இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

இறைவனுடைய புறத்திலிருந்து மனிதர்களுக்கு வழிகாட்ட வந்தவர்களே இறைத்தூதர்கள். மனோஇச்சைகளைப் பின்பற்றி வாழும் மக்களை நேர்வழிப்படுத்தவே இறைத்தூதர்கள் எல்லாக் காலத்திலும் தோன்றினார்கள். அப்படித் தோன்றிய இறைத் தூதர்களில் நபி யூனுஸ் (அலை) அவர்களும் ஒருவர். இவர்கள் அதிகம் சோதிக்கப்பட்ட நபிமார்களில் உள்ளவராவர்கள். இவர்களின் காலம் கி.மு.600-800 க்கும் மத்தியில் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

ஈராக் நாட்டில் தஜ்லா நதியின் கரையோரத்தில் நைனுவா என்ற ஒரு ஊர் இருந்தது. அவ்வூரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வந்தனர். அப்போதைய நைனுவா நகர மக்கள் மிகப்பெரிய உருவமுள்ளவர்களாக இருந்தனர். அவர்களின் கால் பாதங்கள் மட்டும் மூன்றடி நீளமுள்ளதாக இருந்தன.

இம்மக்கள் அனைவரும் விக்கிரக ஆராதனை செய்ததோடு எல்லா பாவங்களிலும் மூழ்கி இருந்தனர். நைனுவா நகரை ஆண்டு வந்த மன்னன் ஒருமுறை இஸ்ரவேலர்களின் மீது படையெடுத்து அம்மக்களில் பலரை கைதிகளாக்கி நைனுவா நகரில் சிறைப்படுத்திவிட்டான்.

இஸ்ரவேலர்களின் அப்போதைய அரசனான ஹஸ்கியா என்பவர் அப்போதைய இறைத்தூதராக இருந்த அஷ் இயா என்ற நபியிடம் ஆலோசனை செய்து நபி யூனுஸ் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்து, நைனுவா நகர் சென்று இஸ்ரவேலர்களை சிறையிலிருந்து மீட்டு வருமாறு அனுப்பி வைத்தார்.

நபி யூனுஸ் (அலை) அவர்கள் தம் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு நைனுவா நகர் போய்ச் சேர்ந்தார்கள்.

நைனுவா நகர் சென்ற நபி யூனுஸ் (அலை) அவர்கள் அவ்வூரில் மன்னரும் மக்களும் விக்கிரக ஆராதனை செய்வதையும், பாவங்களில் மூழ்கிக்கிடப்பதையும், அங்கு நடக்கும் அநியாயங்களையும் கண்டு கவலையடைந்து, இம்மக்கள் நேர்வழி பெற வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

பிறகு நைனுவா நகர மன்னனைச் சென்று சந்தித்து, இஸ்ரவேலர்களின் தூதுவராக தாம் வந்திருப்பதாகவும், இன்னும் இறைத்தூதர் என்றும் கூறிவிட்டு, மன்னன் விக்கிரக ஆராதனை செய்வதை விட்டு விலகி, படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும், அநியாயமாக சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டினார்கள்.

நபி யூனுஸ் (அலை) அவர்களின் உபதேசத்தை அம்மன்னன் நிராகரித்தான். நபி யூனுஸ் (அலை) அவர்கள் மூன்றுநாள் வரை அம்மன்னனிடம் விக்கிரக ஆராதனையை விட்டு விடுமாறும், இஸ்ரவேலர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மன்னன் நபி யூனுஸ் அவர்களை கேவலமாகப் பேசி அரண்மனையை விட்டு வெளியேற்றினான்.

நபி யூனுஸ் (அலை) அவர்கள், அரண்மனையை விட்டு வெளியேறி, மக்கள் மத்தியில் சென்று ஏகத்துவ அழைப்புக் கொடுத்தார்கள். ஆனால், மக்கள் கேலி கிண்டல் செய்து கேவலப் படுத்தினார்களே தவிர, எவரும் நபியின் சொல்லுக்கு செவி சாய்க்கவில்லை.

நபி யூனுஸ் (அலை) அவர்கள் சலிக்காமல் மக்களிடம் தொடர்ந்து நல்வழியின் பக்கம் அழைப்புக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இதனை அறிந்த அரசன் நபி யூனுஸ் (அலை) அவர்களை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டான்.

நபி யூனுஸ் (அலை) அவர்களை சிறையில் அடைத்ததோடு உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் கொடுக்காமல் கொடுமை செய்தனர். ஆனால், நபி யூனுஸ் (அலை) அவர்கள் எவ்வித சோர்வுமின்றி நல்ல திடகாத்திரத்துடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்து சிறைப் பணியாளர்கள் நபி யூனுஸ் (அலை) அவர்களிடம் தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.

‘நாங்கள் உண்ண உணவு கொடுக்கவில்லை; தாகத்திற்கு தண்ணீரும் கொடுக்கவில்லை. ஆனால் எவ்வித சோர்வுமின்றி நன்றாக இருக்கிறீர்களே! அதற்கான காரணம் என்ன? என்று எங்களுக்குக் கூறுங்கள்’ என்று கேட்டனர். அ

தற்கு நபி யூனுஸ் அவர்கள், ‘என்னைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ் எனக்கு சுவர்க்க உணவை அளிக்கிறான் அதனால் நான் நன்றாக இருக்கிறேன்’ என்று பதில் கூறினார்கள்.

இதனைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த சிறைப் பணியாளர்கள், ‘அப்படியானால், நாங்களும் விக்கிரக ஆராதனையை விட்டுவிட்டு தங்கள் வழியில் வந்தால், எங்களுக்கு அவ்விதம் அல்லாஹ் உதவுவானா?’ என்று வினவினர்.

அதற்கு நபி யூனுஸ் (அலை) அவர்கள், ‘அல்லாஹ் மிகக் கருணையாளன். யாவருக்கும் உதவி புரிவான்’ என பதிலளித்தார்கள். இதனைக் கேட்ட அந்த சிறை ஊழியர்கள் நபி யூனுஸ் அவர்களிடம், இஸ்லாத்தைத் தழுவி நேர்வழி அடைந்தனர்.

இந்தத் தகவல் அரசனுக்கு எட்டியது. இதுபோல் பொதுமக்களும் இவரின் பின்னால் சென்றுவிட்டால், நம் நிலை என்னவாவது? என்று தம் மந்திரிகளை அழைத்து, ‘நபி யூனுஸை சிரச்சேதம் செய்துவிடலாமா?’ என்று ஆலோசித்தார்.

அதற்கு மந்திரிகள், ‘வேண்டாம் மன்னரே! இவர் ஏதோ மாயசக்தி உடையவராக தெரிகிறது. இறந்தபின் தங்களை வந்து பழிவாங்கினால் என்ன செய்வது? ஆகவே, இவரை நாடு கடத்திவிடலாம்’ என்று ஆலோசனை கூறினர்.

மன்னரும் அதை ஒப்புக்கொண்டு நபி யூனுஸ் (அலை) அவர்களை நைனுவா நகரை விட்டு நாடு கடத்தும்படி உத்தரவிட்டான்.

நைனுவா நகரை விட்டு வெளியேறிய நபி யூனுஸ் (அலை) அவர்கள் தம் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு சிலகாலம் பல இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், மீண்டும் நைனுவா நகருக்குச் சென்று மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வேண்டும் என அல்லாஹ் ‘வஹீ’ (இறைச்செய்தி) அறிவித்தான். எனவே, மீண்டும் நபி யூனுஸ் (அலை) அவர்கள் நைனுவா நகருக்குள் நுழைந்து பொதுமக்களிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

மக்கள் இம்முறை அதிக பலத்தோடு தம் எதிர்ப்புகளை கொடுத்தார்கள். நபி யூனுஸ் (அலை) அவர்களை கல்லால் அடித்து விரட்டினர். அதனால் நபி யூனுஸ் (அலை) அவர்கள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. ஆனாலும், மக்களின் எதிர்ப்புகளையும் துன்பங்களையும் பொருட்படுத்தாது சுமார் முப்பது வருடங்கள் அவ்வூரிலேயே பொறுமையோடு மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

இதனாலேயே நபி நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் நபி யூனுஸ் (அலை) அவர்களே மக்களிடம் அதிகம் துன்புறுத்தப் பட்டவர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

சுமார் முப்பது ஆண்டுகால முயற்சியில் இருவர் மட்டுமே நபியின் அழைப்புக்கு இசைந்தனர். நபி யூனுஸ் (அலை) அவர்களும் தொடர்ந்து மக்களிடம் சென்று நேர்வழியின் பக்கம் அழைப்புக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். மக்களும் நபியை தொல்லைப் படுத்திக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் நபி யூனுஸ் (அலை) அவர்கள் மக்களிடம், ‘நீங்கள் என் அழைப்புக்குச் செவிசாய்க்காமல் அடம்பிடித்துக் கொண்டும், என் மீது அக்கிரமும் செய்து கொண்டிருந்தால், அல்லாஹ்வின் கோபப்பார்வை உங்கள் மீது ஏற்பட்டுவிடும்’ என்று எச்சரித்தார்கள்.

அதற்கு அந்த மக்கள், ‘அல்லாஹ்வின் கோபப்பார்வை எங்களை என்ன செய்துவிடும்’ என்று கூறி நபி யூனுஸ் (அலை) அவர்களை கேலி பேசினர். அப்போது நபி யூனுஸ் (அலை) அவர்கள், ‘உங்கள் மீது அல்லாஹ் நெருப்பு மழையைப் பொழியச் செய்து அழித்துவிடுவான்’ என எச்சரித்தார்கள். அதற்கு அம்மக்கள், “எப்போது நெருப்பு மழை வரும்’ என்று கிண்டல் செய்தனர்.

அல்லாஹ்வின் பேராற்றலை நீங்கள் அறியாது கிண்டல் செய்கிறீர்கள், இது உங்களுக்கு நல்லதல்ல. நான் மீண்டும் உங்களை இறுதியாக எச்சரிக்கிறேன். இந்த விக்கிரக ஆராதனையை விட்டு உடனடியாக விலகி, அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து நல்வழியில் உங்கள் செயல்களை அமைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல், இன்னும் நாற்பது நாட்களில் நெருப்பு மழை பொழிந்து நீங்கள் அனைவரும் அழிந்து விடுவீர்கள்’ என்று நபி யூனுஸ் (அலை) அவர்கள் எச்சரித்தார்கள். ஆனால் அவ்வூர் மக்களோ இதனைப் பொருட்படுத்தவில்லை.

அதனால், ‘இறைவா! இம்மக்கள் இனி நேர்வழியை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இவர்கள் மீது நெருப்பு மழை பொழியச் செய்து இவர்களை அழித்துவிடுவாயாக!’ என்று நபி யூனுஸ் (அலை) அவர்கள் பிரார்த்தனை புரிந்துவிட்டு, நைனுவா நகரை விட்டு வெளியேறி, அங்கிருந்த மலை ஒன்றின் மீது சென்று அமர்ந்து கொண்டார்கள். இன்றும் அந்த மலை ஈராக் நாட்டில், ‘யூனுஸ் மலை’ என்றே அழைக்கப்படுகிறது.

‘யா அல்லாஹ்! நான் கூறிய தவணைப்படி நாற்பது நாட்களில் அவர்கள் மீது நெருப்பு மழை பொழிவித்து நான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவாயாக!’ என்று மலை மீதமர்ந்து பிரார்த்தித்தார்கள். இந்நிலையில் நபி யூனுஸ் (அலை) அவர்கள் கூறி வந்த நாற்பது நாட்கள் தவணையில் 39 நாட்கள் கழிந்தன. ஆனால், அம்மக்களுக்கு எவ்வித துன்பமும் ஏற்படவில்லை.

அரசனும் மக்களும் நாற்பதாவது நாளில் ஏதாவது நடந்துவிடுமோ என்று பயந்தபடி நாற்பதாவது நாள் விடியும்போது ஒருவித அச்சத்தோடு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. மாறாக, குளிர்ந்த காற்று வீசியது. அரசனும், மக்களும் சந்தோஷம் அடைந்ததோடு, ‘பொய் கூறிய நபி யூனுஸை கண்டுபிடித்து கொண்டு வருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்று அரசன் அறிவித்தான்.

பகல் பொழுதின் நேரம் ஆக ஆக நிலை மாற ஆரம்பித்தது. குளிர்ந்த காற்று நீங்கி, உஷ்ணக்காற்று வீச ஆரம்பித்தது. பிறகு சிறிது நேரத்தில், சிவப்பு நிற மேகக்கூட்டங்கள் ஆகாயத்தில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. இதனை எதிர்பார்க்காத அம்மக்கள் யாவரும் அச்சம் கொள்ள ஆரம்பித்தனர். அரசனும் அச்சத்துடன் செய்வதறியாது திகைத்தான்.

ஒருவேளை நபி யூனுஸ் கூறியபடி நெருப்பு மழை பொழிந்து நாமெல்லோரும் அழிந்துவிடுவோமோ என்று பயந்த அரசன், நபி யூனுஸை கண்டுபிடித்து கொண்டு வருமாறும், அவ்வாறு யாராவது நபியைச் சந்தித்தால், ‘தானும் மக்களும் மனம் திருந்திவிட்டதோடு அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, நபியைப் பின்பற்றுகிறோம்’ என்ற செய்தியை நபியிடம் கூறிவிடும்படி மக்களுக்கு ஆணையிட்டான். ஆனால் யாராலும் நபி யூனுஸ் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

என்ன செய்வது என்று அறியாத நிலையில், இன்னும் நெருப்பு மேகங்கள் சூழ்ந்திருப்பதைப் பார்த்த அரசன் மக்களிடம், ‘நான் அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொள்கிறேன். நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரும் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்து ஸஜ்தா செய்து இந்த நெருப்பு மேகத்திடமிருந்து காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்வோம்’ என்று ஆணையிட்டான். அவ்விதமே அரசனும், மக்களும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து பாவமன்னிப்புத் தேட ஆரம்பித்தார்கள்.

கருணையாளனாகிய அல்லாஹ் அம்மக்களின் பாவத்தை மன்னித்ததோடு, நெருப்பு மேகங்களையும் நீங்கச்செய்து அவர்களுக்கு உதவி செய்துவிட்டான். ஆகவே, நைனுவா நகர மக்கள் அனைவரும் அரசன் உட்பட அல்லாஹ்வையே வணங்க ஆரம்பித்தனர். அல்லாஹ்வும் அவர்களின் நெருக்கடிகளை நீக்கி சுகமாக வாழச்செய்தான்.

அல்லாஹ் இதனைப்பற்றி குர்ஆனில்:

فَلَوْلا كَانَتْ قَرْيَةٌ أَمَنَتْ فَنَفَعَهَا إِيْمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا امَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَوةِ الدُّنْيَا وَمَتَعَنْهُمْ إِلَى حِينٍ

தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கைக் கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக்கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப் போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; இன்னும் சிறிது காலம் சுகம் அனுபவிக்கும்படியும் ஆக்கிவைத்தோம்.

— சூரா யூனுஸ் : 98

நைனுவா மக்கள் மனம் திருந்தியதும், அல்லாஹ் அவர்களின் வேதனையை அகற்றியதைப் பற்றியும், நபி யூனுஸ் (அலை) அவர்கள் அறியாத நிலையில் மலையின்மீது அமர்ந்திருந்தார்கள்.

நைனுவா அரசனும், மக்களும், நெருப்பு மழையில் அழிந்திருப்பார்கள் என்றே நபி யூனுஸ் அவர்கள் எண்ணினார்கள். எனவே, அழிந்துபோய்விட்ட நைனுவா நகரைக் காணும் எண்ணத்தில் அம்மலையிலிருந்து இறங்கி நைனுவா நகரத்தை நோக்கி நடந்தார்கள். நகரை நெருங்கும்போதே, அவ்வூர் எவ்வித அழிவுமின்றி மக்கள் முன்பு இருந்ததைவிட அதிக சுகத்தோடும், சந்தோஷத்துடனும் இருப்பதைக் கண்டு குழப்பம் அடைந்தார்கள்.

நைனுவா நகர மக்களுக்கு எதிராக தன் பிரார்த்தனையை ஏன் அல்லாஹ் அங்கீகரிக்கவில்லை? இத்தனைத் துயரத்தைத் தனக்குக் கொடுத்தவர்கள் எவ்வித வேதனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறார்களே! அல்லாஹ் இவர்களை ஏன் தண்டிக்கவில்லை? போன்ற கேள்விகளோடும், குழப்பங்களோடும் மனநிம்மதி கொள்ளாமல், இனி இந்த ஊர்மக்களையே சந்திக்கக்கூடாது என்று எண்ணி ஊருக்குள் நுழையாமல் தம் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, மனம் வெறுத்த நிலையில் அவ்வூரை விட்டு நீங்கி பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அப்போது தஜலா நதி குறுக்கிட்டது.

தஜ்லா நதியைக் கடக்க சுற்றும் முற்றும் பார்த்தார்கள்; எவ்வித படகும் தென்படவில்லை. எனவே, நீந்தியே இந்த ஆற்றைக் கடந்து விடலாம் என்றெண்ணி தம் மனைவியை கரை ஓரத்தில் அமர வைத்துவிட்டு, மூத்த மகனைத் தோளில் சுமந்து சிரமத்துடன் நீந்தி அக்கரையை அடைந்து தம் மகனை அக்கரையில் இறக்கிவிட்டார்கள்.

மீண்டும் இந்தப்பக்கமாக நீந்தி வந்து இரண்டாவது மகனை தம் தோளில் ஏற்றி நதியில் நீந்த ஆரம்பித்தார்கள். அப்போது நீரில் இழுவை சக்தி எதிர்பாராதவிதமாக அதிகரித்துவிடவே, நபி யூனுஸ் அவர்கள் நீந்த சிரமப்பட்டார்கள்.

அந்த நேரத்தில் சுமந்திருந்த இரண்டாவது மகன் தவறி தண்ணீரில் விழுந்தார். ஆற்றுத் தண்ணீர் அப்பையனை இழுத்துக் கொண்டு போனது. இதனைக் கண்டு திகைத்த நபி யூனுஸ் அவர்கள், அவனைக் காப்பாற்ற முயன்ற அதே நேரத்தில், அக்கரையில் சேர்க்கப்பட்டிருந்த மூத்த மகனை ஓநாய் கடித்து கவ்வி இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது.

தண்ணீரில் விழுந்துவிட்ட இளைய மகன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிடவே, மூத்த மகனையாவது ஓநாயிடமிருந்துகாப்பாற்றி விடலாம் என்று நினைத்து வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து ஓநாயைத் துரத்திக் கொண்டு சென்றார்கள்.

வெகுதூரம் நபி யூனுஸ் அவர்கள் ஓடித் தேடியும் மூத்த மகனைக் காணாது போகவே மீண்டும் ஆற்றிற்கே வந்தார்கள்.

இரு மகன்களை ஒரே சமயத்தில் இழந்த நிலையில், மனைவியையாவது காப்பாற்றிவிடலாம் என்று மீண்டும் நதியில் நீந்தி வந்து கரையில் பார்த்தால், மனைவியைக் காணவில்லை. தங்கள் மனைவியை நிற்க வைத்த இடத்தைப் பார்த்தார்கள். அங்கே குதிரையின் காலடித் தடங்கள் இருந்தன. அந்த வழியே சென்ற கொள்ளையர்கள் மனைவியைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று விளங்கிக்கொண்டார்கள். குடும்பம் முழுவதும் இழந்து தன்னந்தனியே செய்வதறியாது துக்கத்தோடு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு பிரயாணித்து நெடுந்தூரம் வந்தபோது கடல் தென்பட்டது. அங்கே ஒரு கப்பல் புறப்படத் தயாராக இருந்தது. வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்ளலாம் என்றெண்ணி, அந்தக் கப்பல் மாலுமியிடம் அனுமதி பெற்று அதில் ஏறிக் கொண்டார்கள்.

அக்கப்பலில் இருந்த மக்கள், நபி யூனுஸ் அவர்களிடம், ‘தாங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்?’ என்று வினவ, அதற்கு நபியவர்கள், ‘நான் ஒரு பாவி, என் மனைவி குழந்தைகள் அனைத்தையும் இழந்த ஒரு அனாதை, எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் பயணிக்கிறேன். அல்லாஹ் எங்கு நாடுகிறானோ அங்கு செல்வேன்’ என்று பதில் கூறினார்கள்.

நபி யூனுஸ் (அலை) அவர்களின் தோற்றமும், அவர்களின் பரிதாப நிலையும் எல்லோருக்கும் ஒரு அன்பை ஏற்படுத்திவிட்டது. நபி யூனுஸ் (அலை) அவர்களுக்கு பணிவிடை புரிந்ததோடு, உணவு உபசரணையும் செய்தார்கள். கப்பல் பிரயாணம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் நடுக்கடலில் திடீரென கப்பல் நின்றுவிட்டது.

கப்பலில் ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்றெண்ணி முழுக்கப்பலையும் மாலுமி பரிசோதித்தார். ஆனால், எவ்விதக் கோளாறும் தென்படவில்லை. கப்பல் ஏன் திடீரென நின்றுவிட்டது? என மாலுமிக்குப் புரியாத புதிராக இருந்தது.

அக்கால வழக்கப்படி, ஒரு அடிமை தன் எஜமானனுக்குத் தெரியாமல் ஓடிவந்து கப்பலில் ஏறிக்கொண்டாலோ அல்லது ஒரு மனைவி தன் கணவனுக்குத் தெரியாமல் கப்பலில் ஏறிக்கொண்டாலோ அந்தக் கப்பல் நடுக்கடலில் நின்று கொள்ளும். அவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றாதவரை கப்பல் நகராது என்ற நம்பிக்கை இருந்தது.

எனவே, மாலுமி பிரயாணிகளைப் பார்த்து, ‘உங்களில் யாரேனும் ஒருவர் அடிமையாயிருந்து, அவர் தன் எஜமானனுக்குத் தெரியாமல் ஓடி வந்தவராக இருக்கிறீர்களா? அல்லது யாரேனும் ஒரு பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் ஓடி வந்தவராக இருக்கிறீர்களா? அப்படியிருந்தால், அவர் மட்டும் இக்கப்பலை விட்டு வெளியாகிக் கொள்ளவும். இல்லையென்றால், ஒருவருக்காக அத்தனைபேரும் உயிர் இழக்கவேண்டி வரும்’ என்றார்.

இதனைக் கேட்ட பிரயாணிகள் அமைதியாக இருந்தனரே தவிர, யாரும் முன்வந்து எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, கப்பலின் ஓர் ஓரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த நபி யூனுஸ் (அலை) அவர்கள் எழுந்து மாலுமியின் முன்வந்து, ‘நான்தான் அந்தக் குற்றவாளி! என்னுடைய எஜமானன் இட்டக் கட்டளையை நிறைவேற்றாததோடு அவன் அனுமதியின்றி ஓடி வந்து இக்கப்பலில் ஏறிக்கொண்டேன். தயவு செய்து என்னைக் கடலில் தூக்கிப் போட்டுவிட்டு உங்கள் பிரயாணத்தைத் தொடருங்கள்’ என்று கூறினார்கள்.

நபி யூனுஸ் (அலை) அவர்கள் இவ்வாறு சொல்லக் கேட்ட மக்கள் ஆச்சரியத்தால் திகைத்தனர். நல்ல மனிதராக அல்லவா இருக்கிறார், நம்மைக் காப்பாற்றவே இவ்விதம் பொய் கூறுகிறார் என்றெண்ணி, யாரும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

கப்பலிலிருந்த அத்தனைபேரும் ஒன்றும் பேசாது மவுனமாக நிற்பதைக் கண்ட நபி யூனுஸ் (அலை) அவர்கள், ‘ஏன் இப்படி எல்லோரும் மவுனமாக இருக்கிறீர்கள்? என் கூற்றில் உங்களில் யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லையா? நான் உண்மையைத்தான் சொல்கிறேன். என் எஜமானனின் உத்தரவின்றி ஓடி வந்து இக்கப்பலில் ஏறியது உண்மைதான். என் ஒருவனின் மீது இரக்கப்பட்டு உங்கள் அத்தனை பேரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்று சீட்டு எழுதி போட்டு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து முடிவெடுங்கள். அப்போது நீங்கள் நான் கூறுவது உண்மை என்று புரிந்து கொள்வீர்கள்’ என்று கூறினார்கள்.

நபி யூனுஸ் அவர்கள் கூறியதுபோல் ஒரு சீட்டில் ‘உண்மை’ என்றும் இன்னொரு சீட்டில் ‘பொய்’ என்றும் எழுதி இரண்டையும் குலுக்கிப் போட்டு ஒரு நபரை அழைத்து எடுக்கச் செய்தனர். அவர் ஒரு சீட்டை எடுத்ததும், ‘உண்மை’ என்று எழுதியிருந்தது.

பிறகு மாலுமி இன்னொரு முறை சீட்டைக் குலுக்கிப் போட்டு வேறொரு நபரை அழைத்து எடுக்கச் செய்தார். அவர் எடுத்ததிலும் ‘உண்மை’ என்றே எழுதியிருந்தது. இவ்வாறு பலபேரை அழைத்து பல தடவை குலுக்கி எடுத்துப் பார்த்ததில் ஒவ்வொரு தடவையும் ‘உண்மை’ என்ற சீட்டே வந்தது. இறுதியாக மாலுமி ஒரு தடவை சீட்டைக் குலுக்கி ஒன்றை எடுத்துப் பார்த்தார். அதிலும் ‘உண்மை’ என்றே வந்திருந்தது.

நபி யூனுஸ் (அலை) அவர்களும் கூறியபடியே ‘உண்மை’ என்று சீட்டு வந்திருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு நல்லவரை எவ்வாறு கடலில் தூக்கிப் போட முடியும்? என்று மக்கள் அனைவரும் தயங்கியபடியே ஒன்றும் செய்யாது நின்றிருந்தனர்.

இதனை விளங்கிக் கொண்ட நபி யூனுஸ் (அலை) அவர்கள், ‘நான் என் எஜமானின் உத்தரவு இல்லாமல் ஓடி வந்த அடிமைதான்’ எனக்கூறிவிட்டு, யாரும் எதிர்பாராத தருணத்தில் கப்பலிலிருந்து கடலில் குதித்துவிட்டார்கள்.

அதே நேரத்தில் கீழே பெரிய மீன் ஒன்று வாயைத் திறந்தபடி இருந்ததால், நபி யூனுஸ் (அலை) அவர்கள் கடலில் குதித்ததும் நேராக மீனின் வாயில் விழுந்து மீனின் வயிற்றுக்குள் சென்றுவிட்டார்கள். இதைப் பார்த்த மக்கள் அலறினார்கள்; பதறினார்கள்; ஒரு நல்ல மனிதரை இவ்வாறு இழந்துவிட்டோமே! என வருந்தினர்.

நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றில் நாற்பது நாட்கள் இருந்தார்கள் என்பது பெரும்பாலோரின் கருத்து. நபி யூனுஸ் (அலை) அவர்களை உணவாக்கிக் கொள்ளக்கூடாது என மீனுக்கு அல்லாஹ் தடை போட்டுவிட்டான். மீனின் வயிற்றை ஒரு சிறைக்கூடம் போல் அல்லாஹ் ஆக்கிவிட்டான். நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்ட நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்து கொண்டே பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

இதனை அல்லாஹ் குர்ஆனில்:

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

இன்னும் துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தாரை விட்டும்) கோபமாக வெளியேறியபோது, அவரை நாம் நெருக்கடியில் ஆக்க மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். எனவே, அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து, உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன் என்று பிரார்த்தித்தார்.

— சூரா அல் அன்பியா : 87

நைனுவா மக்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டிருந்தும், தான் அம்மக்களின் விஷயத்தில் பொறுமை கொள்ளாது அவசரப்பட்டு அவர்கள் மீது சாபமிட்டு விட்டதையும், பிறகு அல்லாஹ்வின் அனுமதியின்றி நைனுவா நகரத்தை விட்டு வெளியாகிவிட்டதையும், அதன் காரணமாகவே, தங்கள் மனைவி பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டதாகவும், பிறகு கப்பலில் ஏறி வேறு இடத்திற்கு அல்லாஹ்விடம் அனுமதி பெறாமலேயே சென்றதால் கப்பல் நின்று போனதும், பிறகு கடலில் குதித்ததையும், மீன் விழுங்கியதையும் இவை அனைத்தையும் மீன் வயிற்றினுள் இருக்கும்போது நினைத்துப் பார்த்து, உள்ளம் உருகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

நாற்பது நாட்கள் முடிந்தபின் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை மன்னித்து, நபியை கரையோரத்தில் கக்கிவிடும்படி மீனுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். அந்த மீன் கரையோரம் வந்து நபியை கரையில் கக்கிவிட்டது. இந்த இடம் ஈராக் நாட்டில் கூஃபா நகரில் புராத் நதி கரையிலுள்ளது. இந்த இடத்தை இன்றும் மக்கள் ‘மகாமே யூனுஸ்’ என்றே அழைக்கின்றனர். இதனை அல்லாஹ் குர்ஆனில்:

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ * فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ * فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ * فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ * لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ * فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ * وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ

மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் நின்றுமுள்ளவர்; நிரப்பப்பட்ட கப்பலில் அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்தனர்; இவர்தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானிக்கப்பட்டது); ஆகவே, பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கியது. ஆனால், அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதி செய்து கொண்டிராவிட்டால், (மறுமையில்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். இன்னும் அவர் நோயuற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம். மேலும், நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்து நிழலிடுமாறு செய்தோம்.

— சூரா அஸ்ஸாஃப்ஃபாத் : 139 – 146

மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நபி யூனுஸ் (அலை) அவர்களுடைய நிலை மிக்க பரிதாபமாக இருந்தது.

மீன் வயிற்றிலிருந்த கொடிய வெப்பத்தின் காரணமாக அவர்கள் தலைமுடி, தாடி அனைத்தும் உதிர்ந்து போயிருந்தன. முட்டையிலிருந்து வெளிப்பட்ட பறவையின் குஞ்சு போல் உடலின் பாகமெல்லாம் மெலிந்தும், தோல் உரிந்தும் காணப்பட்டது. அவர்களால் உட்காரவோ, நடக்கவோ முடியாத நிலையில் கிடந்தார்கள். அவர்கள் சுருண்டு படுத்துக்கிடந்த நிலையில் அவர்கள் அருகே அல்லாஹ் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்து வெயில் படாதவாறு அவருக்கு நிழலிடுமாறு செய்தான்.

அக்கொடி அவர்கள் மீது படர்ந்ததால் வெயிலின் உஷ்ணம் படாதவாறு ஆனது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் ஆடு நபியவர்களுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுத்து வந்தது.

இவ்வாறு நாற்பது நாட்கள் ஓடியது. நபி யூனுஸ் அவர்களுக்கு இப்போது சிறிது தெம்பு ஏற்பட்டது. தலைமுடியும், தாடியும் முன்போல் வளர ஆரம்பித்தன. அந்தச் சுரைக்கொடியின் நிழலில் தங்கி வந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் படுத்து உறங்கிவிட்டு எழுந்து பார்த்தபோது, அவர்களுக்கு நிழல் தந்த சுரைக்கொடி காய்ந்து அதன் இலைகளெல்லாம் கீழே கொட்டிக் கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டு கவலை அடைந்தார்கள்.

அப்போது அல்லாஹூதஆலா அவருக்கு இறைச்செய்தி அனுப்பினான். ‘ஒரு கொடி சாய்ந்துவிட்டதற்காக நீங்கள் எவ்வளவு மனவேதனைப்படுகின்றீரே! அதனை உங்கள் முயற்சியால் முளைபிக்கவுமில்லை; அதனை நீங்கள் வளர்க்கவுமில்லை. ஆனால், நான் படைத்து பரிபாலித்து வந்த ஓர் லட்ச நைனுவா நகர மக்களை அழிந்துபோக சாபமிட்டு ஓடி வந்துவிட்டீரே! அவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தீரா!’ என அல்லாஹ் கூறினான்.

பின் நபி யூனுஸ் (அலை) அவர்கள் தன்னுடைய தவறை நினைத்து மனமுறுகி நின்றார்கள்.

சுரைக்கொடி காய்ந்து வாடிப்போயிற்று; அவர்களுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுத்து வந்த அந்த ஆடும் தன் வருகையை நிறுத்திக் கொண்டது.

இதனால் நபி யூனுஸ் (அலை) அவர்களுக்கு கடுமையான பசியும் தாகமும் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ், நைனுவா நகருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு நற்போதனைகள் புரியுமாறு கட்டளையிட்டான். எனவே, நைனுவா நகரை நோக்கி நபி யூனுஸ் (அலை) அவர்கள் நடக்கலானார்கள்.

நபி யூனுஸ் அவர்களின் மனைவியை கடத்திச் சென்ற ஒரு சிற்றரசன், அப்பெண்ணின் பக்கம் நெருங்க முடியாது போகவே, ஒரு சிற்றூரில் விட்டுவிட்டு சென்றுவிட்டான். இப்போது நைனுவா நகருக்குச் செல்லும் வழியில் நபி யூனுஸ் (அலை) அவர்கள் அந்த சிற்றூரில் தங்களின் மனைவியைக் கண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு மனைவியை தம்மோடு அழைத்துக்கொண்டு மேற்கொண்டு நடக்கலானார்கள்.

மேலும், வழியில் செல்லும்போது ஓநாய் கவ்விச் சென்ற தங்களின் மூத்த மகன் ஓரிடத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்து தங்கள் மூத்த மகனையும் தம்மோடு சேர்த்துக்கொண்டார்கள்.

மூவருமாக சிறிது தூரம் வந்து கொண்டிருந்தபோது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைய மகனையும் சந்தித்து அவரையும் தம்மோடு சேர்த்துக் கொண்டு நைனுவா நகரை நோக்கி நடக்கலானார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தாம் நைனுவா நகரை நோக்கி மறுபடியும் திரும்ப வந்த காரணமே, இழந்துவிட்ட தம் மனைவியையும், இரு மக்களையும் திரும்ப கிடைக்கச் செய்து ஒன்று சேர்ந்தோம் என்று எண்ணி நபி யூனுஸ் (அலை) அவர்கள் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஆனால், நைனுவா நகர மக்கள் மீண்டும் தம்மை சேர்த்துக்கொண்டு ஆதரவளிப்பார்களா? என்ற கவலை அவர்களுக்கு மிகுதமாக ஏற்பட்டது. ஏனெனில், அவர்கள் விக்கிரக ஆராதனையை விட்டு விலகி நேர்வழி பெற்றார்கள் என்பதை நபி யூனுஸ் (அலை) அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகையால், மீண்டும் துன்பம் ஏற்படத் தொடங்குமோ? என்ற அச்சம் அவர்களுக்கு மிகுதியாக இருந்தது.

நைனுவா நகரை நெருங்கியதும் நபி யூனுஸ் (அலை) அவர்கள் அங்கிருந்த ஒரு இடையனிடம், ‘நைனுவா மக்களின் நிலை என்ன?’ என்று வினவினார்கள்.

அதற்கு அந்த இடையன், ‘நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ எனக் கேட்டான். ‘நான் யூனுஸ் என்பவராவேன். இந்த நைனுவா நகரைச் சேர்ந்தவன்தான். இவ்வூர் மக்களை விக்கிரக ஆராதனையை விட்டுவிட்டு ஓரிறைக் கொள்கையின்பால் அழைத்தேன். ஆனால், அவர்கள் செவி சாய்க்காமல் என்னைப் பகைத்து துன்புறுத்தினார்கள். ஆகையால், அவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்துவிட்டு இவ்வூரை விட்டு வெளியேறிவிட்டு இப்போதுதான் மீண்டும் திரும்புகிறேன்’ என்று பதில் கூறினார்கள்.

இதனைக் கேட்டவுடன் அந்த இடையன் வேகமாக ஊருக்குள் ஓட ஆரம்பித்தான். ஒன்றும் புரியாதவாறு நபி யூனுஸ் (அலை) அவர்கள் ஊருக்குள் செல்ல ஆரம்பித்தார்கள். ஊரை நெருங்கியதும், அங்கு அவர்கள் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. அரசனும், மக்களும் ஆரவாரமாக ஒன்று சேர்ந்து வந்து நபி யூனுஸ் (அலை) அவர்களை நோக்கி வந்தனர்.

நபி யூனுஸ் (அலை) அவர்களை நெருங்கியதும் அரசன், ‘நபியவர்களே! எங்கே சென்று விட்டீர்கள். தங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் அனைவரும் அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டு விட்டோம். அல்லாஹ்வுக்காக என்னையும், என் ஊர் மக்களையும் தாங்கள் மன்னித்து அல்லாஹ்விடம் தங்களுக்காக பிரார்த்தனை புரியுமாறும், தங்களோடு இருந்து நேர்வழி காட்டுமாறும்’ தெரிவித்தார்.

இதனைக் கேட்ட நபி யூனுஸ் (அலை) அவர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். நைனுவா நகரில் நபி யூனுஸ் (அலை) அவர்கள் அம்மக்களை நேர்வழிப்படுத்தினார்கள். இவ்வாறு இறைத்தூதர்கள் சோதிக்கப்பட்டதைக் குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பது நம் அனைவரும் படிப்பினை அடைந்து கொள்ளவே!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version