இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

மாபெரும் இறைநேசரான மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் எப்போதும் தங்களைத் தாழ்த்திக் கொள்ளும் நற்பண்பு உடையவர்களாகவும், பிறரைப்பற்றி எப்போதும் உயர்வாகப் பேசுபவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

ஒருமுறை அவர்கள், “மக்கள் என்னை உலகப் பற்றற்ற துறவி என்று சொல்கின்றார்கள். ஆனால், உண்மையில் உண்மையான துறவி கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தான். ஏனென்றால், அவர்கள் அரசராகவும், செல்வச் செழிப்புடன் இருந்தபோதிலும் பதவி மற்றும் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை” என்று கூறினார்கள்.

மற்றொரு நாள், மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் பள்ளிவாசலில் சொற்பொழிவு (பயான்) நிகழ்த்திக் கொண்டு இருந்தபோது அங்கிருந்தவர்களைப் பார்த்து,

“முஸ்லிம்களே! யாராவது ஒரு மனிதர் இந்தப் பள்ளிவாசலுக்கு வெளியே நின்றுகொண்டு, ‘இந்தப் பள்ளிக்குள் ஒரு தீய மனிதர் இருக்கிறார், உடனே அவர் இப்பள்ளியை விட்டு வெளியேற வேண்டும்’ என்று சொன்னால், அந்தத் தீயவன் நான்தான் என்று உடனே நான் பள்ளியிலிருந்து வெளியேறிவிடுவேன். ஏனென்றால் நீங்கள் எல்லோரும் நல்லவர்கள், உங்களில் நான்தான் மிகத் தீயவன்” என்று கூறினார்கள்.

அப்போது பள்ளிக்குள் நுழைந்த மாமேதை அல்லாமா அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் இதைக் காதால் கேட்டதும், “அவர்களின் இந்தப் பணிவுதான் அல்லாஹ் அவர்களை ‘இறைநேசர்’ என்ற உயர்ந்த அந்தஸ்தில் வைத்திருக்கிறான்” என்று மெச்சிக் கூறினார்கள்.

இதேபோல் மற்றொரு நாள், ஒரு பெண்மணி மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்களைப் பார்த்து, “உங்களை மாபெரும் இறைநேசர் என மக்கள் பாராட்ட வேண்டும் என்ற புகழுக்காகவே நீங்கள் அல்லாஹ்வை வணங்குகிறீர்கள்” என்று (குற்றம் சாட்டிப்) பேசினார்.

அதைக் கேட்டு கோபப்படாமல் உடனே அந்த இறைநேசர், “சகோதரியே! இத்தனை வருடங்களாக யாரும் கண்டுபிடிக்காத, என்னிடம் இருக்கும் ஒரு குறையைக் கண்டுபிடித்து என்னை யார் என்று நீ விளங்கிக் கொண்டாய். அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!” என்று இன்முகத்தோடு துஆ செய்தார்கள்.

அவர்களின் இந்த எதிர்பாராத பணிவையும் பெருந்தன்மையையும் கண்ட அந்தப் பெண்மணி தன் தவறை உணர்ந்து வெட்கித் தலைகுனிந்து சென்றாள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version