இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஹஜ்ரத் வாகிதீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

எனக்கு இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் ஹாஷிமி வம்சத்தவர்; மற்றவர் ஹாஷிமி அல்லாதவர். எங்கள் மூவருக்கு மத்தியில் நெருக்கமான நட்பு இருந்தது.

ஒருமுறை ஈதுப்பெருநாள் நெருங்கும் நேரத்தில் எனக்குக் கடுமையான வறுமை ஏற்பட்டது. அப்போது என் மனைவி, ‘ஈதுப்பெருநாள் நெருங்கிவிட்டது. நம் பிள்ளைகளுக்கு புத்தாடை எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். ஏனைய பிற குழந்தைகள் உயர்ந்த ரக உடைகளையும் சாமான்களையும் ஈதுக்காக வாங்கி மகிழ்கின்ற வேளையில், நம்பிள்ளைகளோ பழைய துணிகளை அணிந்திருக்கின்றனர். தாங்கள் எங்கிருந்தாவது ஏதாவது கொண்டுவர முடிந்தால், கொண்டு வாருங்கள். நம்குழந்தைகள் புத்தாடைக்காக ஏங்குவதைப் பார்த்து, எனக்கு மிகவும் சஞ்சலம் ஏற்படுகிறது’ என்று கூறினார்.

மனைவியின் இப்பேச்சைக் கேட்ட நான் ஹாஷிமி நண்பருக்கு என் வறுமை நிலைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன்.

உடனே அவர் பணமுடிப்பின் மீது முத்திரை பதித்த ஒரு பையை அனுப்பி, ‘இதில் ஓராயிரம் திர்ஹம் இருக்கின்றன. உமது தேவைக்கு செலவழித்துக் கொள்ளவும்’ என பதில் எழுதியிருந்தார்.

அப்பணப்பை என் கைக்கு வந்த நிலையில், என் இரண்டாவது நண்பரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதில் நான் ஹாஷிமி நண்பருக்கு எழுதியது போன்றே, அவரும் எனக்கு, அவருடைய பணத்தேவையைக் குறித்து எழுதியிருந்தார்.

என் கையிலிருந்த பணப்பையை அதே முத்திரையுடன் அப்படியே அவருக்கு அனுப்பிவிட்டேன்.

மனைவியிடம் சொல்ல வெட்கப்பட்டவனாக, வீட்டிற்கு செல்லவும் தைரியமற்று நான் பள்ளிக்குச் சென்றுவிட்டேன். இரண்டு நாள் இரவு பகல் பள்ளியிலேயே இருந்தேன். மூன்றாம் நாள் வீட்டிற்குச் சென்றேன். நடந்ததை மனைவியிடம் கூறினேன்.

செய்தியைக் கேட்டு அந்த நல்லாளுக்கு கொஞ்சமும் வருத்தம் உண்டாகவில்லை. மாறாக, என்னுடைய இச்செயலை விரும்பி, ‘நீங்கள் செய்தது மிகவும் நல்லதே!’ என்று என் மனைவி கூறினார்.

நான் இவ்வாறாக பேசிக் கொண்டிருக்கையில் என்னுடைய ஹாஷிமி நண்பர், நான் இரண்டாம் நண்பருக்கு அனுப்பி வைத்த பண முடிப்பை முத்திரையிடப்பட்ட அதே பையை கையில் எடுத்துக்கொண்டு என்னைத் தேடி வந்துவிட்டார்.

என்னிடம், ‘இந்தப் பையின் கதையென்ன? உண்மையைக் கூறிவிடும்’ என்று விசாரிக்கலானார். நான் நடந்ததைச் சொன்னேன்.

அதற்குப் பிறகு என் ஹாஷிமி நண்பர், ‘எப்பொழுது உம்முடைய கடிதம் என்னிடம் வந்ததோ, அப்போது இந்தப் பணமுடிப்பைத் தவிர வேறு எப்பொருளும் என்னிடம் இருக்கவில்லை. இதை உமக்கு அனுப்பிவிட்ட பிறகு நம்முடைய மூன்றாம் நண்பருக்கு எனக்குண்டான தேவையைக் குறித்துக் கடிதம் எழுதினேன். அவர் பதிலுக்கு இதே பையை என்னிடம் அனுப்பி வைத்தார். இதைப் பார்த்து எனக்கு பேராச்சரியம் உண்டாயிற்று. இதை நான் உமக்கல்லவா அனுப்பி வைத்தேன். மூன்றாம் நண்பரிடம் இதெப்படிப் போய் சேர்ந்தது? இதை விசாரித்து அறியத்தான் நான் வந்தேன்’ என்று கூறினார்.

வாகிதீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நாங்கள் அப்பையிலிருந்து நூறு திர்ஹம்களை என் மனைவிக்குக் கொடுத்துவிட்டு, மீதி தொள்ளாயிரம் திர்ஹம்களை நாங்கள் மூவரும் பகிர்ந்து கொண்டோம்.

இச்சம்பவம் கலீஃபா மாமூன் ரஷீதுக்கும் எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் என்னை அழைத்து முழு விபரங்களையும் கேட்டார். அதற்குப் பிறகு மாமூன் ரஷீத் ஏழாயிரம் திர்ஹம் எங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை இரண்டாயிரம் இரண்டாயிரமாக நாங்கள் மூவரும், ஓராயிரத்தை என் மனைவிக்குமாகப் பகிர்ந்து கொண்டோம்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version