இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில்,

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு ரஹ்மத்தாக அருளாகவே அன்றி அனுப்பவில்லை.

– சூரா அல்அன்பியா: 107

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சிலர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த மக்கா குறைஷி காஃபிர்கள், முஸ்லிம்களுக்கு அதிகக் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அளித்து விட்டனர். ஆகவே தாங்கள் அவர்களை சபித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு கருணை நபி(ஸல்) அவர்கள், ‘நான் மக்களை சபிப்பதற்காக அனுப்பப்படவில்லை; நான் அகிலத்தார் அனைவருக்காகவும் இறை அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று கூறினார்கள்.

மக்காவுக்கு அருகில் இருக்கும் தாயிஃப் நகரத்திற்குச் சென்று நபி(ஸல்) அவர்கள், அங்கு வசிக்கும் மக்களுக்கு இஸ்லாமிய ஏகத்துவ அழைப்புக் கொடுத்து நன்னெறிகளைக் கொண்டு உபதேசித்தார்கள்.

அம்மக்கள் ஏற்றுக் கொள்ளாதது மட்டும் அல்லாமல், நபி(ஸல்) அவர்களை கடும் சொற்களால் ஏளனம் செய்தும், கற்களைக் கொண்டு எறிந்தும் ஊரைவிட்டு வெளியேற்றினார்கள்.

இதனால் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மேனியிலிருந்து இரத்தம் வழிந்தது. இந்நிலையில் வானவரை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து…

‘அல்லாஹ்வின் தூதரே! தங்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்திய இம்மக்களை இரு மலைகளுக்கிடையில் இவ்வூரை நசுக்கி அழித்துவிட கட்டளையிடுங்கள்’ என வேண்டி நின்றார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவர்களை அழிப்பதற்காக நான் அனுப்பப்படவில்லை. இன்று இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாளை இவர்களின் சந்ததிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறேன்’ எனக் கூறி அம்மக்களின் நேர்வழிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். இதுதான் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் உயரிய மாண்பு.

உஹதுப் போரில் நபி(ஸல்) அவர்களின் மீது காஃபிரான எதிரிகள் கடுமையான தாக்குதல் செய்தபோது, அன்னாரின் முபாரக்கான பல் ஒன்று ஷஹீதாகி விட்டது. தாடை பகுதியில் இரத்தம் வெளிப்பட்டது. அப்போது முஸ்லிம்களில் சிலர் நபியவர்களிடம் அம்மக்களை சபிக்கும்படி வேண்டினர்.

ஆனால், நபி(ஸல்) அவர்களோ,

اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ

‘யா அல்லாஹ்! என் சமுதாயத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக! இவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர்’ என்று இறைஞ்சினார்கள்.

பிறிதொரு நேரத்தில் நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள்,

‘யா ரசூலல்லாஹ்! தாங்களும் நபி நூஹ் (அலை) அவர்களைப் போன்று சபித்திருந்தால் நாங்கள் அனைவருமே அழிந்து போயிருப்போம்! ஏனெனில் தங்களுக்கு பலவிதமான இன்னல் இடையூறுகள் இழைக்கப்பட்டன. ஆனால் தாங்களோ எந்நேரமும், யா அல்லாஹ்! என் சமுதாயத்தினரை மன்னித்தருள்வாயாக! அவர்கள் அறியாதவர்கள்! எனக் கூறிய வண்ணமே இருந்தீர்கள்” என்று மொழிந்தார்கள்.

எதிரிகள் கடுமையான இன்னல்களை விளைவித்தபோது கூட நபி(ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தினருக்காக பாவமன்னிப்புத் தேடியவர்களாகவும், நேர்வழி பெற வேண்டியும் பிரார்த்தித்தவர்களாகவே இருந்தார்கள். நபியவர்கள் யாரையும் சபித்ததில்லை.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்த போது தோழர்களை விட்டு ஒதுங்கி ஓரிடத்தில் தனியாக மரத்தடியில் படுத்தநிலையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நபித்தோழர்கள் சற்று தொலைவில் ஆங்காங்கே தள்ளி இருந்தார்கள். அதனால், நபியவர்களின் வாள் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. ஆகையால், ஆயுதம் எதுவும் இல்லாத நிலையில் படுத்திருந்தார்கள்.

அப்போது அவ்வழியாக சென்ற கவாஸ் இப்னு ஹாரிஸ் என்ற காஃபிர், ‘இது நல்ல சந்தர்ப்பம்; யாரும் அருகில் இல்லை; நபியவர்களின் கையில் வாளும் இல்லை. ஆகவே, நபியவர்களை கொலை செய்து விடலாம்’ என எண்னி, தன் வாளைக் கையில் ஏந்தியவனாக நபி(ஸல்) அவர்களை நெருங்கிய போது அன்னார் கண்விழித்து விட்டார்கள். உருவிய வாளுடன் ஒருவன் தம் முன்னால் நின்று கொண்டிருந்தான்.

நபியவர்களின் கழுத்துக்கு மேல் வாள் ஓங்கப்பட்ட நிலையில், ‘இப்போது என் கையில் மாட்டிக் கொண்டீர். இப்போது உம்மைக் காப்பாற்ற போவது யார்?’ என நக்கலாக கேட்டான்.

உடனே, ‘அல்லாஹ்’ என நபி(ஸல்) அவர்கள் எவ்வித பயமும் இன்றி கம்பீரமாக பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதுதான் தாமதம்; அவன் திடுக்கம் அடைந்தவனாக ஆனதில் அவனது கையிலிருந்து வாள் கீழே விழுந்து விட்டது.

இப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த வாளை தமது முபாரக்கான திருக்கரத்தில் எடுத்துக் கொண்டு, ‘இப்பொழுது நீ சொல்! உன்னைக் காப்பவன் யார்?’ எனக் கேட்டார்கள்.

அதற்கு அவன், ‘நீங்கள்தான்; என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று வேண்டினான்.

நபியவர்கள், ‘உம்மைக் காப்பதும் அல்லாஹ்தான்’ என்று கூறிவிட்டு அவனை மன்னித்து விட்டார்கள். பிறகு அவன் கலிமாவைக் கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.

கைபரில் ஒரு யூதப் பெண் விருந்து ஒன்று வைத்து அதற்கு நபி(ஸல்) அவர்களை அழைத்து, அந்த உணவில் விஷம் கலந்து விட்டிருந்தாள். அதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டும் விட்டார்கள். பிறகுதான் விஷம் கலந்த சாப்பாடு என தெரிந்தது. இருந்தும் அப்பெண்ணைப் பழி தீர்க்காமல் மன்னித்து விட்டு விட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களைக் கேவலப்படுத்த நாடி, ஒரு பெண் வீட்டில் உள்ள குப்பைகளை சேகரித்து வைத்துக் கொண்டு, நபியவர்கள் அவ்வழியாக செல்லும்போது மாடியிலிருந்து குப்பையை நபியவர்கள் மீது கொட்டிவிடுவாள். நபி(ஸல்) அவர்கள் ஒன்றும் கூறாது மௌனமாக கடந்து சென்று விடுவார்கள். இது வழமையாக நடந்து வந்தது.

அப்படி ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் செல்லும்போது வழக்கமாக கொட்டப்படும் குப்பை அவர்கள் மீது கொட்டப்படவில்லை. அங்கே உள்ளவர்களிடம் அப்பெண் குறித்து விசாரித்தார்கள். அப்பெண் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அவ்வீட்டின் மாடிக்கு ஏறிச் சென்று அனுமதி பெற்று அப்பெண்மணியிடம், உடல் நலன் குறித்து விசாரித்து சுகம் பெற வேண்டி பிரார்த்தித்தார்கள்.

‘இத்தகைய உயர்மாண்புடையவரையா நாம் துன்பப்படுத்தி விட்டோம்’ என அப்பெண் தன் செயலை நினைத்து வெட்கமுற்று நபியவர்களிடம் வருந்தினார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு ஆறுதல் கூறினார்கள். உடனே, அப்பெண் கலிமாவைக் கூறி இஸ்லாத்தை தழுவினார்.

தம் சிறிய தந்தையார் ஹம்ஜா (ரலி) அவர்கள் மீது நபி(ஸல்) அவர்கள் பெரும் மதிப்பும் நேசமும் வைத்திருந்தார்கள். உஹது யுத்தத்தில் சிறிய தந்தை ஹம்ஜா அவர்கள் வெட்டப்பட்டு முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் வெகுநேரம் வரை அழுது கொண்டே இருந்தார்கள். அப்படிப்பட்ட துக்கத்தை நிகழ்த்தியவர் அபூசுஃப்யானின் அடிமை வஹ்ஷி என்ற கருப்பு இன அடிமை.

பின்னாளில், எங்கெங்கோ ஓடி மீண்டும் மதீனாவுக்கே திரும்பிய வஹ்ஷி, நபி(ஸல்) அவர்களை அணுகி, தன்னை மன்னித்து இஸ்லாத்தை சொல்லித் தரும்படி வேண்டி நின்றபோது, அந்த வஹ்ஷியை மன்னித்து ஏகத்துவ கலிமாவைச் சொல்லிக் கொடுத்து அவரின் மன்னிப்பிற்காக நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்.

இவ்வாறாக நபியவர்களது வாழ்வில் ஏராளமான சம்பவங்கள் உண்டு. அதைக் கூற வாழ்நாள் போதாது.

யா அல்லாஹ்! ரஹ்மத்துல்லில் ஆலமீன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் என்றென்றும் உன் நிலைத்த ரஹ்மத்தையும் ஸலாமத்தையும் ரிழாவையும் வழங்குவாயாக! ஆமீன்!!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version