ஓர் ஊரின் சிறப்பும் செழிப்பும் அங்கிருக்கும் மஸ்ஜிதுகளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. அவ்வாறே ஒரு சமுதாயத்தின் சிறப்பும் உயர்வும் மஸ்ஜிதைக் கொண்டுதான். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்றவுடன் முதல் வேலையாக மஸ்ஜிதை நிறுவினார்கள். அங்கிருந்துதான் தங்களுடைய நபித்துவப் பிரச்சாரப் பணிகளையும் மானுடப் பண்பாட்டுச் சேவைகளையும் செய்யலானார்கள்.
மஸ்ஜிதுந்நபவீ எனப்படும் அப்புனிதப் பள்ளிவாசல்தான் இஸ்லாமியச் செயல்பாட்டு மையமாக அமைந்திருந்தது.
அங்கிருந்துதான் முழு உலக மக்களுக்கும் ஈமான், இறைவழிபாடு, கல்வி, ஒழுக்கம், வியாபாரம், விவசாயம், கொடுக்கல், வாங்கல், திருமணம், குடும்ப வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நன்நெறிகள், நற்பண்புகள், உடற்பயிற்சி, மனப்பயிற்சி, ஆன்மிகம், இறையச்சம், தக்வா ஆகிய இம்மை மறுமையின் அனைத்து நெறிமுறைகளும் நபி(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டன.
இவை அனைத்திற்கும் அடிப்படை பள்ளிவாசல்தான். எனவேதான், ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே மிகச்சிறந்த இடம் அங்குள்ள பள்ளிவாசல்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் குர்ஆனில்,
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும், மாலையிலும் (முஃமின்கள்) அவனைத் துதி செய்து கொண்டிருப்பார்கள். — சூரா அந்நூர்: 36
மேற்கண்ட ஆயத்தில், மஸ்ஜித் கட்டுவதன் நோக்கம், அல்லாஹ்வின் ஞாபகமூட்டும் நற்செயல்கள் அதில் செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் மஸ்ஜிதின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
ஆனால், தற்காலத்தில் நடப்பது என்ன? பள்ளியில் தனது பெயர் நினைவு கூறப்பட வேண்டுமென்றுதான் மக்களால் விரும்பப்படுகிறது.
பள்ளிக்கு ஏதாவது நிதி உதவி செய்துவிட்டு, தன் பெயரை இன்னாரால் கட்டி முடிக்கப்பட்டது என்று ஒரு விளம்பரப் பலகையை தொழுகைக்கு வருபவர்கள் அனைவரும் பார்க்கும்படியான ஒரு இடத்தில் வைத்து தங்கள் புகழை பரப்புகின்றனர். மனத்தூய்மை இல்லாத செயலுக்கு நன்மை இல்லை.
பள்ளியை யார் நிர்வாகம் செய்வது? என்று மிகுதியான பள்ளிகளில் சண்டைகள் நடக்கிறது.
கண்ணியம் காக்கப்பட வேண்டிய மஸ்ஜிதுகளில், கூச்சல்களும், குழப்பங்களும் இன்னும் சில இடங்களில் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் அவல நிலைகளை நாம் காண்கிறோம்.
அமைதி பேணப்பட வேண்டிய மஸ்ஜிதுகளில் தீய வார்த்தைகள் பேசுவதும், ஒருவரையொருவர் சண்டையிட்டுச் சபித்துக் கொள்வதும் ஆகிய இச்செயல்களின் மூலம் மஸ்ஜிதில் பேணப்பட வேண்டிய அமைதி குலைக்கப்படுகிறது.
அல்லாஹ் குர்ஆனில்,
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய திருப்பெயர் நினைவு கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்குவதற்கு முயற்சிக்கிறவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? (அவன்தான் பெரிய அநியாயக்காரன்) அவர்கள் அச்சமுள்ளவர்களாகவே தவிர (அல்லாஹ்வின் இல்லங்களாகிய) அவற்றில் நுழைவது அவர்களுக்குத் தகுமானதல்ல. அவற்றைப் பாழ்படுத்த நினைக்கும் அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும் மறுமையி்ல் அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.
— சூரா அல்பகரா : 114
அல்லாஹ்வின் பள்ளியினுள் அவனுடைய அச்சங்கொண்டு நுழைய வேண்டுமென்பதும், அங்கு தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஸலவாத், நல்லுபதேசம், நற்காரியங்கள் போன்றவை மட்டுமே செய்யப்பட வேண்டுமென்பதும், அங்கு செல்பவரைத் தடுப்பதும், தொழுபவருக்கு இடையூறாகப் பேசுவதும், தொழுபவருக்குக் குறுக்கே செல்வதும், உலகப் பேச்சுக்கள், வீண் பேச்சுக்கள் பேசுவதும், சிரிப்பதும், விளையாடுவதும், வீண் தர்க்கங்கள், சண்டை சச்சரவுகள் செய்வதும் பெருங்குற்றமென்பதும், அத்தகையோருக்கு இவ்வுலகில் கேவலமும் மறுமையில் மிகப்பெரிய தண்டனையும் உண்டு என்பதும் இவ்வசனத்தின் கருத்துக்கள் என தப்ஸீரில் விளக்கப்பட்டுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
ஒரு காலத்தில் மக்கள் பள்ளிவாசலின் மூலம் பெருமையடித்துக் கொள்வார்கள். மிகக் குறைவாகவே தவிர அதைக் கண்ணியப் படுத்த மாட்டார்கள்.
— புகாரி
மஸ்ஜிதை நிர்வாகம் செய்பவர்கள் எத்தகையத் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில்,
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர, வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
— சூரா அத்தவ்பா: 18
பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்பவர் கட்டாயம் தொழுகையாளியாக இருக்க வேண்டும். ஒரு பள்ளிவாசல் சீர்கெடுவதற்கு முக்கிய காரணம், தொழுகை இல்லாதவர் அதன் நிர்வாகியாக இருப்பதேயாகும்.
மேலும், பெரும்பாவங்களில் அறவே ஈடுபடாதவராக இருக்க வேண்டும். தக்வா உடையவரே பள்ளிகளை நிர்வாகம் செய்யத் தகுதியுள்ளவராவார்.
மேலும், அல்லாஹ்விற்காகவே பள்ளிவாசல் நிர்வாகம் செய்யப்பட வேண்டுமே தவிர, மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில், பள்ளிவாசல் என்பது பலவகையான மனிதர்கள் வந்து செல்லும் இடமாகும். இதனை நிர்வாகம் செய்யக்கூடிய முத்தவல்லி என்பவர் அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சக்கூடியவராக இருந்து நேர்மை தவறாமலும், மஸ்ஜித் நிதியில் மோசம் செய்யாதவராகவும், படைப்பினங்களுக்குப் பயப்படாமலும் இருக்க வேண்டும்.
‘முத்தவல்லி’ என்பது பதவியல்ல; பொறுப்பு!
நிர்வாகி (முத்தவல்லி) என்பவர் மஹல்லா மக்களுக்கு ‘தலைவர்’ அல்ல; மாறாக அவர் ஒரு ‘பொறுப்பாளி’ (சேவகர்).
மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல், நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
மறுமையில் தன் பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்படும் என்ற அச்சம் அவருக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
அந்த மஹல்லாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் நலவுகளுக்குப் பொறுப்புள்ளவர் என்பதாகும்.
மஸ்ஜிதை நிர்வகிப்பவர்கள் அதன் உரிமைகளைப் பேணி நடந்தால், மஸ்ஜிதில் நடைபெறும் அனைத்து நற்செயல்களின் நன்மைகளும் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஒவ்வொரு பொறுப்பாளரும் அவரவர் பொறுப்பில் உள்ள காரியங்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும். அதுவரை அவரது கால்கள் எங்கும் நகராது என்பது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை. ஆகவே, மஸ்ஜிதை பரிபாலனம் செய்பவர்கள் அதன் உரிமைகளை பாழ்படுத்தி விடாமல் அல்லாஹ் காட்டியுள்ள வழிமுறையில் நிர்வாகம் செய்யப்பட வேண்டும்.
மஸ்ஜிதின் பைத்துல்மால் எனும் பொதுநிதி அல்லாஹ்வுக்காக மக்களால் தரப்பட்ட பொருளாதாரம் ஆகும். பள்ளிவாசலின் பொதுநிதி என்பது அல்லாஹ்வின் சொத்து.
பொதுநிதியை தன் சொந்த வேலைகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்துவதோ அல்லது அதை திருடுவதோ நரகத்தில் கொண்டு சேர்க்கும் பெரும்பாவங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
யாரொருவர் மக்களின் பைத்துல்மாலை அதற்குரிய அனுமதி இன்றி பயன்படுத்துவாரோ அவரது ஏழு தலமுறை கஷ்டத்திற்கு உள்ளாகும் என்பது நல்லோர்களின் சொல்!
மஸ்ஜிதுகளை வெறும் கற்களாலும், மார்பிள்களாலும் அழகுபடுத்துவதை விட, அங்கீகாரமிக்க நிர்வாகத்தைக் கொண்டும், தக்வா (இறையச்சம்) நிறைந்த முஃமின்களைக் கொண்டும் உயிர்ப்பிப்பதே காலத்தின் கட்டாயம்.
