நபி(ஸல்) அவர்களின் அன்புப் பேரர், இமாம் ஹஸன் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து தன்னுடைய தேவையைச் சொல்லி உதவி கோரினார்.
அதற்கு இமாம் அவர்கள், ‘உமது கோரிக்கையின் காரணமாக என்மீது ஏற்பட்டுவிட்ட கடமை என் பார்வையில் மிக உயர்ந்துள்ளது. நான் உனக்கு செய்ய வேண்டிய உதவி என்னிடம் பெருந்தொகையாக இருக்கின்றது. அல்லாஹ்வின் பாதையில் அடியான் எவ்வளவு செலவழித்தாலும் அது மிகக் குறைவானதே! என்னிடம் உள்ளதை நீர் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ள சம்மதித்தால் இன்னும் மேற்கொண்டு எங்கிருந்தாவது பெற்றுத்தருமாறு என்னை வற்புறுத்தாமலிருந்தால், நான் மகிழ்வுடனே அளிக்கத் தயாராக உள்ளேன்’ என்றார்கள்.
அதற்கு உதவி கேட்டு வந்தவர், ‘இறைதூதரின் பேரரே! தாங்கள் எதனை அளித்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். அதற்கு நன்றி செலுத்தியவனாய் இருப்பேன்’ என்று கூறினார்.
உடனே இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் தமது நிதிக் காப்பாளரிடம், ‘(நான் உம்மிடம் கொடுத்த) மூன்று இலட்ச திர்ஹம்களில் மீதமுள்ளதைக் கொண்டு வாருங்கள்’ எனப் பணித்தார்கள்.
அவர் மீதமிருந்த ஐம்பதாயிரம் திர்ஹம்களைக் கொண்டு வந்தார். (மற்றதெல்லாம் தர்மமாகச் செலவாகிவிட்டது).
இமாம் ஹஸன் (ரலி) அவர்கள், ‘மேற்கொண்டும் ஐநூறு தீனார் எங்கோ இருந்தனவே?’ என்றார்கள்.
அதற்கு நிதிக்காப்பாளர், ‘ஆம்! அவைகளும் இருக்கின்றன’ என்றார். இமாம் அவர்கள், ‘அவற்றையும் கொண்டு வாரும்’ என கூறினார்கள். பணமெல்லாம் கொண்டு வரப்பட்ட பின்னர் இமாம் அவர்கள் அம்மனிதரிடம், ‘இப்பணத்தைச் சுமந்து உங்கள் வீடுவரை சேர்க்க கூலியாட்களை அழைத்து வரவும்’ என்று கூறினார்கள்.
அவர் இரண்டு கூலியாட்களை அழைத்து வந்தார். இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் அப்பணத்தையெல்லாம் அம்மனிதரிடம் ஒப்படைத்துவிட்டு தம் புனித மேனியிலிருந்த போர்வையைக் கழற்றி அவரிடம் கொடுத்து, ‘இப்பணத்தை உமது வீடுவரை சுமக்கும் இவ்விரு கூலியாட்களுக்குக் கூலி கொடுப்பது என் பொறுப்பு. ஆதலால் இப்போர்வையை விற்று இவர்களுக்குக் கூலியாக கொடுத்துவிடவும்’ என்று கூறினார்கள்.
இமாம் ஹஸன் (ரலி) அவர்களின் அடிமைகள், ‘நம்மிடம் இப்போது சாப்பாட்டிற்காக ஒரு திர்ஹம் கூட மிச்சமில்லையே! தாங்கள் எல்லாப் பணத்தையுமல்லவா அளித்துவிட்டீர்கள்!’ என்றனர்.
அதற்கு ஹஜ்ரத் ஹஸன்(ரலி) அவர்கள், ‘எனக்கு அல்லாஹுதஆலாவின் மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவன் தன் கிருபையைக் கொண்டு என் தேவைகளைப் பூர்த்தி செய்வான்’ என்று கூறினார்கள்.
இவ்வாறாக, அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி பிறருக்கு உதவி செய்வதில் நபித்தோழர்கள் பேரின்பம் கண்டார்கள்.
إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதுகின்றார்களோ; இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவிடுகின்றார்களோ அவர்கள் நஷ்டமில்லாத வியாபாரத்தை ஆதரவு வைப்பவர்கள் ஆவார்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்களுடைய கூலியை அவர்களுக்கு நிரப்பமாக அளிப்பதற்காகவும், தனது தனிப்பட்ட கருணையால் மேலும் அவர்களுக்கு அதிகம் அளிப்பதற்கேயாகும். நிச்சயமாக அவன் மன்னிப்போனும், நன்றிமிக்கவனும் ஆவான்.
— சூரா அல் ஃபாதிர்: 29, 30
