இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

கனவுக்கு விளக்கம் கூறுவதென்பது சாதாரண விஷயமல்ல. கனவை எல்லோரிடமும் கூறி விளக்கம் கேட்கவும் கூடாது. தவறான விளக்கம் கூறுவதால் நலவுக்கு பதில் தீமை ஏற்பட்டுவிடும். கனவுக்கு விளக்கம் கேட்கிறார்களே என்று எதையாவது கூறவும் கூடாது. கனவு இறைவனுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பாகும். ஆதலால், கனவுக்கு உட்பொருள் உண்டு; அதை எல்லோராலும் விளங்க முடியாது.

நல்ல கனவு என்பது நுபுவ்வத் எனும் இறைச்செய்தியில் நாற்பதில் ஒரு பங்காகும் என்பது நபிமொழி.

எவர் என்னை கனவில் காண்பாரோ, அவர் என்னையே கனவில் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் வரமுடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நல்ல கனவு இறைவனுடைய புறத்திலிருந்தும், கெட்ட கனவு ஷைத்தானுடைய புறத்திலிருந்தும் மனிதனை வந்தடைகிறது. கனவு சில சமயங்களில் இறைவனுடைய புறத்திலிருந்து வரும் சுபச் செய்தியாகவும், சில சமயங்களில் எச்சரிக்கையாகவும் இருக்கும்.

கனவுக்கு விளக்கம் சொல்லும் அற்புதமான கலையில் தேர்ச்சி பெற்றவரான இப்னு ஸிரீன்(ரஹ்) அவர்களின் இயற்பெயர் அபூபக்ர் முஹம்மது இப்னு ஸிரீன் என்பதாகும். இவர் ஈராக்கின் பஸரா நகரில் வாழ்ந்தவர்.

பத்ருப் போரில் கலந்து கொண்ட பதினெட்டு நபித்தோழர்கள் சூழ இப்னு ஸிரீன் அவர்களின் பெற்றோரின் திருமணம் நடந்தது என்பது சிறப்பிற்குரியது.

இப்னு ஸிரீன் அவர்கள் ஹதீதுக் கலையை நபித்தோழர்கள் அபூஹூரைரா(ரலி), இப்னு உமர்(ரலி), இப்னு ஜூபைர் (ரலி), இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி), அனஸ் இப்னு மாலிக்(ரலி) போன்ற ஸஹாபாக்களிடம் பயின்றார். இப்னு ஸிரீன் பல ஸஹாபாக்களின் சகவாசத்தில் வாழ்ந்தவராவார். இன்னும், இமாம் ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களுக்கு இப்னு ஸிரீன் நெருங்கிய நண்பராக இருந்தார்.

இப்னு ஸிரீன் இளமையில் பஸரா நகரின் ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தார். இப்னு ஸிரீன் மிகுந்த அழகுடையவராக இருந்தார். இன்னும், இளமையிலேயே இறையச்சமுடையவராக இருந்தார்.

இவர் மீது ஆசை கொண்ட ஒரு பணக்கார விதவைப் பெண், தன் பணியாளை இவர் வேலை செய்யும் கடைக்கு அனுப்பி, தாம் துணி வாங்க விரும்புவதாகவும், இப்னு ஸிரீனிடம் துணிகள் கொடுத்து விடும்படியும் கடை முதலாளிக்கு செய்தி அனுப்பினாள்.

அது போலவே கடை உரிமையாளரும் இப்னு ஸிரீனிடம் துணிகளை கொடுத்து அனுப்பி வைத்தார். தம் இல்லம் வந்த இப்னு ஸிரீனை வீட்டின் கதவை சாத்தி, தன் ஆசைக்கு இணங்குமாறு அவ்விதவைப் பெண் கூறினாள். நிலமையை உணர்ந்து கொண்ட இப்னு ஸிரீன் அவர்கள், ‘சுய தேவையை நிறைவேற்றி விட்டு வந்து ஆசைக்கு இணங்குவதாக கூறி விட்டு, கழிவறைக்குச் சென்று அங்கிருந்த மலத்தையெல்லாம் தன் உடல் மீது பூசி நாற்றத்தோடு வந்தார். அவள் அவரை வெறுப்போடு பார்த்து விலகிக் கொண்டாள்.

அங்கிருந்து வெளியேறிய இப்னு ஸிரீன் ஒரு கிணற்றை அடைந்து அங்கு குளித்து தூய்மையாகி நேரே பள்ளிவாசலுக்கு சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார். அப்போது பள்ளியிலிருந்தவர்கள், ‘இது என்ன? இப்னு ஸிரீன் மீது இருந்து கஸ்தூரி வாசனை வருகிறதே!’ என முகர்ந்து பார்த்து வியப்புக் கொண்டனர்.

அன்றிரவு இப்னு ஸிரீன் உறங்கும்போது நபி யூசுஃப் (அலை) அவர்கள் கனவில் தோன்றி அவரது கற்பு நெறியைப் பாராட்டி துஆ செய்து அவர்களின் மேலங்கியை இப்னு ஸிரீனுக்கு அணிவித்து விட்டு மறைந்தனர். அல்லாஹ்வின் கிருபையால், அதிலிருந்து இப்னு ஸிரீனுக்கு கனவுக்கான விளக்க ஞானம் பொங்கி வர ஆரம்பித்தது.

அக்காலத்திலும் பெரும் இறைநேசர்கள் கூட தம் கனவுக்கான விளக்கத்தை இப்னு ஸிரீனிடமே கேட்டு விளங்கி கொள்வார்கள் என்பது அன்னாரின் தனிப்பட்ட சிறப்பு. இன்றளவும் கனவுக்கு தாபிர் சொல்வது என்றால் அது இப்னு ஸிரீன் (ரஹ்) அவர்களின் பெயரே முன்னோடியாக இருக்கிறது.

நபித்தோழர் இப்னு ஜுபைர் (ரலி), தாம் அப்துல் மலிக் இப்னு மர்வானைக் கீழே வீழ்த்தி நான்கு முறை அவரைக் கன்னத்தில் அறைந்ததாக கனவு கண்டு, இதனைத் தம் பெயரைக் கூறாது இப்னு ஸிரீனிடம் எடுத்துரைத்து விளக்கம் கேட்டு வருமாறு ஒருவரை அனுப்பி வைத்தார். அவரும் சென்று இந்தக் கனவை தான் பார்த்ததாக கூறி விளக்கம் கேட்டார்.

அதற்கு இப்னு ஸிரீன் அவர்கள், ‘இது நீ கண்ட கனவல்ல. இந்த கனவைக் கண்டவரின் உண்மையான பெயரைக் கூறாமல் இதற்கு விளக்கம் கூற மாட்டேன்’ என்று அம்மனிதனை திருப்பி அனுப்பி வைத்தார்கள். அவரும் இப்னு ஜுபைரிடம் சென்று நடந்ததைக் கூறினான். இப்னு ஜுபைர் தான் இந்த கனவைக் கண்டதாக உண்மையைக் கூறி விளக்கம் பெற்றுவர மீண்டும் அவரை அனுப்பினார்கள். அவ்விதமே இப்னு ஸிரீனிடம் உண்மையைக் கூறவே, ‘அப்துல் மாலிக் இப்னு மர்வானுடைய வழித் தோன்றல்களுக்கே கிலாஃபத் பதவி கிட்டும்’ என்று விளக்கம் கூறி அனுப்பினார்கள்.

ஒரு நாள் இப்னு ஸிரீன்(ரஹ்) அவர்கள் தம் நண்பர்களோடு அமர்ந்திருக்கும் போது ஒருவர் வந்து தான் பாங்கு சொல்லக் கனவு கண்டதாக கூற, ‘உன்னுடைய கை வெட்டப்படும்’ என்று விளக்கம் கூறினார்கள். சிறிது நேரத்தில் மற்றொருவர் வந்து, தாம் பாங்கு சொல்ல கனவு கண்டதாக கூற, ‘நீர் ஹஜ் செய்வீர்’ என்று விளக்கம் கூறினார்கள்.

இருவரும் ஒரே மாதிரி கனவு கண்டிருக்க தாங்கள் ஏன் வெவ்வேறு விதமான விளக்கங்கள் கூறினீர்கள்? என்று வினவ, ‘முன்னவனின் முகத்தில் தீமையின் அடையாளத்தைக் கண்டேன்; பின்னவனின் முகத்தில் நன்மையின் அடையாளத்தைக் கண்டேன்’ என கூறினார்கள். பின்னர் இப்னு ஸிரீன் கூறியவிதமே இருவரது வாழ்விலும் நடந்தது.

ஒருநாள் இப்னு ஸிரீன் அவர்களின் அடிமைப் பெண் அன்னாரிடம், ‘நீங்கள் விண்ணிலே உயர்ந்து உயர்ந்து சென்று இறுதியில் ஜஹ்ரா என்ற விண்மீனை அடைந்துவிட்டது போன்று கனவு கண்டேன்’ என்று கூற, இதைக் கேட்டதும், ‘என்னுடைய முடிவு நெருங்கிவிட்டது; வரும் ஜூமுஆவுக்குள் நான் இறந்துவிடுவேன்’ என்று கூறினார்கள்.

அதுபோல், அடுத்த ஜுமுஆ தினத்தில் ஜூமுஆ தொழுகைக்கு முன் ஈராக் நாட்டின் பஸராவில் வைத்து இறைவனடி சேர்ந்தார்கள். ஹிஜ்ரி 110 ஷவ்வால் பிறை 9-ம் நாள் அன்னாரின் இறுதிநாளாகும். இமாம் ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்கள் இறந்து, சரியாக நூறு நாள் கழித்து இப்னு ஸிரீன் இறந்தார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version