இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபி (ஸல்) அவர்களிடம் தொழவைப்பதற்காக ஒருவருடைய ஜனாஸா (இறந்தவரை) கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறந்துபோன இவர்மீது ஏதேனும் கடன் தொகை பாக்கியுள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “ஆம்! இவர்மீது கடன் உண்டு” என்று கூறினர்.

“கடனை நிறைவேற்றும் அளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றாரா?” என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் வினவினார்கள்.

அதற்கு மக்கள், “இல்லை” என்று பதில் கூறினார்கள்.

“அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுகையை தொழுது கொள்ளுங்கள். (அதாவது நான் தொழவைக்கமாட்டேன்)” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு செல்ல ஆரம்பித்தார்கள்.

இந்நிலையைக் கண்ட ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மரணித்த இவரின் கடனை அடைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்!” என்று கூறினார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவைத் தொழவைத்தார்கள்.

— ஷரஹூஸ்ஸுன்னா

கடன் வாங்க மனிதனுக்கு அல்லாஹுதஆலா அனுமதித்திருப்பது அவனின் பேரருளாகும். ஆனால், கடன் வாங்கியவர் அதற்குரிய நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இல்லையானால் கடன் சுவர்க்கம் செல்வதை விட்டுத் தடுக்கும் பெருந்தடையாக ஆகிவிடும்.

அவசியத் தேவைக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். ஆடம்பர செலவினங்களுக்கு கடன் வாங்குவது கூடாது.

கடன் வாங்கும்போது அதனை திருப்பித்தர வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கவேண்டும்.

கடன் வாங்குவதற்கு ஒருவரிடம் அலைந்துவிட்டு பிறகு கடன் கொடுத்தவரை அலையவிடக் கூடாது.

கடன் வாங்குவதை எழுதிக் கொள்ளவேண்டும் என்பது அல்லாஹ் குர்ஆனில் கூறும் சட்டமாகும்.

கடன் கொடுத்தவர் கேட்டால் திருப்பிக் கொடுக்கலாம், இல்லையானால் அப்படியே விட்டுவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால், சுவர்க்கம் செல்லமுடியாது என்பதை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு உயர்வான அமல்களை ஒருவர் செய்திருந்தாலும், மறுமையில் கடன் ஒரு தடையாகிவிடும்.

கியாமத் நாளில் எந்த மனிதரிடம் பணமோ, சொத்தோ இருக்காது. கடன் கொடுத்தவர் அல்லாஹ்விடம் மறுமையில் முறையிட்டால், அக்கடனை அடைக்கும்படி கடன்பட்டவருக்கு அல்லாஹ் கூறுவான்.

அன்றைய நாளில் பணம் இல்லாததால் கடன் பட்டவரின் நன்மைகள் கடன் கொடுத்தவருக்கு போய்ச்சேரும்.

கடன் என்பது பணம் என்று மட்டும் நினைக்கிறோம். ஒருவருக்கு அளிக்கும் வாக்குறுதி, ஒருவரின் அமானிதம் ஆகியவையும் கடன்தான்.

பணத்தால் ஏற்பட்ட கடன், வாக்குறுதியால் ஏற்பட்ட கடன், அமானிதத்தால் ஏற்படும் கடன் ஆகியவை கப்ரிலும், மஹ்ஷரிலும் அவரின் முன்னால் வந்து தன்னை நிறைவேற்றும்படி கூறும். அதனை அவர் நிறைவேற்றும்வரை சுவர்க்கம் புகமாட்டார்.

வட்டிக்கு கடன் வாங்குவதும், கடன் கொடுப்பதும் ஹராமான செயலாகும்.

நபி (ஸல்) அவர் கூறியுள்ளார்கள்:

இறைவழியில் உயிரைத் தியாகம் செய்தவரின் ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்படும், கடனைத்தவிர.

— முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கடன்பட்டவரின் ஜனாஸாவையும், முனாபிக்கீன்களின் ஜனாஸாவையும் தொழவைக்கமாட்டார்கள் என்பதிலிருந்தே கடனின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

கஷ்டவாளிகளுக்கு கடன் கொடுப்பதும்கூட தர்மமே என மார்க்கம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்மத்தைச் சாரும். மேலும், நியாயமான தேவைகளுக்காகக் கடன் கேட்டால் அவருக்கு கொடுங்கள். அது தர்மத்தைவிட அதிக நன்மையைப் பெற்றுத்தரும். தர்மம் செய்வதில் பத்து நன்மைகள்தான் கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதால் பதினெட்டு நன்மைகள் கிடைக்கின்றன.

— திர்மிதி

அவசியத் தேவையின்றி ஆடம்பரத்திற்கோ, வீண் விரயம் செய்வதற்கோ கடன் வாங்குபவர் நிச்சயமாக அதனை மீண்டும் செலுத்த மிகவும் சிரமம் அடைவார். காரணம் இறைவன் விரும்பாத ஆடம்பரத்தை மனிதன் விரும்பினால் அவன் இறைவனின் பொறுப்பிலிருந்து நீங்கிவிடுவான்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ

நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்கள் ஆவார்கள்.

— சூரா பனீ இஸ்ராயீல்: 27

திருப்பித்தராத எண்ணத்தில் கடன் வாங்குபவன் திருடனைப் போலாவான். நல்லெண்ணம் கொள்பவருக்கு இறைவனின் உதவி கிடைக்கும். கடன் கொடுப்பவர், கடன் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் அவரவரது கடமைகளை இஸ்லாம் தனித்தனியே கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

எவர் கடன் கொடுக்கல், வாங்கலில் மென்மையாக நடந்து கொள்கிறாரோ, அவருடைய உயிர் மென்மையாக கைப்பற்றப்படும்.

— முஸ்லிம்

கடன் கொடுத்தவர் கடன் பெற்றவரிடம் அவரது நிலை கருதி மென்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். நிர்பந்தம் செய்வதும், இழிவுபடுத்தவும் கூடாது. இரக்க சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும். கடன் வாங்கிய ஏழை மனிதருக்கு அவகாசம் தரவேண்டும்.

ஒருசமயம் அவர் கடனை செலுத்த முடியாத வறிய நிலைக்கு ஆளாகிவிட்டால், அவரது கடனை மன்னித்து விடுதல் மிகவும் சிறப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

கடன்பட்ட ஏழைக்கு அவகாசம் அல்லது கடனை நீக்கி விடுபவருக்கு மறுமையில் அல்லாஹூதஆலா தன் (அர்ஷின்) சிம்மாசனத்தின் நிழலில் இடம் தருவான்.

— திர்மிதி

கடன் வாங்கியவர் நடந்து கொள்ள வேண்டிய முறைபற்றி நபி(ஸல்) அவர்கள், “அழகிய முறையில் எவர் கடனை திருப்பித்தருகிறாரோ, அவர்தான் உங்களில் மேலானவர்” எனக் கூறியுள்ளார்கள்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது:

கடனை அடைக்க சக்தி உள்ளவன் அதனை (அடைக்காமல்) இழுத்தடித்துக் கொண்டே போவானாகில், அச்செயல் அவனுடைய மானம் பறிபோவதையும், அவனுக்கு அதனால் தண்டனை கிடைப்பதையும் நியாயப்படுத்துகிறது.

— அபூதாவூத்

கடன் கொடுத்தவர் கடனைக் கேட்டு வரும்போதெல்லாம் மென்மையுடனும், திருப்திகொள்ளும்படியான முறையிலும் நடந்து கொள்ளவேண்டும்.

“கடனாளியாக மரணித்துவிடுபவரை இறைவன் மன்னிப்பதில்லை” என்ற எச்சரிக்கை நாம் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version