்பட்டு, மீண்டும் அவன் தலை சரிசெய்யப்பட்டு மீண்டும் நசுக்கப்பட்டு வேதனை செய்யப்படுவான்.
  • தனது கூந்தலை அந்நிய ஆடவருக்கு முன்னால் மறைக்காதவள்: நரகில் அவளின் கூந்தலைக் கட்டி தலைகீழாகத் தொங்க விடப்படுவாள். கீழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் சூட்டால் அவளின் மூளை கொதித்து இளகி வழிந்தோடும்.
  • தன்னுடைய கணவனை நாவால் திட்டி துன்புறுத்தியவள்: நாக்கை வெளியே இழுத்து அதனால் அவள் கட்டித் தொங்கவிடப்பட்டு அவளின் இருகைகளும் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் வேதனை செய்யப்படுவாள்.
  • பொய்யின் மூலம் வதந்தியைப் பரப்பியவன்: ஒரு வானவர் இரும்பாலான கொக்கியை அவனின் முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று அவரின் முகவாயை கண் மூக்கு துவாரத்தோடு பிடரி வரை பிளப்பார். பின்பு, அவரின் முகத்தின் இன்னொரு பக்கம் அக்கொக்கியைக் கொண்டு முகவாயை பிடரி வரை கிழிப்பார். மீண்டும் சரி செய்யப்பட்டு மீண்டும் அதேபோல் வேதனை செய்யப்படுவான்.
  • அனாதைகளின் பொருள்களை உண்பவர்கள்: மறுமை நாளில், அவர்களது வாய்களிலிருந்தும், செவிகளிலிருந்தும், மூக்குகளிலிருந்தும், கண்களிலிருந்தும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தவர்களாக பூமியிலிருந்து எழுவார்கள். மேலும் முகங்கள் கருத்தவர்களாகவும், வயிறுகள் நிரப்பப்பட்டவர்களாகவும் எழுப்பப் படுவார்கள்.
  • வட்டியை உண்பவன்: நரகத்தில் இரத்த ஆற்றில் நீந்திக்கொண்டிருப்பான். மறுமையிலும் எழும்போது அவனது வயிறு, நெருப்புக் கங்குகளால் நிரப்பப்பட்டிருக்கும். மேலும் ஷைத்தான் பிடித்தவனைப் போன்று ஒருவித பைத்திய நிலையில் இருப்பான்.
  • நல்லுபதேசங்களைப் பிறருக்கு ஏவிவிட்டு அதன்படி செயல்படாதவன்: நாக்கு நெருப்பாலான கத்திரிக்கோலால் கத்திரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
  • எவன் மதுவின் போதையாக இருக்கும் நிலையில் உலகைப் பிரிந்தானோ: அவன் போதையுடனே கப்ருக்குள் செல்வான். கப்ரிலிருந்து போதையுடனே எழுப்பப்படுவான். மேலும் போதையுடனே நரகில் தள்ளப்படுவான். அங்கே நரகவாசிகளின் இரத்தமும் வாந்தியும் கொண்ட ஓடைகள் ஓடும். அதுவே அவனது உணவும் குடிபானமும் ஆகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
  • புறம் பேசிக் கொண்டும், கோள் சொல்லிக் கொண்டும் திரிந்தவள்: பன்றியின் தலை போன்றும் கழுதையின் உடலைப் போன்றும் ஆக்கப்பட்டு அவளின் மீது இலட்சோபலட்சம் வேதனைகள் செய்யப்படும்.
  • நரக வேதனையை அனுபவித்து வரும் பெண்களின் உடலிலிருந்தும், மறைவிடங்களிலிருந்தும் வடியும் வேர்வை மற்றும் மாதவிடாய்: ஆகியவை மதுபானம் குடித்தவனுக்கு பானமாக வழங்கப்படும். மேலும் இரத்தமும், வாந்தியும் கொண்ட ஓடைகள் நரகில் இருக்கும். அதுதான் மதுகுடித்தவனின் உணவும் பானமுமாகும்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை ஸஹாபாக்களிடம், ‘ஜூப்புல் ஹுஜ்ஜுனிலிருந்து நீங்கள் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘யாரசூலல்லாஹ்! ஜூப்புல் ஹுஜ்ஜுன் என்றால் என்ன?’ என்று கேட்டனர்.

அதற்கு நபி ஸல்) அவர்கள், ‘அது நரகிலிருக்கும் ஒரு ஓடையாகும். ஒவ்வொரு நாளும் நரகமே அந்த ஓடையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு வேண்டுகிறது. தான் செய்யாமல் பிறரை நன்மை செய்யும்படி ஏவுபவனும், இறையில்லமான கஃபாவை தரிசித்த பின்னும் பாவச்செயல்களில் ஈடுபடுபவனும் ஆவான்.’

வட்டியை உண்பவனின் வயிறு பெரிதாக்கப்பட்டு, வயிறு முழுவதும் நெருப்புக் கங்குகளைக் கொண்டு நிரப்பப்படும்.

பொய் பேசும் பழக்கமுடையவனாக இருந்தவனுக்கு, அவனது கண்ணிலும் மூக்கிலும் ஒரு வானவர் கொக்கியை மாட்டி பின்பக்கமாக இழுப்பார். அதுபோன்று வாயிலும் மாட்டி வேதனை செய்வார். இந்த இரண்டாம் பகுதியை இழுத்து முடித்த நிமிடத்தில் முதல்பகுதி சரியாகிவிடுகிறது.

தங்கம் வெள்ளியை சேமித்து வைத்துக் கொண்டு ஜகாத் கொடுக்காதவர்களுக்கு நரகில் தங்கத்தையும் வெள்ளியையும் பழுக்கக் காய்ச்சி அவனது விலாப்புறத்திலும், முதுகிலும், மார்பிலும், நெற்றியிலும் ஊற்றப்படும். அவை குளிர்ச்சியடைய ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகும். பிறகு மீண்டும் ஊற்றப்படும். அப்போது அவன், தான் வாழ்ந்த சுக வாழ்வையும் தான் சேமித்த செல்வத்தைப் பற்றி உணர்ந்து கொள்வான்’ என நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸை அறிவிக்கிறார்கள்.

— நஸயீ

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

إنَّهَا لَى نَزَاعَةً لِلشَّوَى تَدْعُوا مَنْ أَدْبَرَ وَ تَوَلَّى وَجَمَعَ فَأَوْعُى

நிச்சயமாக (நரகத்தில்) அது கொழுந்து விட்டு எரியும் நெருப்பாகும். அது தோல்களை (எரித்து) கழற்றிவிடும். அது (கட்டளைகளை) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அது (தன்னிடம்) அழைக்கும் பொருளைச் சேகரித்து (செலவு செய்யாது) பத்திரப்படுத்திக் கொண்டவர்களையும் (அது அழைக்கும்).

— சூரா அல் மஆரிஜ்: 15-18

இதுபோன்று ஒவ்வொரு அடாத செயல்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் நரகில் தண்டனை அளிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். நரகவாசிகள் நரகின் வேதனையை அனுபவித்து அழுது கண்ணீர் வடிப்பார்கள். ஒரு சமயத்தில் கண்ணீர் வற்றிப்போய்விடும். தான் அனுபவிக்கும் வேதனையை நினைத்து கவலைப்படுவார்கள். மீண்டும் மீண்டும் அவ்வேதனையை அனுபவிக்கும்போது உள்ளமும், குரல்வளையும் கூட வெப்பம் தாங்காமல் கீழே விழுந்துவிடும். அதனால் கவலை கொள்ள இதயமும் கவலையை வெளிப்படுத்த சப்தமும் இல்லாமல் வேதனையை அனுபவிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மறுமையில் மனிதர்களின் நிலை குறித்து கூறிய நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதி காண்பித்தார்கள்.

اللهُمَّ ارْزُ قُنِي عَيْنَيْنِ هَطَالَتَيْنِ تَسْقِيَانِ الْقَلْبَ بِذُرُوفِ الدَّمعِ مِنْ خَشْيَتِكَ قَبْلَ أَنْ تَكُونَ الدَّمُوعُ دَمًا وَالْأَضْرَاسُ جَمْرًا

பொருள்:

‘யா அல்லாஹ்! மறுமையில் கண்ணீர் இரத்தமாக, பற்கள் நெருப்புத் துண்டங்களாக மாறும்முன் உனது அச்சத்தால் ஓடும் கண்ணீர் கொண்டு, என் இதயத்துக்கு நீர் பாய்ச்சக்கூடிய எனது இரண்டு கண்களை எனக்கு நஸீபாக்குவாயாக!’ என்று நபி(ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளின் ஒரு சமூகத்தாரிடம் சென்றார்கள். அவர்கள் சிரித்துக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். இதைப்பார்த்த அவர்கள், ‘உங்களுக்குப் பின்னால் நரகம் இருக்க நீங்கள் சிரித்துக்கொண்டிருக்கிறீர்களே! நான் அறிந்த உண்மைகளை நீங்கள் அறிவீர்களானால் நீங்கள் குறைவாக சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். உண்பதும் குடிப்பதும் கூட உங்களுக்கு நல்லதாகத் தெரியாது. நீங்கள் காடு மலைகளுக்குச் சென்று நிம்மதியற்ற நிலைக்கு ஆளாகிவிடுவீர்கள். இன்னும் எப்போதும் இஸ்திஃபாரை சப்தமாக ஓதிக்கொண்டே இருப்பீர்கள் எனக் கூறினார்கள்.

அல்லாஹ் நரகத்தின் நிலை பற்றி குர்ஆனில் கூறுகிறான்:

تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَلِحُونَ

(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களைக் கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு இருப்பார்கள்.

— சூரா முஃமினூன்: 104

நரக நெருப்பைப்பற்றி வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறியுள்ளதாவது:

“அல்லாஹ் நரகிற்கு உத்தரவிட்டான். அது ஆயிரம் ஆண்டுகள் எரிந்து வெண்ணிறமாக ஆகிவிட்டது. மீண்டும் உத்தரவிட்டான். அது ஆயிரம் ஆண்டுகள் எரிந்து சிவப்பு நிறமாக மாறிவிட்டது. மீண்டும் உத்தரவிட்டான்; அது ஆயிரம் ஆண்டுகள் எரிந்து அதன் கங்குகள் ஒளி கொடுக்காத இருள்மயமான கரும் நிறம் கொண்டதாக ஆகிவிட்டது. உம்மை அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! ஊசித் துவாரத்தின் அளவு நரகம் திறக்கப்பட்டுவிட்டால், அதன் வெப்பத்தால் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து போய்விடும்.”

நரகவாசிகளின் உடல்கள் அவர்கள் பாவத்திற்குத் தக்கவாறு பெரிதாக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள். நரகவாசிகளின் ஒரு பல் உஹது மலையளவு இருக்குமென்றால் அவர்களின் உடல்கள் எவ்வளவு பெரிதாக்கப்படும் என்பதைக் கொண்டு நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அதில் சிலரின் உதடுகள் பருத்து கீழ் உதடுகள் நெஞ்சுவரை தொங்கக்கூடியதாகவும், மேலுதடுகள் மேல்நோக்கி முகத்தை மூடக்கூடியதாகவும் இருக்கும்.

நரகவாசிகளுக்கு தாகம் ஏற்பட்டால் உருக்கிய ஈயம் வழங்கப்படும். தாகத்தின் காரணமாக அதனையும் பருகிடுவார்கள். அதனால் உடலெல்லாம் உருகிப் போகக் காண்பார்கள். இன்னும் சில நரகவாசிகளின் தாகத்திற்கு நரகவாசிகளின் சீல்சலம் உணவாகக் கொடுக்கப்படும்.

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நரகத்தின் நினைவை அதிகமாக்குங்கள். அதன் அடித்தளம் ஆழமானது. அங்கிருக்கும் சாட்டை இரும்பால் ஆனது என்று கூறிவிட்டு நான் ஒரு ஆடாகப் பிறந்திருக்ககூடாதா? என் குடும்பத்தார் என்னை அறுத்தாவது தின்றிருப்பார்களே என்று கூறிக் கதறி அழுதார்கள்.

அல்லாஹ்வின் வேத எச்சரிக்கைகள் நம்முன் உள்ளன. அவற்றைப் பணிந்து ஏற்றுச் செயல்படுவோர்க்கு நற்செய்தியையும், அதனை உதாசீனம் செய்துவிட்டு மனம் விரும்பும் வழியில் வாழ்பவருக்கு நிரந்தர நரகத்தையும் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

நரகவாசிய்களைப் பார்த்து அல்லாஹ் கூறுவான்:

أَلَمْ تَكُن ايتي تُتْلَى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ

என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப் படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றை பொய்ப்பிக்கலானீர்கள்! (என்று கூறப்படும்)

— சூரா முஃமீனூன் : 105

குர்ஆனை ஓதுவது என்பது நன்மையை பெறும் நோக்கில் மட்டும் அல்ல. மாறாக, குர்ஆனில் கூறப்பட்டுள்ள கட்டளைகளைச் செவிசாய்த்து உள்ளத்தை முற்றிலும் அர்ப்பணித்து நடப்பதற்கேயாகும். நற்போதனைகளால் நிரம்பியுள்ள குர்ஆனின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் போனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

அப்போது நரகவாசிகள் அல்லாஹ்விடம் கூறுவார்கள்:

قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقُوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِينَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ حُدُنَا فَأَنَا ظُلِمُونَ

எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது.; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம் என்று அவர்கள் கூறுவார்கள். எங்கள் இறைவனே! நீ எங்களை இந்நரகத்தை விட்டு வெளியேற்றுவாயாக! திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள் (என்று கூறுவர்)

— சூரா முஃமினூன்: 106,107

அதற்கு அந்நரகவாசிகளைப் பார்த்து அல்லாஹ் கூறும் பதில்:

قَالَ اخْسَنُوا فِيهَا وَلَا تُكَلِّمُونَ இதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்! என்று கூறுவான்.

– சூரா முஃமினூன் 108

நரகத்தின் தண்டனை என்பது காலம் குறிப்பிடப்பட்டதா? இல்லையே! முடிவே இல்லாத வேதனை அல்லவா அது! துயர் நீக்கும் இறைவனே கோபமடைந்து, ‘என்னிடம் பேசாதீர்கள்!’ என்று சொல்லிவிட்டால் அதன்பிறகு பொருட்படுத்துவார் உண்டா? இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக நம்முடைய உடல் உறுப்புகளை பாவத்தில் ஈடுபடுத்திவிட்டு என்றென்றும் ஈடேற்றமில்லாத நரகத்தில் நுழைய வேண்டுமா?

நரகம் ஏழு வகையானது:

  1. லளா
  2. ஜஹீம்
  3. உஸ்ரா
  4. ஹாவியா
  5. ஸகர்
  6. ஸயீர்
  7. ஜஹன்னம்

மனிதர்களின் தீய செயல்களுக்கேற்ப தண்டனை வழங்கவே இறைவன் ஏழு வகையான நரகைப் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றிலும் வெவ்வேறான தண்டனைகள் கொடுக்கப்படும். இன்னும் நரகில் மனிதர்களுக்கு தண்டனைக் கொடுப்பதற்கென்றே வானவர்கள் படைக்கப்பட்டுள்ளனர். அந்த வானவர்கள் செவிடர்களாக இருப்பார்கள். நரகவாசிகளின் எந்தக் கதறலும் அவர்களின் காதில் விழாது. இன்னும் அந்த வானவர்கள் இரக்க சுபாவம் இல்லாதவர்களாகவும், மிகுந்த கடினத் தன்மை கொண்டவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களே நரகின் காவலாளிகள் ஆவார்கள்.

நரகின் காவலாளிகளில் ஒருவர் உலகிற்கு வந்துவிட்டால் அவரின் மீது வீசும் துர்வாடையின் காரணமாகவும், அவரின் விகாரமான தோற்றத்தின் காரணமாகவும் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உலகில் இறைவனுக்கு மாறுசெய்யும்போது ஆனந்தமாகத் தெரியும்; ஆனால், அதற்கான பலனை மறுமையில் பெறும்போது வேதனையாக ஆகிவிடும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version