இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ

நன்மை என்பது உங்கள் முகங்களை மேற்கிலோ, கிழக்கிலோ திருப்புவதில் இல்லை. எனினும் உண்மையான நன்மை என்பது அல்லாஹ்வையும், இறுதி நாளையும், மலக்குகளையும், வேதத்தையும், நபிமார்களையும், மெய்யாகவே விசுவாசித்து, பொருளை, அவன் மீதுள்ள அன்பின் பொருட்டால் தனது உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், (நிர்ப்பந்தத்தால்) யாசிப்போருக்கும், விடுதலை விரும்பிய (அடிமைகள், கைதிகள் முதலியவர்களுக்கும்) வழங்கி, தொழுகையையும் நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து வருவதுதான், உண்மையான நன்மையாகும்.

— சூரா அல்பகரா : 177

ஜகாத், ஸதகா என்ற இரு பெயர்களும் பொதுவாக அழைக்கப்பட்டாலும் இரண்டு செயல்களின் தன்மையும், தகுதியும் வேறுவேறாகும். ஜகாத் கடமையான விஷயம். ஸதகா நஃபிலான விஷயம். இதனைத் தனித்தனியாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஸதகா செய்துவிட்டு ஜகாத் என்று எண்ணிக் கொள்ளக்கூடாது.

ஜகாத் என்பது ஷரீஅத் சட்டம் கூறும் அளவிற்கு ஒருவரிடம் உள்ள செல்வத்தில் வருடத்திற்கொரு தடவை சொத்தைக் கணக்கிட்டு 2.5% (இரண்டரை சதவீதம்) அதற்குரிய ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

“ஜகாத்” என்ற அரபுப் பதத்திற்கு “சுத்தப்படுத்துதல்” என்ற அர்த்தமாகும். தனது செல்வத்தில் ஏற்பட்டுள்ள அழுக்குகளை ஜகாத் கொடுப்பது மூலமாகவே நீக்கமுடியும். மேலும், ஜகாத் என்றால் “தம்லீக்” இருந்தால்தான் கூடும். “தம்லீக்” எனில் எந்தப் பொருளை யாருக்கு ஜகாத்தாகக் கொடுக்கப்படுகிறதோ அது அவருக்குச் சொந்தமாக்கப்படவேண்டும்.

ஜகாத் பொருளைப் பள்ளிவாசலுக்கு நன்கொடை என்ற பெயரில் கொடுத்தால் ஜகாத் நிறைவேறாது. ஜகாத் நிதியை மஸ்ஜித்(பள்ளிவாசல்) கட்டுவதற்கோ, அதன் பராமரிப்புச் செலவுகளுக்கோ அல்லது மஸ்ஜிதின் நிர்வாகப் பணிகளுக்கோ நேரடியாகப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை.

ஜகாத்தை இரண்டு நிபந்தனைகளுடன் நிறைவேற்ற வேண்டும். அவை :

  • நிய்யத் செய்வது: தன் பணத்திலிருந்து ஜகாத்துடைய தொகையைத் தனியாக எடுத்து இது என் பொருளுக்குரிய ஜகாத் என்று நிய்யத் செய்து கொள்ளவேண்டும்.
  • ஜகாத் வாங்கத் தகுதியான நபர்களுக்குக் கொடுக்க வேண்டும்: நிய்யத் செய்யாவிட்டாலும் அல்லது ஜகாத் யாருக்குத் தகுதியில்லையோ அவருக்குக் கொடுத்துவிட்டாலும் ஜகாத் என்ற கடமை நிறைவேறாது.

போனஸ் ஜகாத் ஆக ஆகாது:

சிலர் தாங்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஆண்டுக்கு ஒரு தடவை வழங்கும் போனஸை (Bonus) ஜகாத் பணத்திலிருந்து கொடுத்துவிட்டு, ஜகாத் கொடுத்துவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். இது ஜகாத் கொடுத்ததாக ஆகாது. ஏனெனில், போனஸ் என்பது தன்னுடைய தொழிலாளியைச் சந்தோஷப்படுத்தும் நோக்கில் உபரியாக வழங்கப்படும் ஊக்கத்தொகையே தவிர போனஸ் எப்போதும் ஜகாத்தாக ஆகாது.

ஜகாத் நிறைவேற ஜகாத் என்ற நிய்யத் அவசியம்.

தொழுகை, நோன்பு எப்படிக் கடமையோ, அதுபோல் ஜகாத் ஒரு கடமையாகும். ஸதகா என்பது உபரியான தர்மம் ஆகும். ஜகாத் முதலில் உறவினர்களில் உள்ள ஏழைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். தொழுகைக்கு நிய்யத் எப்படி அவசியமோ, அதுபோல் ஜகாத் கொடுக்கும் போது, அது ஜகாத் பொருள் என்று கொடுக்கும் நபரிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மஸ்ஜிதிற்கு ஜகாத் பொருள் சேராது.

மேலும், ஜகாத் பொருள் முழுவதும் ஏழைக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். அதில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கக்கூடாது.

சிலர் ஜகாத்தை ஏழைகளிடம் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, கொஞ்சத்தை அந்த ஏழை எடுத்துக்கொண்டு, பிறகு பள்ளிவாசல் இன்னும் இதுபோன்ற ஜகாத் சேராத காரியங்களுக்கு வாங்கிவிடுகின்றனர். இது மார்க்கம் அனுமதிக்காத செயலாகும்.

ஜகாத் சட்டங்களை உலமாக்களை அணுகி அறிந்து முறைப்படி நிறைவேற்ற வேண்டும். மனம் விரும்பியவாறு செய்தால் ஜகாத் நிறைவேறாது.

அல்லாஹ் கூறுவதாக, நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“ஆதமின் மகனே! தர்மம் செய். நீ அருளப்படுவாய்!”

அமீருல் முஃமினீன் அலி (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“அல்லாஹ் செல்வந்தர்களின் மீது அவர்களுடைய பொருளில் எதைக் கடமையாக (ஜகாத்) விதித்துள்ளானோ, அதுவே ஏழைகளுக்குப் போதுமானதாக ஆகிவிடும். ஏழைகள் உணவின்றி, உடையின்றி சிரமப்படுவது அவர்களிலுள்ள செல்வந்தர்கள் தமது கடமையை முழுமையாக நிறைவேற்றாததினால்தான். கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். அல்லாஹ் அச்செல்வந்தர்களிடம் கேள்விக் கணக்கைக் கடினமாக விசாரிப்பான். மேலும், தண்டனையும் அளிப்பான்.”

பொருளாதார வளங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சிலரது கரங்களில் முடங்கிப் போவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. செல்வந்தர் தனது செல்வத்தில் ஏழையின் உரிமையை அறிந்து எவ்விதக் குறைவுமின்றி கண்ணியமான முறையில் அதனை ஏழைகளுக்குச் சொந்தமாக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! மிகுந்த நற்கூலியைப் பெற்றுத்தரும் தர்மம் எது?’ என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘பொருள் மீது ஆசையும், வறுமையின் அச்சமும், கஞ்சத்தனமும் உன் மனதில் இருக்க, நீர் சுகமாக உள்ள நிலையில் செய்யும் தர்மமே அதிக நன்மையுள்ளதாகும். எனவே, தர்மம் செய்வதை உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்தாதீர். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவாய். ஆனால் அப்போது (உயிர் பிரிய இருப்பதால்) உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்கும்’ என்று கூறினார்கள்.

— புகாரி

ஜகாத் நிறைவேற்றாததைக் குறித்து எச்சரிக்கை:

அல்லாஹ் குர்ஆனில் எச்சரித்துக் கூறுகிறான்:

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ

(எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ, அவர்களுக்கு (நபியே) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள். (தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும் அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு, உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும் நாளை (நபியே) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.

— சூரா அத்தவ்பா : 34, 35

எந்தப்பொருள் அல்லாஹ்வின் கட்டளைக்காக செலவழிக்கப் படவில்லையோ, அச்செல்வம் மறுமையில் பெரும் தண்டனைக்குரியதாக ஆகிவிடும் என்று மேற்கண்ட ஆயத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“எந்த ஒரு மனிதனுக்கு அல்லாஹ் பொருளை அளித்து, அவன் அதற்குரிய ஜகாத்தினை அளிக்காதிருந்தால், அந்தப் பொருள் கியாமத் நாளன்று மிகப்பெரிய பாம்பாக மாற்றப்படும். அது வழுக்கைத் தலையுடையதாய் இருக்கும். அதனுடைய கண்களின் மீது கரும்புள்ளிகள் இருக்கும். அப்பாம்பை அம்மனிதனுடைய கழுத்தில் வளையமாகப் போடப்படும். அது அவனுடைய இருதாடைகளையும் கவ்வியவாறு, ‘நான் உன்னுடைய செல்வமாவேன். உன்னுடைய கருவூலமாவேன்’ என்று கூறும். பிறகு அது அவனைக் கொத்தி வேதனை செய்யும்.”

— புகாரி.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “எப்பொருளுடன் ஜகாத் (கொடுக்காமல் வைத்திருந்த) பொருளும் கலந்து விடுகின்றதோ, அது அப்பொருளை அழிக்காமல் இருப்பதில்லை.”

நபி(ஸல்) அவர்கள் உரிய முறையில் ஜகாத்தை நிறைவேற்றாமல் இருப்பதின்மீது எச்சரித்துக் கூறுகிறார்கள்:

“எந்த ஒரு மனிதன் தங்கமோ, வெள்ளியோ, செல்வமோ உடையவனாக இருந்து அவன் அதன் கடமையை – ஜகாத்தை நிறைவேற்றவில்லையானால், கியாமத் நாளன்று அந்தத் தங்கம், வெள்ளி ஆகியவை கட்டிகளாக்கப்பட்டு நரக நெருப்பில் அவைகளும் நெருப்புக் கங்குகளாகும்வரை பழுக்கக் காய்ச்சி பின்னர் அவைகளைக் கொண்டு அம்மனிதனின் விலாவிலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். இன்னும் இது போன்று மறுபடியும் மறுபடியும் சூடு போடப்பட்டுக் கொண்டே இருக்கும்.”

— முஸ்லிம்

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

உங்களில ஒருவருக்கு மரணம் வரும் முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து தான தர்மம் செய்து கொள்ளுங்கள். (அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டு) மரணிக்கும் சமயம், ‘என் இறைவனே! என் தவணையை எனக்குச் சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நான் தான தர்மம் செய்து நல்லோர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’ என்று கூறுவான்.

— சூரா முனாஃபிகூன்: 10

ஒன்றுக்கு எழுபது மடங்கான நன்மைகள் பெற்றுத்தரும் மாதமான ரமலான் மாதத்தில் ஜகாத் நிறைவேற்றப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் செல்வத்தை மக்களுக்கு வாரி வாரி வழங்கும் பழக்கம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். ரமலான் மாதம் வந்துவிட்டால், மிக அதிகமாகத் தர்மம் செய்வார்கள்.

ஏழ்மையால் வறண்ட இதயங்கள் ஜகாத்தின் மூலமாகவே வளம் பெறுகின்றன. செல்வந்தர்களின் செல்வம் அல்லாஹ்வுடைய பாதையில் செலவிடப்படும்போதுதான், ஏழைகளும் வளம் பெறுகின்றனர்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version