ரஜப் மாத ஆரம்பத்திலேயே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இவ்விதமாக துஆச் செய்வார்கள்.
اللهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ وَبَلِغْنَا رَمَضَانَ
யா அல்லாஹ்! ரஜப், ஷஃபான் மாதத்தில் எங்களுக்குப் பரக்கத் செய்தருள்வாயாக! ரமலான் மாதத்தை எங்களுக்கு அடையப் பெறுகின்ற பாக்கியத்தைத் தருவாயாக!
கண்ணியம் பொருந்திய ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் நிறைவான அருட்கொடைகளும், ஏராளமான உபகாரங்களும் நம்மை வந்து அடைய உள்ளன. ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு. 15-வது பிறை பிறந்த அந்த மஃரிப் முதல் மறுநாள் சுபுஹ் நேரம் வரை அதன் நேரமாகும்.
ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு அல்லாஹூதஆலா தன் அனைத்து படைப்பினங்கள் பக்கமும் கவனம் செலுத்துகிறான். படைப்புகள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஆனால் இருவர் மன்னிக்கப்படுவதில்லை. அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர், எவருடனாவது விரோதம் கொள்பவர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
— தப்ரானீ
ஷஃபான் மாதத்தின் 15-வது பிறை பிறந்த அந்த மஃரிப் முதல் மறுநாள் பஜ்ரு வரை உள்ள நேரமே பராஅத் இரவாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
இந்த ஷஃபான் மாதம் மிகவும் பரக்கத் நிறைந்ததாகும். இரட்சகனாகிய அல்லாஹ்விடம் அடியார்களின் நற்செயல்கள் உயர்த்தப்படுகின்றன. எனவே எனது நற்செயல்கள் நான் நோன்பு நோற்ற நிலையில் உயர்த்தப்படுவதை விரும்புகிறேன். — நஸயீ
நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு வந்துவிட்டால், “பாவமன்னிப்பைத் தேடுபவர் உண்டா? நான் மன்னிக்கிறேன். தேவைகளைக் கேட்போர் உண்டா? அதனை நான் நிறைவேற்றித் தருகிறேன். ரிஜ்கை வேண்டுபவர் உண்டா? அவருக்கு நான் ரிஜ்கை வழங்குகிறேன். சோதனையில் அகப்பட்டுள்ளோர் உண்டா? அவருக்கு அதனை நீக்கி சுகமளிக்கிறேன்” என முதல் வானில் அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி அழைப்பு விடுக்கிறான் என அருளினார்கள். “15-ம் இரவு மஃரிப் முதல் சுபுஹ் வரை இறைவனின் இந்த அழைப்பு தொடர்கிறது”.
— இப்னுமாஜா
ஷஃபான் மாதம் பிறை 15-ம் நாள் இரவு விழித்திருந்து வணக்கம் புரியுங்கள்; பகலில் நோன்பு வையுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
— மிஷ்காத்
ஆதமுடைய மக்களில் இந்த வருடம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும், மரணிக்கப்போகும் மனிதர்களின் எண்ணிக்கையும் இந்த இரவில் முடிவு செய்யப்படுகிறது. இந்த இரவிலேயே அமல்கள் உயர்த்தப்படுகிறது. ரிஜ்க் இறக்கப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
— மிஷ்காத்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒருநாள் இரவு நபி(ஸல்) அவர்கள் என் இல்லத்தில் படுக்கையில் இல்லாததைக் கண்டு அவர்களைத் தேடி வெளியில் புறப்பட்டு வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஜன்னத்துல் பகீஃ” எனும் கப்ருஸ்தானில் நின்று வானத்தின் பக்கம் கையை உயர்த்தியவாறு அங்கு அடக்கம் பெற்றுள்ள ஷுஹதாக்களுக்காகவும் (உயிர்த்தியாகி), முஃமின்களுக்காகவும் துஆச் செய்து கொண்டிருந்தார்கள். நான் வருவதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள்,
“ஆயிஷாவே! இந்த ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் முதல் வானத்திற்கு, அல்லாஹ் இறங்கிவந்து ‘பனூகல்ப் என்னும் கூட்டத்தாரின் (அடர்த்தியான முடியுள்ள) ஆட்டு மந்தையின் ரோமங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பாவங்களை மன்னிக்கிறான்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
— இப்னுமாஜா
இந்த இரவில் கப்ரு ஜியாரத் செய்து, கப்ராளிகளின் நலவுகளுக்காகத் துஆச் செய்வது சுன்னத்தாகும். மேலும், இந்த இரவில் நபிலான தொழுகைகள், குர்ஆன் திலாவத், திக்ரு, துஆ போன்ற நல்ல அமல்களை அதிகம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், அல்லாஹ் இந்த இரவில் அடுத்த வருடத்திற்கான இரணம் முதல் மரணம் வரை அனைத்தையும் முடிவு செய்கிறான்.
இந்தப் புனிதமான இரவிலும் இறைமன்னிப்பைப் பெறாதவர்கள் யாரெனில்:
- இணை வைப்பவன்
- கஞ்சன்
- கொலை செய்பவன்
- விபச்சாரம் செய்பவன்(ள்)
- உறவு முறைகளைத் துண்டித்து வாழ்பவன்
- கரண்டை காலுக்குக் கீழே ஆடை உடுத்துபவன்
- பெற்றோர்களைத் துன்புறுத்துபவன்
- மது அருந்துபவன்.
— பைஹகீ
இந்தப் புனிதமான இரவில் வீணான காரியங்களில் ஈடுபட்டு கழித்துவிடாமல் நல்அமல்களுடனும், இறைமன்னிப்பை வேண்டியும், இந்த இரவை அல்லாஹ்வுக்காக ஆக்கிக்கொண்டால் மறுமைக்கு அதுவே மிகவும் பலனுள்ளதாக ஆகிவிடும்.
பராஅத் இரவில்…
- பராஅத் இரவு மஃரிபுக்கு முன்பு குளித்துத் தூய்மையான நல்ல ஆடையை உடுத்திக்கக்கொண்டு ஆண்கள் பள்ளிக்கு மஃரிப் தொழுகைக்குச் செல்லவேண்டும்.
- பெண்கள் வீட்டிலேயே ஒரு சுத்தமான இடத்தை ஒதுக்கி இபாதத் செய்யவேண்டும்.
- தொழுகை முடிந்ததும் பள்ளிவாசலில் கூட்டாக நடைபெறும் நல்அமல்களில் முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும்.
- நமது முன்னோர்கள் பெற்றோர், உற்றார், உறவினர்களை ஜியாரத் செய்து அவர்களின் பாவமன்னிப்பிற்காக, துஆச் செய்வதுடன் நாளை நமக்கும் இந்த நிலைதான் என்ற சிந்தனையுடன் சென்று வரவேண்டும்.
- ஏழைகளுக்கு உணவாகவோ, பொருளாகவோ தர்மம் செய்ய வேண்டும்.
- இந்த இரவில் தஸ்பீஹ் நபில் தொழுகை, குர்ஆன் திலாவத், திக்ரு, தஹஜ்ஜூத் தொழுகை, இஸ்திஃபார் போன்ற நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
தஸ்பீஹ் நபில் தொழுகை தொழும் முறை :
தஸ்பீஹ் நபில் நான்கு ரக்அத் என நிய்யத் செய்து தக்பீர் கட்டியபின் ‘ஃதனா’ ஓத வேண்டும்.
பின்பு “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்ற தஸ்பீஹை 15 தடவை ஓதவேண்டும்.
பின்பு அல்ஹம்து சூராவும் துணை சூராவும் ஓதியபின் 10 தடவையும்
ருகூவில் 10 தடவையும் ருகூவுக்குப் பின் 10 தடவையும் முதல்
சஜ்தாவில் 10 தடவையும் 2-வது சஜ்தாவுக்கு முன் 10 தடவையும்
2-வது சஜ்தாவில் 10 தடவையும்
ஆக ஒரு ரகஅத்துக்கு 75 தஸ்பீஹ்கள். நான்கு ரகஅத்துகளுக்கு மொத்தம் 300 தஸ்பீஹ்கள் ஓதவேண்டும்.
