நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் பாவம் செய்பவர்களே! பாவம் செய்பவரில் சிறந்தவர் அல்லாஹ்விடம் தவ்பாச் (மன்னிப்பு) செய்பவர் ஆவார்.
– திர்மிதீ
நபி(ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட துஆவை அதிகமாக ஓதுவார்கள்:
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
என் இறைவா! என் பிழைகளை மன்னிப்பாயாக. என் தவ்பாவை ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக, நீ தவ்பாவை மிக ஏற்றுக் கொள்பவன். மிகக் கிருபையாளன்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவாகப் பாவமன்னிப்புத் தேடிக்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான்.
– சூரா அன்னிஸாவு: 17
இங்கு நாம் அறியாமையினால் செய்யக்கூடிய பாவத்தைப் பற்றி அல்லாஹுதஆலா கூறுகிறான்:
அறியாமையினால் ஒரு பாவம் நிகழ்ந்துவிட்டால் அது தவறு என்று அறிந்தவுடன், தாமதிக்காமல் உடனே வருந்தி, இனி அத்தகைய செயலில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது ஒரு முஃமினின் அடையாளமாகும். அதனைச் செய்யாமல், உலகில் யார்தான் தவறு செய்யவில்லை என்று கூறி, தன்னுடைய தவறை நியாயப்படுத்த முயற்சிப்பது பெரும் தவறாகும்.
“ஜனங்களே! உங்களுடைய பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். எந்த அடியான் தன் பாவங்களை விட்டுத் தவ்பா செய்தவனாக அல்லாஹ்வை சந்திப்பானோ, அவனை மன்னிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.” – ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி)
எவரொருவர் தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, நன்மைகளின் பக்கம் திரும்பினால் அவர் நல்ல முடிவை எதிர் கொள்வார். எவர் இதனை மறந்துவிடுவாரோ, மரணத்திலும், மறுமை நாளிலும் கவலைக்கும், துக்கத்திற்கும் ஆட்பட்டவராகக் காணப்படுவார்.
பாவம் என்று தெரிந்து கொண்டு அதனை வேண்டுமென்றே செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் எச்சரிக்கிறான்:
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
“இன்னும் எவர்கள் பாவத்தை (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கியபோது, நிச்சயமாக இப்போது நான் (பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புத் தேடுகிறேன் என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர் குஃப்பார்களாகவே மரணிக்கிறார்களோ, அவர்களுக்கும் பாவ மன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.”
– சூரா அன்னிஸாவு: 18
அல்லாஹ்வுக்கு மாறு செய்வதன் மீது துணிச்சல் ஏற்பட்டுவிட வேண்டாம். மரணம் வரும்போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் எனக் கருதி தொடர்ந்து பாவத்தில் ஈடுபடக் கூடியவர்கள், தங்களின் மரண நேரத்தில் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
ஒரு மனிதர் ஒரு பாவம் செய்தால், அவரது உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி தோன்றுகிறது. அந்தப் பாவத்தை இது தவறு என்று உடனே உணர்ந்து (தவ்பா) பாவமன்னிப்புக் கேட்டால், அக்கரும்புள்ளி நீங்கிவிடும்.
அதனைப் பாராமுகமாக விட்டுவிட்டு, மீண்டும் ஒரு பாவம் செய்தால், மீண்டும் உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி தோன்றும். இவ்வாறாக பாவங்கள் அதிகரித்துக்கொண்டே சென்றால், உள்ளம் முழுவதும் இருளடைந்துவிடும்.
பிறகு நல்ல சிந்தனையோ, நல்ல அமல்களோ செய்ய இயலாத பலவீனமான நிலைக்குத் தள்ளப்படும். நற்சிந்தனையை விட்டும் உள்ளம் சோம்பலாகிவிடும்.
எவர் தன் இதயம் அல்லாஹ்வின் நூரால் (ஒளி) இயங்க வேண்டும் என விரும்புகிறாரோ, அவர் சிறு பாவங்களை விட்டும் விலகியிருக்க வேண்டும். ஏனெனில், சுள்ளிகள் சேர்ந்து விறகுக் கட்டாக மாறுவதைப் போன்றே, சிறிய பாவங்கள் சேர்ந்து பெரும்பாவமாக மாறி அம்மனிதனையே அழித்துவிடும் என நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ஏதேனும் துன்பம் நிகழ்ந்துவிட்டால் முதலில் இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) கேட்பதும், தொழுகையில் ஈடுபட்டும், பொறுமையை மேற்கொண்டும் அல்லாஹ்விடம் துஆச் செய்து கொண்டிருந்தால், அல்லாஹ்வின் கிருபையைக்கொண்டு அத்துன்பம் நீங்கிவிடும் அல்லது அதற்குப் பகரமாக மறுமையில் உயர் அந்தஸ்த்திற்கும், மன்னிப்பிற்கும் அது காரணமாகிவிடும்.
மூன்று நிபந்தனைகளுடன் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹுதஆலா மன்னிக்கிறான். அவை:
- பாவமன்னிப்புக் கோருபவர் தான் செய்த பாவத்தை எண்னி மனம் வருந்த வேண்டும்.
- அந்தப் பாவத்தை இப்பொழுதே முழுமையாக கைவிட்டுவிட வேண்டும்.
- இனி அந்தப் பாவத்தை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.
