ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் சென்றுவர உடல்நலனும், போதுமான பொருளாதாரமும் இருந்தால் ஹஜ் கடமையாகி விடும். ஹஜ் என்பது துல்ஹஜ் பிறை 9 அன்று அர்ஃபாவில் தங்குவதாகும்.
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜின் பிரதிபலன் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
– புகாரி
எனவே வசதியுடையவர்கள் “ஹஜ்” என்னும் இந்தப் புனிதமான கடமையை நிறைவேற்றுவதில் மிகவும் ஆர்வமும், ஆசையும் கொள்ளவேண்டும். ஹஜ்ஜூக் கடமையை, கட்டாயமாகக் கருதியும், இறையருளை வேண்டியும் காலம் தாழ்த்தாமல் உடனே நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.
ஹஜ்ஜைத் தள்ளிப்போட காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில், மரணம் வந்துவிடலாம் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போகலாம். எனவே ஹஜ்ஜைத் துரிதப்படுத்த வேண்டும்.
எவர் ஹஜ் செய்ய தகுதி இருந்தும் ஹஜ்ஜூக்குச் செல்லாமல் இருக்கிறாரோ, அது குறித்து ஏராளமான எச்சரிக்கைகளை நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
“எந்த ஒரு மனிதரிடம் பைத்துல்லாஹ் வரை செல்ல பொருளும், வாகன வசதியிருந்தும் அவர் ஹஜ் செய்யவில்லையானால் அவர் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ மரணித்துவிடுவதில் எவ்வித வேறுபாடும் இல்லை.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
– திர்மிதி
‘எந்த ஒரு அடியானுக்கு நான் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து, இன்னும் அவனுடைய இரணத்தில் அபிவிருத்தியை நல்கி அதே நிலையில் அவன்மீது ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும் அவன் என்னுடைய தர்பாரில் ஆஜராகவில்லை எனில் நிச்சயமாக அவன் துரதிஷ்டசாலியானவன்” என அல்லாஹ் அருளியதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
– மிஷ்காத்
ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
“எவரொருவர் ஆரோக்கியமுள்ளவராகவும், செல்வந்தராகவும் இருந்து ஹஜ்ஜுக்குச் செல்ல சக்தி பெற்றிருந்தும், ஹஜ்ஜூக்குச் செல்லாமலே இறந்துவிட்டால் கியாமத் நாளில் அவர் நெற்றியில் இறை நிராகரிப்பாளர் என்ற சொல் எழுதப்பட்டிருக்கும்”.
– துர்ருல் மன்தூர்
“கடமையான ஹஜ்ஜைத் துரிதமாக நிறைவேற்றுங்கள். பிறகு என்ன நடந்துவிடுமோ என்பதை நாம் அறியமாட்டோம்.”
– தர்கீப்
எவரொருவர் ஹஜ்ஜூக்காகச் செல்லும் இடைவழியிலேயே மரணித்து விடுவாரானால், அவருக்கு கியாமத்நாள் வரை ஹஜ்ஜின் நன்மைகள் எழுதப்பட்டுவிடும். மேலும் எவரொருவர் உம்ராவுக்காகச் செல்லும் போது இடைவழியிலேயே மரணித்து விட்டால் அவருக்குக் கியாமத்நாள் வரை உம்ராவின் நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
– தர்கீப்
ஹஜ் செய்பவரும், உம்ரா செய்பவரும் அல்லாஹ்வுடைய விருந்தாளிகள் ஆவார்கள். அவர்கள் துஆ கேட்பார்களேயானால் அல்லாஹூதஆலா அதனை ஏற்றுக் கொள்வான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுகிறான்.
– மிஷ்காத்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டேன். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உங்களின் (பெண்கள்) ஜிஹாது ஹஜ் செய்வதாகும்” என அருளினார்கள்.
– மிஷ்காத்
ஹஜ் கடமை பாக்கியாக இருக்கிறதோ அதனைக் காலம் தாழ்த்தாமல் வரும் ஆண்டே நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அதற்குரிய ஆயத்தங்களை இப்போதிருந்தே செய்ய முயற்சிப்பது நல்லது.
மதீனாவில் ஈருலக தலைவர், அல்லாஹ்வின் ஹபீப் ஹழ்ரத் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யும் நற்பாக்கியம், மஸ்ஜிதுன் நபவியில் தொழக்கூடிய பாக்கியம், ஜன்னத்துல் பகீ-யில் அடக்கமாகியிருக்கும் ஸஹாபாக்களின் ஜியாரத், உஹது மலையின் கீழ் இருக்கும் ஷுஹதாயே உஹது வீரத்தியாகிகளின் ஜியாரத், துஆ கபூலியத் என இன்னும் எத்தனையோ நன்மை தரும் அமல்கள் உள்ளன. இவையனைத்தும் ஹஜ்ஜின் மூலம் நஸீபாகுகிறது.
ஹஜ் செய்யாததின் மீது அல்லாஹ்வின் எச்சரிக்கை:
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللهَ غَنِيٌّ عَنِ الْعَلَمِينَ
அங்கு சென்றுவர சக்தி பெற்றிருக்கும் மனிதர்கள், அல்லாஹ்வுக்காக அவ்வீடு (கஃபா) சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால் எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு குறையேற்பட போவதில்லை) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான்.
– சூரா ஆலஇம்ரான் : 97
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
எந்த ஒரு மனிதன் உலகத் தேவைகளின் காரணத்தைக் கூறி, ஹஜ்ஜூக்கு செல்வதைத் தள்ளிப் போடுவானேயானால், அத்தேவை பூர்த்தியாகும் முன் மக்கள் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு திரும்பி வந்துவிட்டதை அவன் காண்பான்.
கஃபா ஆலயத்தைக் கண்ணால் நேருக்கு நேராக தரிசிப்பதும், அதனைச் சுற்றி வந்து தவாப் செய்வதும் பிறகு மதீனா நகர் சென்று அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறி ஜியாரத் செய்வதும் நம் ஆத்மாவிற்கு பலனுள்ளதும், பாக்கியமுமாகும்.
இனியும் தாமதம் செய்யாமல் ஹஜ்ஜை துரிதப்படுத்துவோமாக!
