நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பிறகு எவர் ஆயத்துல் குர்ஸி ஓதி வருகிறாரோ, அவர் மரணமாகும்போது சுவர்க்கத்தில் தன்னுடைய தங்குமிடத்தைப் பார்த்த பின்பே மரணிப்பார்.”
-அபூ உமாமா (ரலி))
ஆயத்துல் குர்ஸி:
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ.
பொருள்: அல்லாஹ் (எத்தகைய மகத்துவமுடையவன் என்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் (அழியாத) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனைச் சிறுதூக்கமோ, பெருந்தூக்கமோ பீடிக்காது; வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே; அவனின் அனுமதியின்றி அவனிடம் பரிந்துபேசுபவர் எவர்? அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும், அவர்களுக்கு பின்னால் உள்ளவற்றையும் அவன் நன்கு அறிபவன். அவனுடைய நாட்டமின்றி அவனின் அறிவிலிருந்து யாதொன்றையும் (மற்றவர்) அறிந்து கொள்ளமுடியாது. அவனுடைய குர்ஸி (அரியாசனம்) வானங்களையும், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமில்லை. இன்னும் அவனதான் மிக உயர்ந்தவன்; மகத்தானவன்.
– சூரா அல்பகரா : 255
நபித்தோழர் அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் ரமலானுடைய ஜகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். இந்நிலையில் ஒருநாள் இரவு ஒருவர் வந்து உணவுப் பொருட்களை எடுக்கலானார். அவரை நான் பிடித்து, “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன். அதற்கு அவர், “நான் ஒரு ஏழை. எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது” என்று கூறினார். எனவே, நான் அவரை விட்டுவிட்டேன்.
மறுநாள் விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், “அபூஹூரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவரின் நிலை என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும், தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். ஆகவே, இரக்கப்பட்டு அவரை விட்டுவிட்டேன்!” என்று கூறினேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் அவன் வருவான்” என்றார்கள். மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால், அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனைப் பிடிப்பதற்காகக் காத்திருந்தேன்.
மீண்டும் இரவில் அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்து, “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன். அதற்கு அவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை. எனக்குக் குடும்பம் இருக்கிறது. இனி நான் வரமாட்டேன்!” என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்.
விடிந்ததும், நபி(ஸல்) அவர்கள், “அபூஹூரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவன் தனக்குக் கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான். ஆகவே அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். “நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்” என்றார்கள்.
மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! ஒவ்வொரு முறையும் இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்!” என்று கூறினேன்.
அதற்கு அவன், “என்னை விட்டுவிடு! உனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்” என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன்.
“நீ படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்” என்றான். அத்துடன் அவனை நான் விட்டுவிட்டேன்.
பொழுது விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான். அதனால் அவனை விட்டுவிட்டேன்” என்றேன்.
அதற்கு, “அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், “நீ படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓதும்! அவ்வாறு ஓதினால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற வானவர் ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார், ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான் என்று என்னிடம் கூறினான்” எனத் தெரிவித்தேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கின்றான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நான், “தெரியாது” என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அவன்தான் ஷைத்தான்” என்று கூறினார்கள்.
