இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபி(ஸல்) அவர்களின் நற்குணமும் நடத்தையுமே இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருந்தது இதோ ஒரு சம்பவம் இங்கே..

நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவதாவது:

நபி(ஸல்) அவர்கள் ‘நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் ‘பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் கைது செய்து கொண்டு வந்தார்கள். மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலின் தூண்களின் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, ‘(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் தீர்ப்பைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்.

மறுநாள் வந்தபோது அவரிடம், ‘ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ‘தங்களிடம் நான் (ஏற்கனவே) கூறியதுதான்; நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்’ என்றார்.

மூன்றாம் நாள் அவரிடம், ‘நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ‘நான் ஏற்கனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்’ என்று பதிலளித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்’ என்று சொன்னார்கள். உடனே அவர் அவிழ்த்து விடப்பட்டார்.

பிறகு ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், ‘முஹம்மது, அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்’ என்று மொழிந்துவிட்டு,

‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது.

அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்று வரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது உங்கள் ஊரே (மதீனா) எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது என்று சொல்லிவிட்டு, ‘மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்’ என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதி அளித்தார்கள்.

அவர் மக்காவிற்குச் சென்றபோது அங்கே ஒருவர் அவரிடம் ‘நீ மதம் மாறிவிட்டாயா?’ என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், ‘இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதம் மாறவில்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்கு கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன் என்று பெருமிதமாக பதிலளித்தார்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version