இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

தகுதியற்றவர்களும், பொருத்தமற்றவர்களும் உயர் பதவிகளிலே அமர்த்தப்படுகின்றார்கள் என்றால் அந்தச் சமுதாயம் சீரழியப் போகிறது என்று பொருள்.

உலக முடிவு நாளின்போது இதுபோன்ற தகுதியற்றவர்களை பெரிய பொறுப்புகளில் நியமிக்கின்ற விபரீதங்கள் வெளிப்படையாக நடக்கும் என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்கு.

ஒரு மனிதர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதர்(ஸல்) அவர்களே! கியாமத் (இறுதிநாள்) எப்போது வரும்?’ என்று கேட்டார். அதற்கு, நபியவர்கள், ‘பொறுப்புகளைத் தகுதியற்றவர்களின் கைகளில் ஒப்படைக்கும் காலம் தோன்றியதும் இறுதி நாளை எதிர்பாருங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

— புகாரி

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மகன் இருந்தும், அடுத்த கலீஃபாவாக உமர்(ரலி) அவர்களை நியமித்தார்கள். அதுபோல், அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்கு மகன் இருந்தும், சூரா ஜமாத் ஏற்படுத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என உமர் (ரலி) அவர்கள் மக்களின் முடிவுக்கே விட்டுவிட்டார்கள்.

அஜ்மீர் காஜா முயீனுத்தீன் (ரஹ்) அவர்களுக்கு, காஜா பக்ருதீன் (ரஹ்) என்ற இறைநேசர் மகனாக இருந்தும், காஜா குத்புதீன் பக்தியார் காகி (ரஹ்) அவர்களை தங்களின் பிரதிநிதியாக நியமித்தார்கள். அதுபோல், ஃபரீதுத்தீன் கன்ச் சாகர் (ரஹ்) அவர்களுக்கு, நிஜாமுத்தீன் என்ற ஒரு இறைநேசர் மகனாக இருந்தும், தில்லி மெஹ்பூபே இலாஹி நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) அவர்களையே தங்கள் பிரதிநிதியாக நியமித்தார்கள்.

ஆனால், இக்காலத்தில் நாட்டின் உயர் பதவிகளில் ஆரம்பித்து, தீனில் வழிகாட்டியாக இருக்கும் ஷைகுமார்கள் வரை தங்கள் மகனையே தங்களுக்குப் பிறகு பதவிக்கு வாரிசாக ஆக்கி விடுகிறார்கள். இங்கே தகுதி பார்ப்பதைவிட உறவு முறை பார்ப்பதையே அளவுகோலாக வைத்திருக்கிறோம்.

ஒருவர் உயர்ந்த கல்விகளைக் கற்றிருக்கின்றார், சிறந்த அனுபவங்களைப் பெற்றிருக்கின்றார் என்பது மட்டுமே அவரை எல்லாப் பதவிகளுக்கும் தகுதியுடையவர் ஆகிவிடாது.

சுமையான பொறுப்புகளைச் சுமப்பதற்கு உரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பொறுப்புக்களையும், பதவிகளையும், அதிகாரங்களையும் யாரால் முறையாகவும், கண்ணியமாகவும் நிறைவேற்ற முடியுமோ அவர்களிடமே ஒப்படைத்திட வேண்டும்.

லஞ்சம் வாங்கிக்கொண்டோ, வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டோ, உறவு முறைக்காக பொறுப்புக்கள் தகுதியற்றவர்களின் கரங்களிலே ஒப்படைக்கப் படுமேயானால் விபரீதமே விளையும்.

பதவிகளில், பொறுப்புகளில் தகுதியற்றவர்களை நியமிக்கின்ற போது, தகுதியானவர்களை விட்டு விடுகின்றோம் என்றே பொருள்.

தகுதியான, திறமையான ஒரு மனிதன் இருந்து, அவரைப் புறக்கணித்துவிட்டு, தகுதியற்ற ஒரு மனிதனை நியமிப்பவர், அல்லாஹ், அவனது தூதர், இன்னும் முஸ்லிம்கள் என அத்தனை பேருக்கும் துரோகம் இழைத்துவிட்டார் என்றே பொருள் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

— ஹாக்கிம்

நபித்தோழர் யஜீத் பின் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அமீருல் முஃமினீன் அபூபக்ர்(ரலி) அவர்கள், என்னை சிரியாவிற்கு கவர்னராக அனுப்பியபோது, எனக்கு இப்படி உபதேசித்தார்கள்:

யஜீத் அவர்களே! உங்களுக்கு ஏராளமான உறவினர்கள் உண்டு. நீங்கள் அவர்களின் சிபாரிசுக்குத் தலைசாய்த்திடும் வாய்ப்புகளும் நிரம்ப இருக்கின்றன. முக்கியமான பதவிகளுக்கு ஆட்களை நியமித்திடும்போது மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் நம்மையெல்லாம் எச்சரித்ததினால் நான் மிகவும் அச்சப்படுகிறேன். நபி(ஸல்) அவர்கள் நம்மையெல்லாம் எப்படி எச்சரித்தார்கள் என்றால் முஸ்லிம்களின் விவகாரம் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பவர், தன்னுடைய உறவினர்களில் செல்வாக்கால் உந்தப்பட்டு தகுதியற்றவரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பாரேயானால், அல்லாஹ்வின் சாபம் அவர் மீது உண்டாகும். அவருடைய நற்பண்புகளும், நியாயங்களும் அல்லாஹ்வின் முன் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது எந்த அளவிற்குப் போய்விடும் என்றால், அவர் நரகத்தில் எறியப்படும் அளவிற்குப் போய்விடும்.

— ஹாக்கிம்

ஆகவே, பொதுமக்களை நிர்வகிக்கின்ற பொறுப்பினை ஏற்பவர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். நியமனங்களைச் செய்வதில் உற்றார் உறவினர்களுக்காக, நண்பர் என பாரபட்சம் காட்டி விடுவாரேயானால் அவர் மறுமையில் நற்பலனை இழந்துவிடுவார்.

ஒருவரை ஒரு பதவியில் அமர்த்துகிறோம் என்றால், அந்தப் பதவியின் எல்லா அதிகாரங்களையும் அந்த மனிதனை நம்பி ஒப்படைக்கிறோம். இந்த அதிகாரத்தை அவர் தன் புகழைப் பரப்பிக் கொள்ளவோ, தன்னுடைய உற்றார் உறவினர், நண்பர் பலன் பெற வேண்டும் என்பதற்காக பயன்படுத்திடக் கூடாது.

அதேபோல், பொதுமக்களின் பணத்தை அதிகாரத்தில் அமர்த்தப் பட்டிருப்பவர்கள் தங்களின் சொந்த நன்மைக்காகப் பயன்படுத்துவதும் தண்டனைக்கு உரிய குற்றம்.

அல்லாஹ் குர்ஆனில்,

ومَا كَانَ لِنَبِي أَنْ يَغْلَ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَ يَوْمَ الْقِيمَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

எவரேனும் மோசம் செய்தால், அவர் அந்த மோசம் செய்த பொருளையும், மறுமைநாளில் (தம்முடன்) கொண்டு வர வேண்டியதிருக்கும். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்த செயலுக்குரிய (பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது.

— சூரா ஆல இம்ரான் : 161

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version